Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

ஆசிரியர் பதில்கள்

 

‘நீட்’ தேர்வு சார்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்ற முடிவுகள் வேதனை அளிக்கிறது!

 

y17.jpg - 88.25 KB 

 

கே:                 தங்களின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இராமாயண ஆய்வுரை மற்றும் தஞ்சையில் நிகழ்த்திய திருக்குறள் ஆய்வுரை இரண்டையும் “காணொளி குறுந்தகடு’’களாக வெளியிடுவீர்களா?

                        - கு.பழநி, சென்னை -81

ப:                     நல்ல யோசனை. வாசகர் ஆணையை தலைமைக் கழகம் _ வெளியீட்டகம் நிறைவேற்றும். நன்றி!

கே:                 சேது சமுத்திர திட்டத்தை “இராமன் பாலம் உள்ளது’’ என சுப்ரீம் கோர்ட் சென்று - தடை வாங்கி மாற்றுப் பாதையில் செயல்படுத்தலாம் எனத் தீர்ப்பு பெற்று, தமிழகத்தின் வளர்ச்சியை நாசமாக்கிய ஆளும் அ.தி.மு.க.வினர், சேலம் 8 வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப் பாதையில் நிறைவேற்ற முன்வராதது ஏன்?

                        - வ.க.கருப்பையா, பஞ்சப்பட்டி

ப:                     ‘அம்மா, அம்மா’ என்று இன்னமும் கூறுவதைத் தவிர, மற்றவைகளை விட்டுவிட்டார்கள். இந்த சேதுசமுத்திரத் திட்டம் முன்பு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒரு செயல்திட்டம் என்பதைக்கூட ‘ஏனோ வசதியாக மறந்துவிட்டு, லாபம் வரக்கூடிய’ பசுமைச் சாலை திட்டத்தைத் தேடுகிறார்கள் போலும்!

கே:                 அய்யர், அய்யங்கார் இருவருமே “பிராமணாள்’’ என்றால் பிறகு ஏன் அவர்களிடையே கொள்வன கொடுப்பன இல்லை?

                        - கோ.கலியபெருமாள், மன்னார்குடி

ப:                     அதுதான் வேடிக்கை அதற்குள்ளே பல பிரிவுகள்கூட உண்டே! அய்யங்காரில் வடகலை, தென்கலை என்று எத்தனையோ பிரிவு _ ஹி_க்கும், க்ஷி_க்கும் சண்டை கோயில் யானையின் நெற்றி வரை சென்றுள்ளபோது, பிரிவு இல்லாமல் முடியுமா? இதுதான் அர்த்தமுள்ள ஹிந்துமதம்! நடக்க முடியாதவனுக்கு, ‘தாண்டவராயன்’ என்ற பெயர் இருப்பதுபோல!

கே:                 ‘இந்தியாவில் இருப்பதால் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை’ என்கிறாரே பிரதமர் மோடி. ‘இந்துத்வா’ மோடி ஆட்சியின் பயன் இதுதானா?

                        - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:                     அதற்குப் பொருள் புரியவில்லை நம்மைப் போன்ற ‘ஞானமில்லாதவர்களுக்கு’. இப்போதுதான் புரிகிறது. இதுவரை சுமார் 1500 கோடி செலவழிக்கப்பட்ட பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் இவரது ‘நல்ல தூக்கத்திற்காக செலவழிக்கப்பட்ட தொகை’ என்பது! மக்கள் வரிப் பணம் மூலம் இவருக்குத் தூக்கம்; ஏழைகளுக்கு ஏக்கம்!

கே:                 ‘நீட்’ தேர்வில் கேள்வித் தாளில் பிழைகள் இருந்ததை சுட்டிக்காட்டி மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியதை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து கருத்து கேட்டிருப்பது கடமை தவறிய செயல் அல்லவா? தப்புக்கு பரிகாரம் காணாமல் சமரசம் பேசுவது நீதிமன்றத்தின் வேலையா?

                        - தீ.காவேரி, சேலம்

ப:                     ‘நீட்’ தேர்வில் உயர்நீதிமன்றங்கள் எப்போதும், நியாயத்தின்பால் நிற்பதும், உச்சநீதிமன்றம் அதை உடைப்பதுமான உயர்ஜாதிக்கு ஆதரவான ‘கண்ணாமூச்சு’ கடந்த 2 ஆண்டுகளாகவே தொடருவது வேதனை _ வெட்கம்!

கே:                 ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த தி.மு.க.வுக்கு போலீசார் அனுமதி மறுப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததா?

                        - கி.மாசிலாமணி, மதுராந்தகம்

ப:                     ஆளுநர் மாளிகையிலிருந்து மிரட்டல் அறிவிப்புகள் _ அறிக்கைகள் வருவது ஜனநாயகப் படுகொலையாகும்! இப்போது தமிழ்நாட்டில் நடைபெறுவது ஆளுநர் ஆட்சி அல்லவே!

கே:                 ‘கோயில்கள் விபச்சார விடுதி’ என்று காந்தியார் கூறியபோது எழாத எதிர்ப்புகள், பெரியார் கடவுளை மறுத்து ஆதாரத்துடன் பேசியபோது எதிர்ப்புக் குரல்களும், கண்டனங்களும் எழுந்தது ஏன்?

                        - வே.கார்த்திக், விழுப்புரம்

ப:                     அப்போது சிற்சில பார்ப்பனர் எதிர்த்தனர். காந்தியார் அவாளை அப்போது ஆதரித்ததால், தங்களுக்கு குடையாக இருந்தவரை எதிர்த்திட வேகமாகக் கிளம்பவில்லை. லேசாக எதிர்த்து பிறகு நிறுத்திக் கொண்டனர். (ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூல்)

கே:                 குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் பவளவிழா மாநில மாநாடு இன எதிரிகளை மிரள வைத்துள்ளது கழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! இந்த உணர்வை வளர்த்து சாதிக்க திட்டங்களை அறிவிப்பீர்களா?

                        - இல.சங்கத்தமிழன், செங்கை

ப:                     ஆங்காங்கு திராவிட மாணவர் கழக அமைப்புகள் வெகுவேகமாக அமைக்கப்படும் பணி முடிந்ததும், மேலும் பல ஆக்கரீதியான பணிகளும் திட்டங்களும் தொடரும்!

கே:                 ‘‘சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் இந்தியர்களின் முதலீடு’’ என்று மத்திய நிதி அமைச்சர் கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

                        - அய்ன்ஸ்ட்டின் விஜய், ஆவடி

ப:                     பாராக்காரன் திருடனுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த கதை அல்லது ஜாமீன் கொடுத்ததுபோல!

கே:                 தொடங்கப்படாத நிறுவனங்களை சிறந்த நிறுவனகளாக அறிவித்து மானியமும் கொடுப்பது எதைக் காட்டுகிறது?

                         - க.கருணாமூர்த்தி, முடப்பள்ளி விருத்தாசலம்

ப:                     பெருமுதலாளிகளான அம்பானி, அடானிகளிடம் மோடி ஆட்சிக்குள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது!

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit       ஆசிரியர்  பதில்கள் in FaceBook Submit       ஆசிரியர்  பதில்கள் in Google Bookmarks Submit       ஆசிரியர்  பதில்கள் in Twitter Submit       ஆசிரியர்  பதில்கள் in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.