Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2012 இதழ்கள் -> Unmaionline -> 2011 -> ஜனவரி 16-31 -> தமிழிசைக் களஞ்சியமாய் ஓர் அகராதி
  • Print
  • Email

தமிழிசைக் களஞ்சியமாய் ஓர் அகராதி

தமிழர் வரலாறும்,தமிழின வரலாறும் பெரும்பகுதி மறைக்கப்பட்டது அல்லது கவனம் பெறாமல் போனதாகத்தான் இருக்கும். இலக்கியம், கலை, பண்பாடு தொடர்பான பல நூல்கள் இன்னும் நமக்குக் கிடைக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. கிடைத்தவற்றில் ஆய்வு செய்யப்பட வேண்டியவையும் உண்டு.இந்த வரிசையில் தமிழிசை குறித்த ஆய்வு நூல்கள் போதுமான அளவுக்குத் தேவைப்படும் சூழலில் ஓர் அரிய அகராதியைக் கொண்டுவந்துள்ளார் தமிழிசை ஆய்வாளர் மதுரை நா.மம்மது.

தமிழிசை மறைக்கப்பட்டு அதையே உள்வாங்கி கர்நாடக இசை என்று சொல்லி தெலுகு பாடல்களைப் பாடும் போக்கு இன்றளவும் நீடித்துவரும் நிலையில்,இந்த தமிழிசைப் பேரகராதி முக்கியத்துவம் பெறுகிறது.

அகராதியைத் தொகுப்பது என்பது எளிதான பணியல்ல.அதுவும் இசை குறித்த அகராதி என்பது மிக மிகக் கடும் பணியே. எவரும் செய்யத்துணியாத இப்பணியைச் செய்து தற்காலத் தமிழுக்குத் தந்த மம்மது அவர்களை முதலில் பாராட்டவேண்டும். அவரது முயற்சிக்குத் துணை நின்ற பால் சி.பாண்டியன் பாராட்டுக்குரியவர்.

பொதுவாகத் தமிழிசை குறித்து அறிய முனைவோர்க்கும், ஆய்வாளர்கள்,  மாணவர்கள், கல்வியாளர்கள் என எல்லோர்க்கும் பயன் அளிக்கும் வகையில் நூல் உருவாக்கம் பெற்றுள்ளது சிறப்பு. இந்நூல் தொகுக்கப்பட்டது குறித்து தமது முகவுரையில் நா.மம்மது கூறும்போது, ஒரு துறையின் வளமைக்கு மொழியின் சொல்வளம் சிறந்த எடுத்துக்-காட்டாகும். தமிழ் இசைத்துறையின் கலைச்சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்தொட்டே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கின்றன.

இசை என்பது பண்பாட்டின் ஒரு கூறு (கருப்பொருள்); எனவே, அது மொழி சார்ந்தது.  அவ்வாறான நிலையில் ஒரு பண்பாட்டு இனத்தின் இசையை, அந்த இனத்தின் மொழியால் விளக்காது அயல்மொழிச் சொற்களால் விளக்க முற்படுவது நகைப்புக்கு இடம் தருவதாகும்.  அப்படியான ஒரு நிலை தமிழிசைக்கு ஏற்பட்டதால் இடைக்காலத்தில் பற்பல இசைச்சொற்கள் நம்மிடையே வழக்கில் இருந்து மறைந்தன.  எதிர்காலத்தில் மேலும் பல சொற்கள் மறையவே நேரிடும். (எடு: விட்டிசை என்பது விஸ்ராந்தி என்றும்; உரிச்சொல் என்பது உரிச்சொல் நிகண்டு என்றாகி பின், நிகண்டு என்றாகியுள்ளது) இயல் தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் இதுவே நிலை.

தமிழ், தனித்து இயங்கும் வளமையும், வல்லமையும் பெற்ற தொன்மையான மொழி.  ஆயினும், பலர் தமது போதாமை அல்லது இயலாமையை, தமிழின் போதாமை அல்லது இயலாமையாக வெளிப்படுத்திய இடங்கள் பல உண்டு.

தமிழ் என்பது தனித்தமிழே.  ஒரு இனத்தின் கலையை அந்த இனத்தின் மொழியால் விளக்காமல், பிறிதொரு மொழியால் விளக்க முற்படுவது அம்மொழிக்கும் அக்கலைக்கும் கேடு விளைவிப்பதாகும்.  கடந்த காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள அநேக இசை இயல் நூல்கள் இக்கேட்டையே விளைவித்துள்ளன. எனவே, இவ்வகராதி தமிழ் இசையை தமிழ்ச் சொற்களால் விளக்க முற்பட்டுள்ளது. ஆயினும், இந்த அகராதியில் இன்று இசைத்துறையில் நடப்பிலுள்ள வடசொற்களும் பதிவு பெற்றுள்ளன.  ஆனால், தலைச் சொற்களாக அல்ல.  (விதிவிலக்காக சில சொற்கள் தவிர) நம்மிடையே வழங்கும் தெலுங்குப் பாடல்-களிலுள்ள இசை வடிவம் தமிழிசையே என்பது போல் வடசொற்கள் தாங்கி நிற்கும் செய்திகளும் தமிழிசைச் செய்திகளே. எனவே, அச்சொற்-களும் ஒப்புமைக்காகப் பதிவு பெற்றுள்ளன.  எதிர்காலத்தில் இந்த நிலை முற்றாகக் களையப்பட வேண்டும்; களையப்படும்.

