Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத்தங்கம் ஏ.வி.பி.ஆசைத்தம்பி
Parent Category:
2016
Category:
பிப்ரவரி 16-28
  • Print
  • Email

சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத்தங்கம் ஏ.வி.பி.ஆசைத்தம்பி

தந்தை பெரியார் அவர்களது சீரிய தொண்டரும் பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியும் கலைஞரின் கூட்டுப் பணியாளருமான சுயமரியாதை வீரர் தோழர் ஏ.வி.பி. ஆசைத் தம்பி அவர்கள் இயக்கப் பிரச்சாரப் பணியாற்றச் சென்ற நிலையில் அந்தமான் தீவில் திடீரென்று 07.04.1979 அன்று அகால மரணமடைந்தார்.

இச்செய்தி, கோவை எக்ஸ்பிரஸ் மூலம் கோவை சென்று கொண்டிருந்தபோது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. செய்தி அறிந்தவுடன் சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு பெங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பினேன். அந்தமான் மாநிலம் போர்ட்பிளேர் தமிழ்ச் சங்கத்திலிருந்த அவரது உடலை தனி விமானம் மூலம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்-பட்டது.

மறுநாள் 08.04.1979 அன்று விடுதலையின் முதல் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டோம். அந்த இரங்கல் செய்தியில். “பன்னெடுங்காலமாக அவர் திராவிட இயக்கத்தின் தலை தாழாச் சிங்கக்குட்டியாக, நிலை குலையாத தன்மானப் பெரும் பிழம்பாக இயக்கத்திற்கு சோதனைகள் வந்த காலத்திலும், இலட்சியத்தில் கொஞ்சமும் சளைக்காத கொள்கைக் குன்றாக வாழ்ந்த, அவரா மறைந்து விட்டார்! நம்பமுடியவில்லையே!

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைச் சிறைச்சாலையிலே சந்தித்து விடைபெற்றது நிரந்தரமான விடை என்பதை எண்ணினால் நெஞ்சு வெடிக்கும் போலியிருக்கிறதே’’ என்று குறிப்பிட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

தோழர் ஏ.வி.பி. அவர்கள் திடீரென மறைந்த நிலையில், அச்செய்தி அந்தமான் பகுதி தலைமைச் செயலாளர் அவர்களால் கலைஞருக்கு 07.04.1979 இரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
10_04_1979 வரை விமானப் போக்குவரத்து இல்லாத நிலையில் தனி இராணுவ விமானம் மூலம் கொண்டுவர உதவிடுமாறு கலைஞர் மத்திய அரசுக்கும், சபாநாயகருக்கும் தகவல் அனுப்பி அதற்கான செலவை தமது கட்சி சார்பில் ஏற்பதாகவும் கூறிய நிலையில் மத்திய அரசு இராணுவ விமானம் தர மறுத்துவிட்டது.

பின்னர் முரசொலி மாறன் நேரில் முயன்று உள்துறை அமைச்சர், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்தும் மறுத்துவிட்ட நிலையில் 9ஆம் தேதி விடுதலை தலையங்கம் பகுதியில் கண்டன அறிக்கை ஒன்றை எழுதினேன்.

“இந்த 4லு கோடி தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து மத்திய அரசு யாரும் கோராமலேயே தானே உதவி செய்திட மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அதன் போக்கு மிகுந்த வேதனைக்கும், தமிழ் மக்களின் கண்டனத்திற்கும் தான் உரியதாகியுள்ளது என்பதை இப்போது நாம் காட்டத் தவறினால் உண்மைகளை ஒளித்த குற்றம் செய்தவர்களாக ஆகிவிடுவோம்’’ என்று தெரிவித்துவிட்டு, பல்வேறு காலகட்டங்களில் சட்ட விலக்குடன் இராணுவ விமானங்கள் பயன்படுத்தப் பட்டதை எடுத்துக்காட்டி கடும் கண்டன அறிக்கையாக வெளியிட்டேன்.

