Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2013 இதழ்கள் -> Unmaionline -> 2021 -> ஜனவரி 16-31, 2021 -> ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3)
  • Print
  • Email

ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3)

எம்.எப்.அய்.ஜோசப் குமார்

இப்பிள்ளைத்தமிழ் நூலில், சப்பாணிப் பருவத்தில் ஒரு பெரியார் பொன்மொழிக் கவிதையொன்றைக் காணமுடிகிறது. “தன்மான இயக்கம் இனி என்மானும்!’’ (எதைப் போன்று இருக்கும்?) என்று துவங்கும் கவிதை “அந்தமும், பார்ப்பனிய - இந்துமதம்  - கலை கடவுள்/ சாதி மூடத்தனத்தைப்/ புன்மானும் சிறு செயல் என்று எந்நாளும் இகழ்வதும்/ புவியில் பலர் உழைக்க மிகச் சிலர் அந்தப் பயன் உண்டு/ பொழுதொறும் நன்கு உறங்கித் துன்மார்க்க வழியேகி/ . . . .. .. சோம்பேறி வாழ்வுள் ளளவும்/ சன்மார்க்க நெறிநிற்கும்  . . ..” என்று சொல்லும் வரிகள் 1.6.1930 தேதியிட்ட “குடிஅரசு’’ இதழில் வெளியான பெரியாரின் சொற்பொழிவைப் பிரதிபலிக்கின்றன. பெரியார் கூறுகிறார், “இந்த இயக்கமானது இன்று பார்ப்பனரையும். மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் வைதுகொண்டு, மூடப்பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டிக் கொண்டு என்றைக்கும் இருக்குமென்றோ, இவை ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலையில்லாமல் போய்விடுமென்றோ யாரும் கருதிவிடக் கூடாது. ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறது; மற்றும் ஒருவன் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கின்றது, ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவது; மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவது, பணக்காரரெல்லாம் தமது செல்வம் முழுவதும் தமது சுயவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதுகிறது போன்ற தன்மைகளெல்லாம் இருக்கின்றவரையில் இந்த இயக்கம் இருந்தே தீரும். இதனை ஒழிக்க யாராலும் முடியாது என்பது உறுதி!’’

1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டுக்கு, வட இந்தியாவைச் சேர்ந்த எம்.ஆர். ஜெயகர் என்பாரைத் தலைமை தாங்க பெரியார் அழைத்தார். இப்பொருள் பற்றி, “குடிஅரசு’’ 18.5.1930 தேதியிட்ட இதழில், பின்வருமாறு தலையங்கம் எழுதினார்.

“இங்கு பார்ப்பனரல்லாத தலைவர்கள் தங்களுக்குள் அபிப்பிராய பேதமேற்பட்டு, ஒருவரையொருவர் நசுக்கி விடக் கருதி, ஒழுங்கையும், நியாயத்தையும் மீறி, சில சமயங்களில் பார்ப்பனரல்லாதார் நன்மைகளைக் கூட பலிகொடுக்கத் துணிந்ததினால், வெளி மாகாணத்திலிருந்து கனவானைத் தலைமைதாங்க அழைக்க நேரிட்டது.

நாமும், திரு. ஜெயகர் அவர்களது மற்ற கொள்கைகளைப் பற்றி விவரம் தெரியாதிருந்தாலும், தீண்டாமை விலக்கிலும், ஜாதிமுறை அழிவிலும், பெண்கள் சம சுதந்தரத்திலும், சைன்சும் மதமும் ஒத்து இருக்க வேண்டும் என்ற கருத்திலும், அவர் செய்யும் காரியங்களும் பேச்சுகளும், பத்திரிகை மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் தெரிந்திருந்ததால், அவர் வந்து நமது கொள்கைகளைத் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் என்று கருதி அவரை அழைத்தோம்!”

புலவர் தேவண்ணா, இவ்வரலாற்றை நினைவுகூர்ந்து பிள்ளைத்தமிழின் அம்புலிப் பருவத்தில், ஜெயகரின் புகழ்மொழி வடிவில் கீழ்க்கண்ட செய்யுளை அமைத்துள்ளார்.

