Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2012 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுத் தேடல்
  • Print
  • Email

ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுத் தேடல்

  • பி.எஸ்.எம்

"கற்றது கைஅளவு கல்லாதது உலகளவு என்பது முதுமொழி. இந்த முதுமொழியை ஏற்றுக்கொள்ப வர்கள் சிலரே. பலர் கொஞ்சம் அறிந்தாலும் மெத்த மேதாவிபோல் நடந்து கொள்வார்கள். ஆனால், தான் அறிந்தது அதிகம் இருந்தும் இன்றும் அறிவைத் தேடி அலைபவர்கள் ஒரு சிலரே. அந்த சிலரில் ஒருவர்தான் நம் ஆசிரியர். அவர்கள் தான் பெற்ற அறிவை மற்றவர்கள் பயன்பெற சொற்பொழிவு களாகவும், புத்தகங்களாகவும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களில் நடைபெற்ற அறிவுத் தேடல் நிகழ்வுகள் இரண்டினை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

கடந்த 3.12.2011 விடுதலை நாளிதழில் நம் தமிழர் தலைவர் வாழ்வியல் சிந்தனையில், சிங்கப்பூரில் ஒரு புத்தக யாத்திரை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். அதில் அய்யாவும் அவர்களது சிங்கப்பூர் நண்பர் ம.அன்பழகன் அவர்களும் ஒரு குறிப்பிட்ட புத்தகக்கடையைச் சிங்கப்பூர் நகர மேப் மூலம் 3 மணி நேரம் தேடிக் கண்டுபிடித்து கிடைத்தற்கரிய பல பழைய புத்தகங்களை வாங்கி வந்துள்ளார்கள். இது ஒரு புத்தகத் தேடல்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த மறுநாளே திருச்சி வந்து அங்கு காலையில் இரண்டு நிகழ்ச்சிகள், மாலையில் பிச்சாண்டார் கோவிலில் நிகழ்ச்சி. இடையிலே தோழர்கள் சந்திப்பு என ஓய்வில்லாப் பணி. மறுநாள் 6.12.2011 அன்று காலை 3லு மணிக்கே எழுந்து திருவரங்கம் கோவில் பிரம்மரதம் பற்றிய அறிக்கை எழுதி, அதன்பின் புறப்பட்டு 6.30 மணியளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோர் ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்குத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அங்கிருந்து அன்பிற்காக, மானுடத்திற்காக, அறிவுத் தேடலுக்காக 4 மணி நேரம் சாலை வழிப் பயணம் செய்து உடுமலைப்பேட்டை அடைந்தார்கள். அங்கு 97 வயது மானுடப் பற்றாளர் வரலாற்றுப் பேராசிரியர், தமிழ்ப் புலவர், 200 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 170க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிய அய்யா என்.சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்து அவரிடமிருந்து அரிய பல விளக்கங்களைப் பெறத்தான் ஆசிரியர் அவர்களின் தொடர் பணிகளுக்கு நடுவே பகல் பொழுது முழுவதும் செலவு செய்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களை அன்னை மணியம்மையார் அவர்கள் எவ்வாறு பணி சுமைக்குத் தோள் கொடுக்கும் ஒரு நல்ல துணையாக, நல்ல செவிலியாக, அன்பு காட்டும் அன்னையாக, உடல் நோவிற்கும், மனதிற்கும் மருந்து கொடுக்கும் ஒரு மருத்துவராக, ஆலோசனைகள் வழங்கும் மந்திரியாக இருந்து பல்லாண்டு காலம் வாழ வைத்தார்களோ அதேபோல் 25 ஆண்டுகளுக்கு முன்பே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர் அவர்களை நாளும் பாதுகாத்து வருபவரும், தன்னுடைய உடல் வலிகளைப் பற்றிக் கவலைப்படாது அய்யாவோடு பயணம் செய்வது மட்டுமல்லாமல் செல்லுகின்ற இடங்களில் சந்திக்க வருகின்ற மகளிருக்கு ஆலோசனைகளையும், இளைய மகளிருக்கு நல்ல அறிவுரைகளையும், தோழர்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்து, தமிழர் தலைவர் அவர்களின் பேச்சிற்கு நல்ல விமர்சகராகவும் இருந்து வருகின்ற திருமதி. மோகனா அம்மா அவர்களும், பெரியார் மாளிகை தங்காத்தாள் அவர்களும் உடன் பயணித்தனர். அம்மா அவர்களின் அருமை பெருமைகளை நம்மைவிட பேராசிரியர் என்.சுப்பிரமணியன் அவர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். அதன் காரணமாக பாரதியாரைப் பற்றி பேராசிரியர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு விமர்சனப் புத்தகத்தை திருமதி மோகனா அம்மா அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்கள். அதில் மரியாதைக்குரிய பெண்ணியத்தின் பிரதிநிதி திருமதி மோகனா வீரமணி அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் என எழுதியுள்ளார்கள்.