தமிழ் நூல்களின் சான்றடிப்படையிலேயே தமிழ்இசை இந்த அகராதியில் விளக்கப்-பட்டுள்ளது. அரும்பத உரைகாரரும், அடியார்க்கு நல்லாரும், பூரணரும், நச்சரும், அழகரும் தமிழ் நூல்களையே அடிப்படை நூல்களாகக் கொண்டுள்ளனர். அவர்கள் பிறமொழி நூல்களைப் பார்வை நூல்களாகக் கொண்டதைப் போல், இந்த அகராதிக்குப் பிறமொழி நூல்கள் பார்வை நூல்களாக மட்டும் பயன்பட்டுள்ளன.

இயற்றமிழ் மட்டுமே கற்று பன்னெடுங்-காலமாக இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மற்றிரு தமிழ்க் கூறுகளையும் மறந்து விட்டிருந்தோம்.  இதனால் வடமொழியிலும் தெலுங்கிலும் இசையியல் நூல்கள் வெளிவந்து தமிழிசை தேய்ந்து மாயும் நிலை ஏற்பட்டது.  இப்போது தமிழ் இசை இலக்கண விளக்கங்கள், வளமைகள், முறைகள் முதலியன மீள எழுந்து மறுமலர்ச்சி பெற்று வருகின்றன. ஆசிரியப் பெருமக்களும், ஆய்வாளர்களும், மாணவர்களும், ஆர்வலர் பலரும் தமிழ் இசைத்துறையிலும், நாடகத்துறையிலும் பேரார்வம் கொண்டு, விட்ட இடத்தை நிரப்பும் ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து முடிக்க முனைந்து வருகின்றனர்.  இந்தக் கால கட்டத்தில்தான் தமிழிசை அகராதியின் தேவை உணரப்பட்டது,என்கிறார்.

தமிழிசையின் அடிப்படைச் செய்திகளை முதலில் நூல் விவரிக்கிறது.அந்தப் பகுதி:-

1. சுரம்

தமிழ் இசையில் இசைக்கோவை (Musical note) யைக் குறிப்பிட்ட நரம்பு, கோவை, சுரம் என்ற சொற்கள் இவ்வகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  தொடக்க காலத்தில் - சுரத்தல், (நீர்) ஊறுதல் என்ற பொருளில் சுரம் என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. (மேல் நின்று தான் சுரத்தலான் (சிலப்: 1: (3); தொட்டனைத்தூறும் மணற்கேணிகுறள் 196).  பின்னர் இசைக்கோவையைக் குறிக்க சுரம் என்ற சொல் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழிசை 22 அலகு (சுருதி) 12 தானசுரம் (Semitones) நாற்பெரும்பண், ஏழ்பெரும்பாலை மற்றும் 82 பாலை (மேளகர்த்தா) என்ற அடிப்படையில் அமைந்தது.  இவ்வகராதியும் இவ் வடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

2. பண்

பாலை, தாய்ப்பண் என்ற சொற்களால் சம்பூர்ண இராகம் (மேளகர்த்தா) குறிப்பிடப்-படுகின்றது. தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,
1.  செம்பாலை (அரிகாம்போதி)

2.  படுமலைப்பாலை (நடபைரவி)

3.  செவ்வழிப்பாலை (இருமத்தி மத்தோடி)

4. அரும்பாலை (சங்கராபரணம்)

5. கோடிப்பாலை (கரகரப்பிரியா)

6. விளரிப்பாலை (தோடி)

7. மேற்செம்பாலை (கல்யாணி)

என சிலம்பு அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையிலேயே இவ் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மொழித்துறையில், சிறப்பாகக் கலைத்துறையில், வழக்கிழந்த சொல் என்று எதுவுமில்லை.  ஒரு காலத்தில் வழக்கிழந்ததாகக் கருதப்-பட்டது மற்றொரு காலத்தில் வழக்கிற்கு வருகிறது. ஒரு வட்டாரத்தில் வழக்கிழந்த சொல்லாகக் கருதப்பட்டது இன்னொரு வட்டாரத்தில் வழக்கில் இருந்து வருவது கண்கூடு. இது திராவிட மொழிக் குடும்-பத்திற்கும் அது வழங்கும் வட்டாரத்திற்கும் பெரிதும் பொருந்துவது என்பது நாம் அறிந்ததே.

எடு:- சொல்லு என்ற பொருளில் வரும் பறை, செப்பு என்ற சொற்கள் தமிழில் வழக்கிழந்ததாகக் கொள்ளப்படுகின்றன.  ஆனால், ஏனைய திராவிட மொழிகளில் இச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன.

