Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

தமிழ் உயர்வு பெற தந்தை பெரியாரின் பணிகள்!

எத்தர்களை

முறியடிக்கும் எதிர்வினை (8)

தமிழ் உயர்வு பெற

தந்தை பெரியாரின் பணிகள்!

 இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு, இவ்வளவு துணிவாக அவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின் தைரியம் இன்மையே காரணம். ஓரிரு எதிர்ப்புகள் இருப்பினும் அது போதிய அளவு இல்லை. படித்த தமிழர்கள்கூட ஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்குமீன்போல் இரு பக்கமும் நடிக்கின்றனர்.

தங்கள் தாய்நாட்டிற்கும், தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள் எவராயினும் அவர்களை வீழ்த்த, விரட்டியடிக்க முன்வர வேண்டும். எவர் பாராட்டுக்கும், புகழ் மொழிக்கும் இச்சை வைக்காமல் உழைத்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

1.            தமிழ்ப் பாட்டுக்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இருக்க வேண்டும். 100க்கு 99 வடமொழி வார்த்தைகள் கலந்ததாக இருக்கக் கூடாது.

2.            புராண மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களாக இருக்கக் கூடாது.

3.            நல்ல தமிழில், இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும், சமத்துவத்தையும், மானத்தையும், நேர்மை, நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும், ஒற்றுமையையும், வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

4.            வாழ்வியல் கேடுகளை அகற்றி, அறிவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவற்றைச் செய்ய தமிழர்கள் துணிவு கொள்ளாதவரை, தமிழ்நாட்டுச் செல்வர்கள் இதற்குத் தொண்டாற்ற முன்வராத வரையில் நம் முயற்சி வெற்றி பெறாது.

தமிழர்கள் இனியேனும் உணர்வு பெற்று, உற்சாகமடைந்து, துணிவு கொண்டு, தங்கள் மொழியையும், நாட்டையும் நயவஞ்சகர்களிடமிருந்து காக்க வேண்டும். தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.             (25.12.1943 - குடிஅரசு - தலையங்கம்)

இப்படியெல்லாம் பெரியார் தமிழுக்கும் தமிழர்க்கும் நாள் தவறாது ஓயாது உழைத்ததால்தான், அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவை இலக்கிய மன்றத்தார் அவருக்கு சிறந்ததொரு பாராட்டு மடல் வரவேற்பிதழாக அளித்தனர்.

“தமிழகத்தின் தனிப் பெருந் தலைவர், பெருந்தகை, பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை, தமிழ் இலக்கிய மன்றத்தார் ஆகியோர் இன்புடன் படித்து அன்புடன் அளித்த,

வரவேற்பிதழ்

தமிழ்நாடு தந்த தக்கோய்!

வருக! வருக!

தங்கள் வரவு நல்வரவாகும்!

வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணி உடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது. உழைத்திடும் உண்மைத் தலைவர் வருக! முன்னோர் மொழி பொருளேயன்றியவர் நிலையும் பொன்னே போற்றுவோம் போற்றுவோம் என்றெண்ணிப் புரிந்து வரும் செயல்களே, கீழ்நாட்டைக் கீழ்நாடாக்கிற்று என்ற உண்மையை உணர்த்திய உணர்வின் வடிவோய் வருக! தமிழரின் மேன்மையைத் தடுத்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று வஞ்சினக் காஞ்சி கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சியைக் குலைப்பதற்குத் தறுகனோடு புகுத்தப்பட்ட இந்தியைத் தடுத்து நிறுத்திய செயற்கறிய செய்த செம்மலே வருக! அவரவர் தம் நாகரிகத்தை அளந்து காட்டவல்லது அவரவர் தம் பொருளறி இசையே எனப் புகன்று தனித் தமிழிசையே தமிழ்நாட்டிற்குத் தக்கதென்று அன்று முதல் புகன்று வரும் தமிழர் தலைவரே வருக! வருக!

அறிவுத்துறை வல்ல அண்ணலே! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து மாணவ மாணவிகளாகிய யாங்கள் அளப்பிலா உவகை கொள்கிறோம். (எங்களுக்கு முன்னும் பின்னும் பயில்வோருக்கு தங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை)......................