மேலும் மத்திய அரசின் போக்கை  தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கண்டித்த நிலையில் அவரது உடல் பின்னர் 10ஆம் தேதி தனி விமானம் மூலமாக கல்கத்தா கொண்டு செல்லப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது. கழகத்தின் சார்பில் கருப்பு ஆடை போர்த்தி மரியாதை செலுத்தினோம்.
கொள்கைகளை சமரசத்திற்காக அவர் விட்டுக் கொடுத்ததேயில்லை! நாடாளு-மன்றத்தில் அவர் தி.மு.க.வின் சார்பில் ஒரே ஒரு பிரதிநிதிதான்! ஆனால், இந்தச் சீழ்பிடித்துப் போன சமுதாயத்துக்கான மருந்தை, தந்தை பெரியாரின் தத்துவத்தை சரியாகப் புரிந்து முழக்கமிட்ட ஒரே உறுப்பினரும் அவர் தான்!

பார்ப்பன சாம்ராஜ்யத்தின் படுபாதகங்களை அவர் பட்டவர்த்தனமாக சிம்மம் போல் எடுத்துரைத்த போது, கட்சி மாறுபாடு இன்றி அனைத்து பார்ப்பனரல்லாத உறுப்பினர்களும் ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்! அதனால் தான் சபாநாயகர் ஹெக்டே அவர்கள் கூட மிகவும் குறிப்பிடத்தக்க சமுதாய சீர்த்திருத்த வாதி என்று தனது இரங்கல் உரையில் மிகச் சரியாகக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மறைவையொட்டி அரைக் கம்பத்தில் கட்டப்பட்ட தி.க, தி.மு.க கொடிகளை தோழர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் ஏந்திச் செல்ல, நுங்கம்பாக்கத்தில் ரயில்வேக்கு அருகிலுள்ள இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு அவர் மூத்த மகன் காந்திராஜன் தீவைத்தார்.

பெரியார் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை
நிறுவனத்துக்கே உண்டு!  தியாகராசன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் மறைவால் மீளாத்துயரில் நாம் இருந்த சூழலில், 11.04.1980 அன்று மணியம்மையாரின் இளையதம்பி தியாகராசன் பெரியார் திடலில் பிரச்சினையை உருவாக்கினார்.

பெரியார் திடலில் ஒலிபெருக்கி அமைப்புப் பணி செய்து வந்தவர் தியாகராசன். அவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததினால் அவரை மாற்றி அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கத் தீர்மானித்து மேற்படி தியாகராசனைக் கூப்பிட்டு கணக்குகளை ஒப்படைக்கும்படியும்,  அவருடைய இருப்பிடத்தை விரைவில் காலி செய்யும்படியும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் கணக்குகளை ஒப்படைத்து அவரிடம் உள்ள பணத்தை அடுத்த நாள் பகலில் தருவதாகக் கூறி, இருப்பிடத்தை சீக்கிரமே காலி செய்வதாகவும் கமிட்டி முன்னிலையில் ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார்.

11.04.1980 அன்று மாலை சுமார் 7 மணியளவில் டிரஸ்ட் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மேற்படி தியாகராசனின் இருப்பிடத்தில் இருந்து சுமார் 25 வயதுள்ள பையன், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்கு அருகில் வந்து, வீரமணி எங்கே என்று கேட்டான். அலுவலகப் பணியாளர் திரு.ராதா என்பவர் உட்காருங்கள், உள்ளே கூட்டம் நடைபெறுகிறதெனக் கூறவும் உள்ளே எட்டிப் பார்த்து, இந்தப் பக்கம் உள்ளவர் வீரமணியா? அந்தந்தப் பக்கம் உட்கார்ந்திருப்பவரா? எனக் கேட்க; மேற்படி ‘ராதா, நீங்கள் உட்காருங்கள் அவர் வருவார்’ எனக்கூற மேற்படி நபர் என்னப்பா ஆளைக்கூடப் பார்க்கக் கூடாதா? எனக் கூறிவிட்டு மேற்படி தியாகராசனின் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டார்.