“. . . . . . . . . . பெரியார்

உணர்ந்து உயிர்ப்பித்தஇவ் வியக்கம்

இங்குநம் ஏழை, இருந் துயராளர்,

இகழ்ந்தவர், உரிமைகள் அற்றோர்

எழில் பெறும் பெண்டிர் எவரும்முன் னோ

இயற்றிடும் தொண்டினைப் புகழ்ந்தால்

ஏட்டினில் அடங்காது . . . . .’’

1933இ-ல், “குடிஅரசு’’ இதழ், அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் “புரட்சி’’ என்ற பெயரில் வெளிவந்தது. ஈரோட்டில் நடைபெற்ற இம்மாநாட்டில் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அவர்கள் அழைக்கப்பட்டு கலந்து கொண்டார். அவர் பெரியாரின் சிறுபிள்ளைப் பருவத்து குறும்புகளை நினைவுகூர்ந்து சொல்வதாக, புலவர் தேவராசன், “பெரியார் பிள்ளைத்தமிழ்’’ நூலின் சிற்றில் பருவத்தில் ஒரு கவிதை செய்துள்ளார். அது பின்வருமாறு:

“நாயக்கர் அவர்கள் நாட்டிற்குப்

புரிந்த நற்சே வையைமறுக்க

நம்மால் முடியாது  .  . . . .

. . . . . . . . உலக நலன்

சேர்க்க இரவு பகலாச்

செய்வார் பிரசாரம் எனவே

. . . ..  எம்பெரியார் திராவிடரின்

சிந்தா மணி ஆரியப் பிணியின்

வேர்க்குச் சாவு மணி . . . . ..

வேறே இளமைச் சிறுசெயல்கள்

விளம்பி நினையாம் நகைத்தோமா?”

“திராவிடரின் சிந்தாமணி, ஆரியப் பிணியின் வேர்க்குச் சாவுமணி” என்ற சொற்கள்தாம் புலவரது மொழி வீச்சில் எவ்வளவு பெரிய கொள்கை முழக்கங்களாய் இக்கவிதையில் தெறித்து விழுந்திருக்கின்றன!

பெரியார் சிறிய வயதில் செய்த, சீர்திருத்த மனப்பான்மை கொண்ட குறும்புகளுக்காக, உற்றாரால் காலில் விலங்கிடப்பட்டார். அப்போதும் அக்கால் விலங்குடனேயே தமிழகத்தின் விலங்கைத் தகர்த்தெறியத் தாழ்ந்த மக்களோடும் பழகித் திரிந்தார். புலவர், தந்தை பெரியாரின் இந்த இளம்பருவத்துச் செயல்களெல்லாம் அவரது “ஆண்மை தோன்றுமளவிற்கு” “மேன்மை சேர்த்ததாகச்” சொல்லி, தனது கவிதையை முடிக்கின்றார்.’’

தந்தை பெரியார் 1942இ-ல் தான் எழுதிய, “பெண் ஏன் அடிமையானாள்?’’ என்னும் நூலில், நம் நாட்டில், குறுமதி கொண்ட ஆண்களால், பெண்களின் உரிமைகளும், தனித்துவமும் எப்படி நசுக்கப்படுகின்றன என்ற கசப்பான உண்மையை, கீழ்க்கண்டவாறு விவாதிக்கின்றார்.

“பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.”

“எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால், ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால், இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால், இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது”.

பெரியாரது இந்தச் சிந்தனைகளின் பிழிவாக, புலவர் தேவராசன் தனது நூலின் சிறுதேர்ப் பருவத்தின் பெரியாரின் பொன்மொழி குறித்த செய்யுளைப் பதிவு செய்துள்ளார்.

