Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

டாக்டர் அம்பேத்கர்


அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் - 14
(ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்)

தந்தை பெரியார்

“தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு; இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லிம் ஆகவேண்டும்; நானும் முஸ்லிம் ஆகப்போகிறேன்’ என்று அவர் சொன்னார். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதைக் கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே, உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள்.

அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், ‘நீங்கள் ஒண்டியாகப் (தனியாகப்) போகக்கூடாது; குறைந்தது ஒரு இலட்சம் பேரோடு மதம் மாறவேண்டும்; அப்போதுதான் முஸ்லிமும் மதிப்பான். இல்லாவிட்டால், தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்கமாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முஸ்லிம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவுபற்றி நீங்கள் பேசினால், ‘முஸ்லிம் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதா?’ என்பதாகக் கிளப்பிவிடுவார்கள். ஆகையால், ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும்போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்கள் தருகிறேன்’ என்பதாகத் தந்தி கொடுத்தேன்.

அதற்கப்புறந்தானே _ பயந்துகொண்டு, ஆதித் திராவிட மக்களுக்கு காங்கிரஸ்காரர்களும் ஏதோ நன்மை செய்வதாக வந்தார்கள்! ‘மதம் மாறுவேன்’ என்ற மிரட்டிய தோழர் அம்பேத்கர் அவர்கள் ஆதித் திராவிட மக்களுக்குப் பெரும் அளவுக்கு நன்மை செய்து கொடுத்திருக்கிறார். உள்ளபடி சொல்லுகிறேன், இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால், அது தோழர் ஜின்னா அவர்களிடமும், தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான். தோழர் ஜின்னாவிட மிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள்; ஆனால், அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெறமுடியவில்லை; அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார்.

இன்னும், தோழர் அம்பேத்கர் அவர்களின் தைரியத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இலண்டனில் காந்தியார், ‘நான் இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று  சொன்னபோது, ‘நீங்கள் எங்கள் இனத்தின் பிரதிநிதியல்ல’ என்று அம்பேத்கர் அவர்கள் சொன்னார். காந்தியார் திரும்பவும், ‘இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று சொன்னவுடன், அம்பேத்கர் அவர்கள், ‘பத்துத் தடவை சொல்லுகிறேன், நீங்கள் எங்கள் பிரதிநிதி அல்ல என்று; திரும்பத் திரும்ப வெட்கமில்லாமல் பிரதிநிதி என்று சொல்லுகிறீர்கள்; நீங்கள் உங்களுடைய மகாத்மா பட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்’ என்பதாகச் சொன்னார். காந்தியார் பேசாமல் உட்கார்ந்துவிட்டார். பின்பு, இந்நாட்டுப் பத்திரிகைகள் அம்பேத்கரைக் கண்டபடி தாக்கின. ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அவருடைய தைரியத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்லுகிறேன். அவர் மந்திரியாக இருக்கும்போது ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘கீதை_முட்டாள்களின் பிதற்றல்’ என்று சொன்னார். கீதைக்கு இந்த நாட்டில் எவ்வளவு விளம்பரம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காந்தியாரிலிருந்து, ஆச்சாரியாரிலிருந்து _ பெரிய பெரிய அய்க்கோர்ட் ஜட்ஜுகள், இன்னும் பெரிய மனிதர்கள் என்பவர்களெல்லாம் கீதையைப் புகழ்வதே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல; கீதைக்கு வியாக்கியானம் கூறுவது, கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்பது ஒரு மதிப்பு, கவுரவம் என்பதாக இந்த நாட்டில் இருக்கிறது.  அப்படிப்பட்ட பெரும் விளம்பரமான நிலையிலிருக்கிற கீதையை, ‘முட்டாள்களின் பிதற்றல்’ என்று அம்பேத்கர் சொன்னார். முட்டாள்களுடையது என்றாலே மோசம்; அதிலும் அந்த முட்டாள்களுடைய பிதற்றல் என்று கீதையை மிகவும் இழிவுபடுத்திக் கூறினார். யார் யாரை இதுபோய்ப் பாதிக்கிறது பாருங்கள்! அவர் அந்தப்படி பேசியபின் பார்ப்பனப் பத்திரிகைகள் அவருடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ‘ஒரு மந்திரியாய் இருப்பவர் இப்படியெல்லாம் பேசலாமா?’ என்று எழுதின. அவ்வளவுதான் அவைகளால் முடியுமே தவிர, அவர் சொல்லுவதை எப்படி எந்த ஆதாரத்தின்மீது மறுக்க முடியும்?
- - ‘விடுதலை’, 16.05.1952



செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit டாக்டர் அம்பேத்கர் in FaceBook Submit டாக்டர் அம்பேத்கர் in Google Bookmarks Submit டாக்டர் அம்பேத்கர் in Twitter Submit டாக்டர் அம்பேத்கர் in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.