டிரஸ்ட் மீட்டிங் நடைபெற்றபோது, சுமார் 8 மணி அளவில் நான், டாக்டர் கே.ராமசந்திரா அவர்களைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தேன். அப்போது தியாகராசன் அவர்கள் மகன் சித்தார்த்தன் அவருடன் சுமார் 10 பேர் சகிதம், இரண்டு மோட்டார் பைக், ஒரு ஸ்கூட்டர், ஒரு அய்வரி கலர் அம்பாசிடர் கார் (கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜில் உள்ள டாக்டர் சம்பந்தம் அவர்கள் கார்) இவற்றில் வந்து இறங்கினார்கள். டாக்டர் சம்பந்தம் அவர்கள் மகள் கோமதி ஓடிப்போய் சித்தார்த்தனிடம் ஏதோ கூறினார். அவர்கள் நேராக தியாகராசன் தங்கியுள்ள இடத்திற்கு ஓடினார்கள். அப்போது தியாகராசன் தங்கி இருந்த அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது. மேற்படி சித்தார்த்தன் ஓடிப்போய் கதவை உதைத்தார்.

பிறகு அந்த அறைக்குள் சென்ற 2 நிமிடத்தில் விடுதலை அலுவலகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டே “எங்கே அந்த வீரமணி?’’ என்று கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது டிரஸ்ட் உறுப்பினர் களான சிவகங்கை இரா.சண்முகநாதன், கா.மா.குப்புசாமி, பொத்தனூர் சண்முகம், தி.க.ராமச்சந்திரன் ஜகதீசன், புலவர் இமயவரம்பன், திருவாரூர் சிவசங்கரன், மற்றும் இயக்கத்தவர்கள்  பட்டுக்கோட்டை இளவரி, சிங்காரம் நெல்லிக்குப்பம் சுப்ரமணியம், வழக்குரைஞர் துரைசாமி, தோட்டக்காரக் கண்ணன், கூர்க்காக்கள் இருவர் லால் பகதூர், பீர்மகதூர் ஆகியோர் இருந்தனர். அப்போது மேற்படி சித்தார்த்தனும் அவருடன் வந்த 10 பேரும் விடுதலை அலுவலகத்தின் முன் வந்து நின்றுகொண்டு ஒரே கூச்சலிட்டு கலாட்டா செய்து கூர்க்காவை அடித்தார்கள்.

பெரிய கல் ஒன்றை எடுத்துப் போட்டார்கள், பிறகு நான் போலீசுக்கு போன் செய்யவும், சிலர் மேற்படி காரில் ஏறிப் போய்விட்டார்கள், சித்தார்த்தனும் மற்றும் 5 பேர் தியாகராசன் இருந்த இடத்திற்குச் சென்று இரண்டு பேரை விட்டு விட்டு சித்தார்த்தன் மற்றும் 3 பேர் இரண்டு மோட்டார் பைக்கில் போய்விட்டனர். சிறிது நேரத்தில் போலீஸ் வந்தது. போலீஸ் வரும்போது மீதியிருந்த இரண்டு பேரும் ஸ்கூட்டரில் ஏறிப் போய்விட்டனர்.

பின்னர் இதுகுறித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் இரா.சண்முகநாதன் அவர்கள் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.துரைசாமியுடன் சென்று சென்னை மாநகர கமிஷ்னரிடம் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்டு போலீஸ் கமிஷ்னர், இது பற்றி அதிகாரிகளிடம் கூறப்பட்டிருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் திரு.சண்முகநாதன் அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களுக்குக் கொடுத்த புகார் கடிதம் மறுநாள் விடுதலையில் வெளிவந்தது. அதைப் படித்த சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான தோழர்கள் நேரிலும், டெலிபோனிலும், கடிதங்கள் வாயிலாகவும் தங்களது வேதனைகளையும், ஆவேசத்தையும், அடக்கமுடியாத உணர்வுகளையும் வெளிப்படுத்தினார்கள்.

