தலையங்கம் : உலக மக்களின் வாழ்த்துகளோடு நாமும் இணைகிறோம்!

நமது வாழ்த்துகள்!   அமெரிக்காவில் கடந்த 3ஆம் தேதி (நவம்பர்) நடைபெற்ற அதிபர் தேர்தல் உலகத்தவரால் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட ஒன்றாகும். டொனால்ட் டிரம்ப் - சென்ற முறை அதிபர் தேர்தலில் வென்று (குடியரசு கட்சி சார்பில்) மீண்டும் இரண்டாம் முறையாக அப்பதவிக்குப் போட்டியிட்டார். அவருடன் துணை அதிபர் மைக் பென்ஸ் என்பவரும் அக்கட்சியின் சார்பாக அப்பதவிக்குப் போட்டியிட்டார்! டொனால்ட் டிரம்ப் தோல்விக்குக் காரணம் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோபைடன் ஏற்கெனவே துணைக் குடியரசுத் தலைவராக பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது இருந்தவர்; அவர் இப்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அதுபோலவே, தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் குடியேறி, படித்து முன்னேறி, சட்ட அறிஞராகி, செனட்டராகிய திருமதி கமலாஹாரிஸ், துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, - ஜோபைடன் அவர்கள் குழுவினராக, - போட்டியிட்டார்! கடந்த நான்கு ஆண்டின் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் மக்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக வேற்றுமைப் படுத்தும் வகையிலே - கருப்பின மக்கள்மீது காவல்துறை அதீதமாக நடந்துகொண்டதைக் கண்டு, உலகமே கொந்தளித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்தக் கொடுமைக்காக உரிய கண்டனத்தையும், நடவடிக்கைகளையும் எடுக்காமல், பாரபட்சமாக நடந்துகொண்டது உலகமறிந்த ஒன்று! அதிபர் டிரம்ப் நிருவாகத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேரை (அமெரிக்காவில்) பலி கொண்ட கரோனா தொற்றை (கோவிட் 19)  கட்டுப்படுத்த தனது ஆட்சியைப் போதிய அளவில் முடுக்கிவிடாமலும், தக்க ஆலோசனைக்குரிய தக்கார்களைக் கலந்து சிறப்பான வழிமுறைகளைச் செய்து, நோய் மேலும் பரவாமல் தடுக்க உதவாமல் முகக்கவசம் அணிவதைக்கூட தவிர்த்து வந்து, அதனைக் கேலி செய்வதுபோல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல, பற்பல ஆளுமைகளில் நடந்துகொண்டார் என்பது அந்நாட்டு குடிமக்களின் பலரது கருத்து. தோல்வியை ஏற்காது அடம்! விஞ்ஞானிகளும், விஞ்ஞான ஏடுகளும்கூட இவர் மீண்டும் அதிபர் பதவிக்கு வரக்கூடாது என்று கருதும் அளவுக்குச் சென்று, வெளிப்படையாக அக்கருத்தை எழுதும் அளவுக்குச் சென்றதும், பரபரப்பு மிகுந்த இந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு 16 கோடிக்குமேல் வாக்குப் பதிவு நடைபெற்றது. கரோனா கொடுந்தொற்றால் அஞ்சல் வழி வாக்குகள் (Postal Ballots) 5 கோடிக்குமேல் சென்றதும் இதற்குமுன் நடைபெற்றிராத ஒன்று! வாக்கு எண்ணிக்கையின்போதும், போட்டி கடுமையாக இருந்த நிலையும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, நீதிமன்றத்தில், தனக்கு சாதகமாக இருக்க வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு, உச்சநீதிமன்றத்தில் காலியான பதவிக்கு ஒரு நீதிபதியை மரபுக்கு மாறாக, அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக நியமனம் செய்ததும் பெரிய விமர்சனத்திற்குள்ளானது. வாக்கு எண்ணிக்கையில் தனக்கு சாதகமான சூழல் இல்லை என்பதை டிரம்ப் உணர்ந்ததுமே, வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; எனது வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு, பல மாகாணங்களில் வழக்கும் (தேவைப்பட்டால்), இறுதியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு; என்று தோல்வி பயத்தினால் - முன் எப்போதுமில்லாத அளவுக்கு தன்னிலை இழந்து கூற ஆரம்பித்துவிட்டார் டிரம்ப். அமெரிக்காவும், உலகமும் எதிர்பார்த்தபடியே தேவைக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஜோபைடன் அமெரிக்காவின் 46ஆவது குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரோடு துணைக் குடியரசுத் தலைவராக திருமதி. கமலா ஹாரிஸ் என்ற புதுமை