“ஆடவர் பெண்டிர் விடுதலை வேண்டி

அரற்றுதல், பெண்டிரின் அடிமை

அதிகரித்திடவே; ஏனெனின், உலகில்

ஆடுகளுக்கு நரியால்

கூடுமோர் நன்மை இல்லையா’ல் பெண்டிர்

கூடியே மாதர் போராட்டம்

கொண் டுழைத்து ஆண்மை குறைந்திட உழைக்கும்

கொள்கையே பெண்சுதந் திரத்தை

தேடும் நல் வழியாம்  . . . . .”

இந்து அடிப்படைவாதிகளால், மனுநீதி நூல் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, அதில் காணப்பெறும் பெண் விரோதக் கருத்துகளெல்லாம் பரப்பப்பட்டு வருகின்ற இந்த காலச் சூழலில், எண்பது ஆண்டுகட்கும் முன்னரேயே, தந்தை பெரியார் இவற்றிற்கெதிராகப் போராட முனைந்துள்ளார் என்கிற வரலாற்றுச் செய்தி தமிழரது கவனத்தில் இடம்பிடிக்க வேண்டும்.

“கிளைக் கதையோடு ஆர்க்கும் சொற்பொழிவைக் கேட்டுப் பல ஊரும் பராவி வாழ்த்தும்படி உழைக்கும் பச்சைத்தமிழன் ஈ.வெ.ரா. பலர்  மணாளன்’’

                                  - அறிஞர் திரு. வ. இராமசாமி                       அய்யங்கார், “சுதந்திரன்’’ இதழாசிரியர்.

“தான் சரி என நினைத்ததெல்லாம், சொற்றிறம் தோன்ற எங்கும் மிகவும் வற்புறுத்திச் சொல்லும் உள்ள ஒரு காரணத்தால் உள்ளத்தில் மாறா மெய்யன்பு இற்றை நாள் வரையும் ஈரோட்டு இராமன்பால் கொண்டுள்ளேன்’’.

- டாக்டர் பி. சுப்பராயன் முன்னாள் அமைச்சர், பழம்பெரும் சுயமரியாதைக்காரர்.

-தம் குல நலமே கருதிமுன் மனுசொல், தகுதியில் நீதிநூல் தனைத் தீ தனக்கு இரையாக்கி . . . . சாதி பேதம் செய்வேத வேதாந்தச் சழக்குகள் சாற்றிடும் சூதை எங்கும் நன்கு இயம்பி எதிர்த்து அமராடும் இவன் (பெரியார்) . . . . .’’

                                - ராவ் பகதூர் பெ.சுந்தரம்பிள்ளை.

-“திராவிட மணிக்கொழுந்தே, நானிலம் அனைத்தும் ஓர் இனம், குலமே . . ..’’ _- கவிஞர் அண்ணல் தங்கோ, “குடிஅரசு’’ இதழ்க் கவிஞர்.

“பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம், பிறழ்ந்த இந்து மதத்தினை, முன் சரியாப் பெருமை உடைத்தாகச் செய்ய சளைக்காது உழைக்கும் -நீதிக்கட்சித் தலைவர்’’

 - பொப்பிலி ராஜா.

மேலே சுட்டப்பட்டுள்ள அய்ந்து புகழ்மொழிகள், பெரியாரைப் பற்றி, பிற அறிஞர்கள் கூறிய பாராட்டுச் சொற்களில் ஒரு பகுதியே. இவற்றை புலவர் தேவராசன், தனது “பெரியார் பிள்ளைத்தமிழ்’’ நூலில், அழகுற எடுத்துச் சொல்லியுள்ள விதம், இந்நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலம் என்பதையே உணர்த்துகிறது.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3) in FaceBook Submit ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3) in Google Bookmarks Submit ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3) in Twitter Submit ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3) in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

பிப்ரவரி 16-28, 2021

  • 53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
  • அய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)
  • உணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை
  • சிந்தனை : கோயில் நகரம் என்றால்...
  • தலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே!
  • நாளும் செய்தியும் : ஒரு வரிச் செய்திகள் (28.1.2021 முதல் 10.2.2021 வரை)
  • பெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்
  • முகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்!
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்!
  • ரோபோ மனிதர்கள்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.