இதுகுறித்து 14.04.1980 அன்று ஒரு அறிக்கை விடுத்தேன். “அய்யா, அம்மா அவர்கள் விட்ட பணிகளைத் தொடரும் நிலையில் இதுபோன்ற இடர்பாடுகள், துரோகங்கள் காரணமாக, எங்கே நான் சலிப்பும், சங்கடமும் மனச்சோர்வும் கொண்டு விடுவேனோ என்று கருதி மிகவும் கவலை தெரிவித்திருக்கிறீர்கள்.

அருமைத் தோழர்களே, அருள்கூர்ந்து யாரும் எதற்கும் பதட்டப்பட வேண்டாம். நமது அறிவு ஆசான் அய்யா அவர்கள் நம்மை சரியானபடி பக்குவப்படுத்தி விட்டுத்தான் சென்றிருக்-கிறார்கள்.
எல்லையற்ற சுயநலத்தின் காரணமாக ஏற்படும் இதுபோன்றச் சங்கடங்களை நாம் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அய்யா அவர்களும் அம்மா அவர்களும் பல நேரங்களில் பல பேர்களிடம் காட்டிய அன்பும், பரிவும், பெருந்தன்மையும், தாராள சிந்தனையும், இரக்க உணர்வுகளும், அத்தகையவர்கள் அகராதியில் வெறும் பலவீனங்களாகவே கருதப்பட்டது. அவ்வளவு பெரியவர்கட்கே அந்நிலை என்றால் எம்போன்ற சாதாரண-மானவர்கள் காட்டிய பச்சாதாபத்தையும் அத்தகையவர்கள் எப்படி எடுத்துக் கொள்ளுவார்கள், கொண்டார்கள் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்கவும் வேண்டுமா?
தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்ற சீரிய பணியை செவ்வனே நடத்தி முடிக்க முயலும் போது, எந்த மூலையிலிருந்து ஆபத்துவரும் என்று கூட எதிர்பார்த்து நடக்கமுடியாத, சுற்றுச்சார்புகள் வரை நாம் சந்திக்க வேண்டிய சங்கடங்களைச் சந்தித்துத் தானே ஆகவேண்டும்? தோழர்கள் அதிர்ச்சி கொள்ளாமல், ஆத்திரப்படாமல், கழகப் பணிகளை கண்ணும் கருத்துமாய் ஆற்றிட வேண்டுகிறேன்.

நம்மைப் பொறுத்தவரையில் எந்தச் சூழ்நிலையிலும் மனதைத் தளரவிடாமல், பின்னால் திரும்பாது லட்சியப் போர்க்களத்தில் முன்னே செல்லும் பெரியார் பெரும் படையின் ஒரு சாதாரண போர்வீரனாக தொடர்ந்து பணியாற்றிடுவேன்.

அதற்காக எந்த பரிசுகள் கிடைத்தாலும் குளிர்ச்சியோடு ஏற்று, மகிழ்ச்சியோடு இறுதியாக கண்களை மூடும் வரை ஓயாது, ஒழியாது லட்சியப் பணியில் அய்யாவும் அம்மாவும் லட்சோப லட்சம் தோழர்களாகிய நீங்களும் வைத்த நம்பிக்கை ஒரு சிறிதும் பாழாக்காமல் உழைப்பேன்.
எனவே தோழர்களே, சிறு சம்பவங்களைக் (அதற்கு எவ்வளவு பெரும் அரசியல் பின்னணிகளும் உந்துதல்களும் இருந்தபோதிலும்) கண்டு பதட்டப்படாமல், பயணத்தை தொடருவோம் என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்’’ என்று கூறி அந்த அறிக்கையை முடித்திருந்தேன்.
இதுகுறித்து சிட்டி சிவில் கோர்ட்டில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு பின்னர் தள்ளுபடியானது.
பெரியார் திடலில் உள்ள ராதா மன்றத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் உரிமை தனக்கே உண்டு என்றும், அதில்  சுயமரியாதை பிரச்சார நிறுவனமோ, அதன் செயலாளர் வீரமணியோ தலையிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், அதற்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட வேண்டும் என்றும் தியாகராசன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து 3ஆவது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