திராவிட நாட்டுச் சீர்சால் கிழவ! மனிதன் மனிதனாக வாழ வேண்டும், அதற்கு அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வழங்கிய கருவூலமே வருக! ஆணும் பெண்ணும் அமைப்பால் வேறுபட்டோராயினும் வாழ்வில் ஒன்றுபட்ட உயர்வுடையரே எனும் நம் பொன்மொழி தழைக்க! வேற்றுமையை வளர்த்து வீணர்களை வரவேற்பது, விளக்கமற்ற மதவுரைகளே எனும் நம் விரிவுரை செழிக்க! ஆக்கந்தருவன மக்களின் தொண்டேயாகும் என்று, ஆண்டுகளாக ஆண்மையிழந்த தமிழ்நாட்டிற்கு, அடுக்கடுக்காய்ச் செய்து வரும் அரும்பெரும் பணிகள் வாழ்க! சோர்வைப் போக்கும் சுடரொளி வழங்கும் தோன்றால் வாழ்க! பெருநலம் பயக்கப் புதுநெறி வகுத்த இருபதாம் நூற்றாண்டு பெரியோய் இனிது வாழ்க!

சிதம்பரம்,       அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

07.02.1944                             (குடிஅரசு -26.02.1944)

உலகில் உயர் தகுதி பெற்று அன்றைக்கு விளங்கிய, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையே பெரியாரை தமிழர் தலைவர், தமிழுக்கும், தமிழர்க்கும் தொண்டாற்றி ஏற்றம் பெறச் செய்த ஏந்தல் என்பதிலிருந்து பெரியார் எந்த அளவிற்குத் தமிழுக்குத் தொண்டாற்றினார் என்பதை அறியலாம், தமிழை உயர்த்திப் பிடித்தார் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் உயர்வு பெற, மேன்மை பெற, இவ்வளவு முயன்ற பெரியார்,  தமிழுக்கு இடுக்கண் வரும் போதெல்லாம் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார். தமிழ்மொழி மீது இந்தி ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று எண்ணிய பெரியார் 1926 லே இந்தி மொழியைப் பரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதை எதிர்த்து, தமிழுக்குத் துரோகமும் இந்தி மொழியின் இரகசியமும் என்று சித்திரபுத்திரன் என்ற பெயரில் கட்டுரை எழுதினார் பெரியார்.

இந்திக்குப் பெருந்தொகை செலவிடப்படுவதால் எந்தப்பயனும் இல்லை. 100க்கு 97 பேர் ஆரியப் பார்ப்பனர்களே அதைப் படிக்கின்றனர். எந்தத் தமிழரும் அதைப் படிக்கவில்லை. அப்படியிருக்க தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்திக்குச் செலுத்தும் அக்கறையில் 100 இல் ஒருபங்குகூட செலுத்தவில்லை என்று கடுமையாகச் சாடினார் பெரியார்.

1938இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த சி. இராஜகோபாலாச்சாரியார் கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வந்த போது, அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்றார். பின்பு, 1948ஆம் ஆண்டு மறுபடியும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (ஓ.பி.ஆர்) முதலமைச்சராக இருந்த போது கட்டாய இந்தித் திணிப்பு ஏற்பட்ட போது, தந்தை பெரியார் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டார். 1952, 1953, 1954 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இந்தித் திணிப்பிற்கு எதிராக இரயில் நிலையங்களில் உள்ள பெயர் பதாகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை தார் கொண்டு அழித்துப் போராட்டம் நடத்தினார். 1955ஆம் ஆண்டு கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். உடனே, தமிழக முதலமைச்சராக இருந்த கல்வி வள்ளல் காமராசர் அளித்த உறுதிமொழியின் காரணமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ் நாட்டு மக்கள் விரும்புகிறவரை இந்தி திணிக்கப்படமாட்டாது என்று இந்திய பிரதமர் நேரு அவர்கள் உறுதி அளித்தார். அதன்பேரில் இந்தி திணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழர் இல்லத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மொழியிலும், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல், தமிழ் இசை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை போன்ற பல உரிமைகளைத் தமிழனுக்குப் பெற்றுத் தந்து தமிழுக்கும் பெருமை சேர்த்தவர் தந்தை பெரியார் ஆவார்கள். தமிழன் வீட்டுத் திருமணத்தில், துக்க நிகழ்வுகளில் சமஸ்கிருத மந்திரம் ஒலிப்பதை எதிர்த்த ஒரே ஒருவர் பெரியாரையன்றி வேறு யார்? தமிழ்ப் பற்றில்லாமலா பெரியார் இதற்காகக் காலமெல்லாம் போராடினார்? ‘குடிஅரசு’ ஏட்டில் தமிழுக்காக எழுப்பப்பட்ட உணர்வு பொங்கும் முழக்கங்களை கீழே காணுங்கள்.

(தொடரும்......)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit தமிழ் உயர்வு பெற  தந்தை பெரியாரின் பணிகள்! in FaceBook Submit தமிழ் உயர்வு பெற  தந்தை பெரியாரின் பணிகள்! in Google Bookmarks Submit தமிழ் உயர்வு பெற  தந்தை பெரியாரின் பணிகள்! in Twitter Submit தமிழ் உயர்வு பெற  தந்தை பெரியாரின் பணிகள்! in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.