1. பறை - சொல்லு (மலையாள வழக்கு)

2. செப்பு - சொல்லு (தெலுங்கு வழக்கு)

.....உரை.....செப்பு....பறை....சொல்லின் பெயரே _ சூடா. 10:2

சொற்களும் ஒவ்வொரு வரலாற்று உண்மையை உணர்த்தக்கூடும் என்றும், விரிவான அகராதி ஒரு வரலாற்றுக் களஞ்சியம் என்றும், வரலாற்றுச் சொற்-களையும் வரலாற்று நூல்களைப் போலப் போற்ற வேண்டும் என்றும் அவற்றுள்ளும் வழக்கற்ற சொற்களை மிக்க கருத்தாய்ப் போற்ற வேண்டும் என்றும் அறிக _ மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (தே. நே. 24/13)

3. பன்னிரு தான சுரங்கள்

பன்னிரு தான சுரங்கள் (Semitones) மெல், மென், குறை மற்றும் வல், வன், நிறை என்ற முன்னொட்டுச் சொற்களுடன் இவ்வகராதியில் நம் முன்னோர் வழங்கிய முறையிலேயே சுட்டப்படுகின்றன.

1. குரல்  சட்சம் (ஷட்ஜம்)    ச

2. மென்துத்தம் சுத்தரிஷபம் (ருஷபம், ரி1

3. வன்துத்தம் சதுஸ்ருதி ரிஷபம் ரி2

4. மென்கைக்கிளை சாதாரண காந்தாரம் க1

5. வன்கைக்கிளை  அந்தர காந்தாரம்  க2

6. மெல் உழை சுத்த மத்திமம்   ம1

7. வல் உழை பிரதி மத்திமம்    ம2

8. இளி பஞ்சமம்       ப

9. மென் விளரி சுத்த தைவதம்     த1

10. வன் விளரி சதுஸ்ருதி தைவதம்    த2

11.  மென்தாரம் கைசகி நிஷாதம்    நி1

12.  வன்தாரம்  காகலி நிஷாதம்    நி2

(மற்றும் மென்தாரம் என்பதை, குறைதாரம் போன்றும்; வன்தாரம் என்பதை நிறைதாரம் போன்றும்).

அகராதியின் பயன்பாடு

இசைப்பாடகர், இசை ஆசிரியர், இசை கற்போர், இசை ஆய்வாளர், தமிழ் ஆசிரியர், மாணவர், எழுத்தாளர், இசைக் கருவியாளர், இசை ஆர்வலர், இசையைத் தொடர்புபடுத்தும் ஏனைய துறை ஆய்வாளர், இசைத்துறைச் சொல் ஆய்வாளர் எனப் பல்வேறு நிலையிலுள்ள இசையாளர்களுக்கும் ஏனைய ஆடல் மற்றும் நாடகத்துறையாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அகராதி எளிய முறையிலும், எளிதில் புரியும் அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இசைப்பாட்டுக்கு சந்தம் எவ்வளவு இன்றியமையாததோ அதைப் போன்று யாப்பும் மிக முக்கியமானதே.  எனவே, யாப்பு பற்றியும் இவ்வகராதியில் விரிவாகவே கூறப்பட்டுள்ளது.

அ: அகரம் என்னும் எழுத்தொலி அடிப்படைக் குரலைக் (ஆதாரசட்சம்) குறிப்பது.  ஒத்து (சுருதி) சேர்க்கும்போது அ என்ற எழுத்தொலியினையே பாடகர் பயன்படுத்து-கின்றனர். எழுத்துக்கள் நீட்டம் பெற்று ஒலிப்பதே இசை.

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்
(தொ.எ.33)

எனவே, இசையின் ஏழு சுரங்களுக்கும் கீழ்க்காணுமாறு குறியீட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்:

ஆ ஈ ஊ ஏ அய் ஓ ஔ என்ற
ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்

(பிங்க. 1415)

குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே

(திவா. 1884)

குரல் - ஆ; துத்தம் - ஈ; கைக்கிளை - ஊ; உழை - ஏ; இளி - அய்; விளரி - ஓ; தாரம் - ஔ.

அகரவரிசைப்படியே அகராதி அமைந்துள்ளது. தமிழிசை குறித்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களுக்கு உரிய விளக்கங்களுடன், பழந்தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகள், பிறமொழிச்சொற்களில் உள்ள விளக்கங்கள் இசை வகைகள், பண்கள், இசைக்கருவிகள், இசைக் குறியீடுகள், இசைச் சொல்லாடல்கள் என முழுமையான ஓர் அகராதியாக இந்நூல் உருப்பெற்றுள்ளது.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரம் போன்று இந்த தமிழிசைப் பேரகராதியும் இனி தமிழ் வரலாற்றில் தவிர்க்கமுடியாத நூல்.

- அன்பன்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit தமிழிசைக் களஞ்சியமாய் ஓர் அகராதி in FaceBook Submit தமிழிசைக் களஞ்சியமாய் ஓர் அகராதி in Google Bookmarks Submit தமிழிசைக் களஞ்சியமாய் ஓர் அகராதி in Twitter Submit தமிழிசைக் களஞ்சியமாய் ஓர் அகராதி in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.