பெரியார் திடலில் ஒலி பெருக்கி அமைப்புப் பணிகளைக் கவனித்து வந்த தியாகராசன் சிட்டி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார்.
“மணியம்மையாரின் இளைய தம்பி என்றும் பெரியாரை மணியம்மையார் திருமணம் செய்து கொண்டது முதல், தான் மணியம்மையாரோடு இருந்து வருவதாகவும், இறந்த பிறகு, பெரியார் மணியம்மையார் திடலிலே தொடர்ந்து குடியிருந்து வருவதாகவும் வாதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பெரியார் குடும்பத்திலே ஒருவராக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த 08.04.1979 அன்று இரவு 8 மணியளவில் பிரதிவாதி, தன்னைக் கட்டாயப்படுத்தி, தான் குடியிருந்த இடத்திலிருந்து வெளியேற்றியதாகவும், அப்போது அந்த முயற்சி முறியடிக்கப் பட்டதாகவும் வாதி தனது மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார். பெரியார் திடலில் உள்ள ராதா மன்றத்தை தாமே பெரியார் காலத்திலிருந்து நிர்வகித்து வந்ததாகவும், அது தன்னுடைய பொறுப்பில் இருந்ததாகவும், அதற்கான வாடகைகளை தாமே வசூலித்து வந்ததாகவும் 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை, மன்றத்தில் நிகழ்ச்சிகளுக்கு புக் செய்துள்ளதாகவும் வாதி தனது மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தன்னிடமிருந்து மன்றத்தின் சுவாதீன உரிமையை எடுத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அதை கோர்ட் தலையிட்டு தடைப்படுத்த வேண்டும் எனவும், தான் குடியிருந்த பகுதி, மன்றம் ஆகியவற்றின் சுவாதீன உரிமையில் பிரதிவாதிகள் தலையிடாது இருப்பதற்காக இடைக்கால தடை உத்தரவு வழங்க வேண்டும் என்றும், இல்லையேல் தனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் வாதி தனது மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

முதல் எதிர் மனுதாரர்களான பெரியார் சுயமரியாதை பிரச்சார ஸ்தாபனமும், இரண்டாவது எதிர் மனுதாரான அதன் செயலாளர் என்ற முறையில் நானும் தாக்கல் செய்த எதிர் மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தோம். “வாதி பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவரல்ல. அவர் மணியம்மையாரோடு வசிக்கவில்லை. மணியம்மையார் மறைந்த பிறகு, வாதி இப்போது சொல்லுகின்ற இடத்தில் வசிக்கவில்லை. பெரியார் தனது தலைமையிடத்தை திருச்சியிலே வைத்திருந்தார். சென்னை வரும்போதெல்லாம் மீரான்சாகிப் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குவார். பிறகு, ஈ.வெ.கி.சம்பத் சாலையில் உள்ள பெரியார் திடலில் தங்கிவந்தார். வாதி, எந்த நிறுவனத்துக்கும் பொறுப்பாளராக வைக்கப்பட்டதில்லை.

பெரியார் மறைவுக்குப் பிறகு, பெரியார்  மணியம்மை கல்வி அறக்கட்டளை நிறுவனம் என்ற டிரஸ்டை மணியம்மையார் அவர்களே ஏற்படுத்தி அதற்கு அவருக்கென்றிருந்த சொத்துக்களையும் உரிமையாக்கிவிட்டார்.

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான எந்தச் சொத்துக்கும் வாதியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படவில்லை. ராதா மன்றத்தை நிர்வகிக்கும் அனுமதியோ, வாடகை வசூலிக்கும் அனுமதியோ, அவருக்கு வழங்கப்படவில்லை. நிறுவனத்தின் 23ஆவது விதிகளின்படி, வாதி சொல்லுகின்ற மன்றத்துக்கும், குடியிருப்பு பகுதிக்கும், நிறுவனத்தின் செயலாளரைத் தவிர வேறு யாரும் பொறுப்பாளராக இருக்க முடியாது. வாதி ராதா மன்றத்தினுடைய மின்சாரம் மற்றும் ஒலிபெருக்கி அமைக்கும் பணியை பார்த்து வந்தார். அதற்காக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவருக்கு 50 ரூபாய் வழங்கப்பட்டது.