Dedicate To Mrs. MOHANA VEERAMANI
a model - representative of respected
Womanhood.

அய்யா ஆசிரியர் அவர்களும், பேராசிரியர் அவர்களும், அம்மா அவர்களும் இரண்டு மணி நேரம் உரையாற்றியதிலிருந்து ஒருசில தேன்துளிகள்.

1. அவரது இல்லத்திற்குச் சென்ற உடன் பெரியவருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகள் செய்யப்பட்டன. அதன்பின் அவருக்கு அவருடைய மாணவர்களால் கொடுக்கப்பட்ட குறுந்தொகை நூலை அய்யாவிடம் காட்டி அதன் சிறப்புகளைச் சொன்னார்கள். அப்போது அய்யா அவர்கள் குறுந்தொகையில் உள்ள எல்லாப் பாடல்களுக்கான ஆசிரியர் பெயர்கள் கிடைக்கப் பெறவில்லை என்று கூறுகிறார்களே என்றார்கள். அதற்குப் பெயர் தெரியாவிட்டாலும் பாடலின் பொருளை வைத்து புலவரின் பெயரை எழுதி உள்ளார்கள். உதாரணத்திற்கு, ஓர் ஏர் உழவன் என்பது ஒரு புலவரின் பெயர். அவர் ஒரே ஜாதி, ஒரே மாதிரியான மனிதர்கள் இதைப்பற்றி எழுதியுள்ள தால் அவர் பெயரை ஓர் ஏர் உழவன் என வைத்துள்ளார்கள் என்றார்.

2. பேராசிரியர் அவர்கள் என்னுடைய தந்தையின் ஆசிரியர் சூரியநாராயண சாஸ்திரியார் என்றார்கள். உடனே அய்யா அவர்கள் பரிதிமாற்கலைஞர்தானே என்றார்கள். என் தந்தைக்கு, தனது ஆசிரியர் பெயரை யாராவது உச்சரித்தால் அவருக்குப் பிடிக்காது. ஒரு விதவைக்கு அவரது கணவன் பெயரை உச்சரித்தால் அப்பெண்ணிற்குப் பிடிக்காது. ஏனெனில், பெயரைச் சொன்னால் அவரது நினைப்பு வந்துவிடும். அது மனதை மிகவும் வாட்டும் என்றார்கள்.

3.ஆசிரியர் அவர்கள் பெரியவரின் நண்பர்கள் பலரைப் பற்றியும் அவரிடம் வந்து சந்தேகங்களுக்குத் தெளிவைப் பெற்றுச் செல்லும் நண்பர்கள் பற்றியும் குறிப்பிட்டு உங்களுக்கு என்று பெரிய நண்பர்கள் வட்டம் உள்ளது என்று கூறினார்கள். அதற்கு யாருமே வேண்டாம். நீங்கள் ஒருவர் போதும்.  Qualityயா Quantityயா  என்றால் எனக்கு குவாலிட்டிதான் வேண்டும். மானுடம் நம்மை இணைத்திருக்கிறது.

நமக்குக் குறுக்கே யாரும் நிற்க முடியாது என்றார். நீங்கள் Quality பற்றிக் கூறினீர்கள். ஒத்த கருத்துடையவர்கள் உரையாடும் போதுதான் மகிழ்ச்சி உண்டாகிறது. நண்பர் ஒருவர் தோள்மீது கை போடும்போது ஒருவர் உயரமாகவும், ஒருவர் குட்டையாகவும் இருந்தால் முரண்பாடாகத் தான் இருக்கும் என்றார்கள் அய்யா அவர்கள்.