‘எலக்ட்ரிசியன்’ என்ற முறையில் அவரது பணி எந்த நேரத்திலும் தேவைப்பட்டதால், திடலிலேயே இரண்டு அறைகளில் தங்க அவர் அனுமதிக்கப்பட்டார். அவருடைய பணி தேவை இல்லை என்று சொன்ன உடனே, அப்போதே அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த இரண்டு அறைகளைக்கூட அவர் காலி செய்திருக்க வேண்டும். இரண்டாவது பிரதிவாதி, மணியம்மையார் அவர்களால் நியமிக்கப் பட்ட, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராவார். பெரியார் திடலில் பல்வேறு கட்டிடங்கள் இருக்கின்றன. வாதி குறிப்பிட்டுள்ள ஒரு பகுதி விடுதலை அச்சகத்திற்கு உரியது. அதில் ஒரு பகுதி பெரியார்  மணியம்மையார் தங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது, மணியம்மையார் தனியாக அதில் ஒரு சமையலறையைப் பயன்படுத்தி வந்தார். மணியம்மையார் மறைந்தவுடன் அந்த இடம் முழுவதும் நினைவிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வாதி ராதா மன்றத்தின் வாடகையை வசூலித்து, முறை கேடாக நடந்து வந்தார். மேலும் நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கும் அளவுக்கு பல்வேறு கெட்ட நடவடிக்கை களிலும் ஈடுபட்டார். அதற்காக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அவர் சொன்ன விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பிறகு, அவர் தான் தவறு செய்ததாக ஒப்புக் கொண்டார். 8ஆம் தேதியன்று நடந்ததாக அவர் சொல்லியிருப்பது போல் எதுவும் நடை பெறவில்லை.

வாதியின் மகன் கடந்த 11.04.1979 அன்று சுமார் 10, 15 பேர்களை அழைத்துவந்து, இரண்டாவது பிரதிவாதியை (கழக பொதுச் செயலாளரை) தாக்க வந்தார். அந்த நிகழ்வின்போது வாட்ச்மேன் தாக்கப்பட்டார். போலீசாருக்கு தகவல் கொடுத்தவுடன், தாக்க வந்தவர்கள் ஓடிவிட்டார்கள். வாதியும் இப்போது வெளியேறிவிட்டார்.

எனவே இடைக்கால தடை உத்தரவு வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என்று பிரதிவாதி என்ற முறையில் எனது எதிர் மனுவில் குறிப்பிட்டிருந்தேன்.

நீதிபதி இரண்டு மனுக்களையும் பரிசீலனை செய்து, இருதரப்பு வழக்குரைஞர்களின் வாதத்தையும் கேட்ட பிறகு அளித்த தீர்ப்பின் சுருக்கம் வருமாறு:

வாதி குறிப்பிட்டுள்ள இடங்களில், தனக்கு எந்த விதத்தில் உரிமை இருக்கிறது என்றோ குத்தகை இருக்கிறது என்றோ குறிப்பிடவில்லை. அந்தச் சொத்துக்கள் அனைத்தும் மறைந்த பெரியார் ஏற்படுத்திய டிரஸ்டுக்குச் சொந்தமானதாகும். அந்த டிரஸ்ட் விதிகளின் படி, சொத்துக்க ளனைத்தும் அதன் தலைவர் மற்றும் செயலாளர் பெயரில்தான் இருக்க வேண்டும். பெரியார் காலத்திலோ, மணியம்மையார் காலத்திலோ, வாதிக்கு சொத்தில் எந்தவித உரிமையும் கொடுத்ததாக, மனுவில் குறிப்பிடவில்லை. அவர் குடியிருந்த இடத்துக்காக, ஸ்தாபனத்திற்கு வாடகை எதுவும் கொடுத்ததாக வாதி தமது மனுவில் குறிப்பிடவில்லை.  வாதியினுடைய அதிகபட்சமான உரிமை என்பது எதிர்மனுதாரர் கொடுத்த அனுமதியின் அடிப்படையிலே ஆகும். அந்த உரிமையும் நிரந்தரமானது அல்ல. ராதா மன்றம் மனுதாரரின் பொறுப்பில் இருந்ததாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மனுதாரர், தானே எதேச்சையாக வாடகைக்கு விடவோ, வாடகை வசூலிக்கவோ உரிமை அற்றவர். மன்றத்தினுடைய பொறுப்பு பிரதிவாதிகளின் பொறுப்பிலே இருக்க வேண்டுமே தவிர, மனுதாரரின் பொறுப்பில் இருந்திருக்க நியாயம் இல்லை. மன்றத்தை வேறு யாருக்காவது வாடகைக்கு விடுவதாக இருந்தாலும் பிரதிவாதிகளின் ஏஜெண்ட் என்ற முறையிலே அதை செய்திருக்க வேண்டுமே தவிர மனுதாரருக்கு வேறு எந்த உரிமையும் இல்லை.

நிறுவனத்துக்கு மனுதாரர் செலுத்த வேண்டிய பாக்கிப் பணம் இன்னும் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை, மனுதாரர் மறுக்கவில்லை, வாதியின் விண்ணப்பத்தை பரிசீலித்ததில், கோர்ட் இதில் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இரண்டு அறைகளில் தங்கியிருந்த காரணத்தை வைத்துக் கொண்டு, அவர் அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கு எந்த உரிமையும் உண்டாகிவிட முடியாது. மணியம்மையார் தம்பி என்ற ஒரே தகுதியை பயன்படுத்திக் கொண்டு மேற்படி சொத்தில் உரிமை கொண்டாட முயற்ச்சிக்கிறார்!
மணியம்மையார் தான் குடியிருப்பதற்கென்று எந்தப் பகுதியையும் நிரந்தரமாக வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவருடைய மறைவுக்குப் பின் மனுதாரரோ, அவரது குடும்பத்தினரோ அந்த இடத்தை வாரிசுரிமையாகப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. எனவே வாதி விண்ணப்-பித்திருந்த இடைக்கால தடை கோரும் மனு நிராகரிக்கப்படுகிறது.  இவ்வாறு 3ஆவது சிட்டி சிவில் கோர்ட் துணை நீதிபதி அவர்கள் 30ஆம் தேதி இத்தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு வழங்கப்படும் போது நீதிமன்றத்தில் வாதி தியாகராசன் அவர்களுடைய மகன் சித்தார்த்தனுடன், சென்னை டி.எம். சண்முகமும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
(நினைவுகள் நீளும்)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத்தங்கம் ஏ.வி.பி.ஆசைத்தம்பி in FaceBook Submit சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத்தங்கம் ஏ.வி.பி.ஆசைத்தம்பி in Google Bookmarks Submit சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத்தங்கம் ஏ.வி.பி.ஆசைத்தம்பி in Twitter Submit சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத்தங்கம் ஏ.வி.பி.ஆசைத்தம்பி in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 16-31, 2021

  • அய்யாவின் அடிச்சுவட்டில் ...:இயக்க வரலாறான தன் வரலாறு(260) - பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!
  • அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?
  • ஆசிரியர் பதில்கள்: ஆரியத்தால் ஏவப்பட்ட மாயமான்கள்!
  • ஆன்மிகம் - அவர்கள் பார்வையில்!
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (70) : இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?
  • கவிதை: தமிழர் திருநாள்
  • குடல் காக்கும் மோர்!
  • சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை
  • சிறுகதை: சிக்கனத் திருமணம்
  • தந்தை பெரியார் பொங்கல் வாழ்த்து
  • தலையங்கம் : தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!
  • நூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
  • பகுத்தறிவு : மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!
  • பெண்ணால் முடியும்
  • பெரியார் பேசுகிறார்: பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?
  • பேபிக்கு ஒரு ‘ஹெட்போன்’
  • மருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
  • மாணவர் பகுதி: மாணவர்களே கண்ணைக் காப்பீர்!
  • முகப்புக் கட்டுரை: திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.