4. ஒரு திருக்குறளும் பெரியவரின் விளக்கமும் தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தான் காணப் படும். ஒருவர் நல்லவரா கெட்டவரா தகுதி உடையவரா என்பதை அவர்களுடைய பிள்ளைகளை (எச்சத்தான்) வைத்துக் கண்டு கொள்ளலாம் என்பது பரிமேலழகரின் உரை. ஆனால் இது உண்மை அல்ல. உலகியல் இல்லையேல்; தகப்பன் சுத்த அயோக்கியனாக இருக்கிறான். மகன் நல்லவனாக இருக்கிறான். ராவணனும் விபீசனனும் ஒரே பெற்றோருக்குப் பிறந்தவர்கள்தான். ஆனால், எதிர் எதிர் கருத்துடையவர்கள். இவர்களை வைத்து அவர்களின் பெற்றோரை எப்படிக் காணமுடியும்? எனவே, எச்சம் என்பதற்குப் புகழ் என்றொரு பொருள் உண்டு. ஒருவன் இறந்த பிறகு அவனுடைய புகழை வைத்து, சாதனைகளை வைத்து அவனைக் காணலாம் என்றார்.

5. ஆசிரியர் அவர்கள் பேராசிரியரிடம் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்ற திருக்குறளைப் பற்றி தங்களின் கருத்தென்ன? ஏனெனில், பெரியார் இக்குறளைக் கடுமையாக எதிர்த்தார் என்றார்கள்.

அதற்குப் பேராசிரியரின் பதில், கவிஞர் என்பவன் Imaginativeவாக இருப்பார்கள். ஆனால், அதில் reality இருக்க வேண்டும். மேலும், இது எழுதப்பட்ட காலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது எழுதப்பட்ட காலத்தில் ஆண் பெண் சமத்துவம் கிடையாது. ஆணாதிக்க உலகமாக இருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன பெண்களின் குணங்களாகக் கருதப்பட்டது. அதனால்தான் வள்ளுவர் அப்படி எழுதினார், இருந்தாலும் இதில் முரண்பாடு உள்ளது.

வேறொரு இடத்தில் கொடுங்கோல் மன்னன் இருக்கும் நாட்டில் மழை பெய்யாது என்கிறார். ஆனால், அந்த நாட்டிலேயே மேற்கூறிய குறலில் கூறப்பட்ட பெண் இருந்தால் மழை பெய்யுமா? எனவே சில முரண்பாடுகள் உள்ளன என்றார்.

6. ஆசிரியர் அய்யா அவர்கள் பஞ்ச பூதங்கள் என்பதற்கான தமிழ்ச் சொல் எது எனக் கேட்டார்கள். பஞ்ச பூதங்கள் என்றால் அய்ந்து நிலங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார் பேராசிரியர். பஞ்ச பூதங்களிலே நீர் நிலம் என்று வருகிறதே என்றார்கள் ஆசிரியர் அவர்கள்.

இங்கு நிலம் என்பதை அடிப்படை (Base) என எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கென்று தனித் தமிழ்ச் சொல் இல்லை. தமிழில் 1,200 வேர்ச்சொற்களே (root words) உள்ளன. அவற்றை ஆராய வேண்டும் என்றார்கள் பேராசிரியர் அவர்கள்.

உங்களோடு அடிக்கடி வந்து பேசி கருத்துகளை அறிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, சிறுசிறு குறிப்புகளை எழுதினீர்கள் என்றால் அது எங்களுக்கும் வருங்கால சந்ததிகளுக்கும் பயனாக இருக்கும் என அம்மா அவர்கள் வேண்டுகோள் வைத்தார்கள்.

முரண்பாடுகள் உடைய ஒரு 10 அல்லது 15 திருக்குறள்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கான கருத்துகளை எழுதினால் அதைப் புத்தகமாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடலாம் என கேட்டுக் கொண்டார்கள் ஆசிரியர் அவர்கள்.

பின்பு பேராசிரியரிடம் கனிவான விடைபெற்றுத் திரும்பினார்கள்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுத் தேடல் in FaceBook Submit ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுத் தேடல் in Google Bookmarks Submit ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுத் தேடல் in Twitter Submit ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுத் தேடல் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.