புரட்சிப் பெண்ணும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை ஏற்க மாட்டேன் - தனது தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்ற அடாவடித்தனத்தை டிரம்ப் காட்டிக் கொண்டிருந்தார். நம்பிக்கையூட்டும் முதல் அறிவிப்புகள் வெற்றி வீரர் ஜோபைடன், வெற்றி வீராங்கனை திருமதி கமலா ஹாரிஸ் தங்களது வெற்றியை மிகுந்த அடக்கத்தோடு எதிர் கொண்டு, ‘‘அனைவருக்கும் உரிய அரசாக தாங்கள் அமெரிக்காவைக் கட்டமைத்து, பேதமில்லாத ஆளுமையைத் தந்து, புதிய திருப்பத்தை உருவாக்கிடுவோம் - ஜனநாயகத்தைக் கட்டிக் காப்போம்’’ என்பதாக தங்கள் நன்றி அறிவிப்பு உரைகளில் கூறியிருப்பது - பெருந்தன்மையும், அரசியல் கண்ணியமும் மிக்கவை - மக்களுக்கும், உலகத்தவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இது உள்ளது! தனது பதவியேற்புக்குப்பின் முதல் பணியாக முன்பு உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், கரியமில வாயுப் பெருக்கத்தைத் (Greenhouse Emission) தடுத்து, பாரக் ஒபாமா அதிபராக இருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட உலக நாடுகளைச் சம்பந்தப்படுத்திய, உலகை சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் உடன்பாட்டிலிருந்து வெளியேறிய அமெரிக்கா (டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது முறித்துக் கொண்ட நிலையில்) மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் கையொமிட்டு, உலகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியை முன்னெடுப்பதாகவும், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கொண்ட ஆய்வாளர்களைக் கொண்ட குழு ஒன்றை உடனடியாக அமைத்து, கரோனா தொற்று வைரஸ் (கோவிட் 19) பரவாமல் தடுப்பதற்கான உடனடித் திட்டங்கள்பற்றி ஆலோசித்துச் செயல்படவிருப்பதாகவும் கூறியிருப்பது, அம்மக்களுக்கும், உலக மக்களுக்கும் நிச்சயம் ஒரு புது நம்பிக்கையை, தெம்பை ஊட்டக் கூடியதாகும். நிறவெறி எதிர்ப்பாளர் கமலா ஹாரிசின் வெற்றி - பாராட்டுக்குரியது அமெரிக்காவோ குடியேறியவர்கள் நாடுதான் (Nation of Immigrants) என்ற நிலையில், உழைப்பவர்களுக்குரிய பாதுகாப்பற்ற நிலை அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. தேவையற்ற போர் மேக அச்சமும் உலகை அலைக்கழித்தது. அந்த இருண்ட காலம், இந்தப் புதியவர்கள் தேர்வுமூலம் - கிரகணத்திலிருந்து விடுபட்டு மீண்டும் வெளிச்சத்தோடு கதிரவன் ஒளி கிடைப்பது போன்ற உணர்வு - அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகத்தவர்களிடையே உருவாகியுள்ளது! இந்தப் புதிய திருப்பத்தின்மூலம் இந்தியர்களுக்கு 5 லட்சம் குடியேற்ற உரிமை கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது என்பது இனிப்பான செய்தியாகும்! அதைவிட சிறப்பு அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு பெண் - மனித குலத்தில் சரி பகுதியாக உள்ள பாலினத்தினர் மகிழும் அளவில், அறிவும், ஆற்றலும், ஆளுமையும், அங்கீகரிப்பும், ஆட்சித் தலைமைக்குரிய வாய்ப்பையும் பெற்று துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதன்மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது! இதில் நமக்குள்ள இரட்டிப்பு மகிழ்ச்சி - அவர் தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்தவர் என்பதோடு, வாழ்நாள் முழுவதும் ஒரு மனித உரிமைக்கான போராளி - மனிதநேயர் - நிறவெறி எதிர்ப்பாளர் என்பது அவரது மகுடத்தின் தனி ஒளிமுத்துக்களாகும்! உலக மக்கள் வாழ்த்துகளோடு நாமும் இணைகிறோம் குடியரசுத் தலைவர் தேர்தலில் கடும் போட்டி நிலவியபோதும், சரியான முடிவை எடுக்க உதவியவர்களுக்கு, ஜனநாயகத்தின் புதிய பரிமாணம் என்றும் பாதுகாக்கப்படும் _ உலகம் உய்யும் - உலக அமைதிக்கும், மக்களின் கசப்பற்ற கடமையாற்றுதலுக்கும் இந்தக் காலகட்டத்தில் சூழல் அமையும் எனும் மிகுந்த எதிர்பார்ப்போடு, புதியவர்களுக்கு உலகம் சொல்லும் வாழ்த்துகளோடு நமது வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து அமெரிக்க ஜனநாயகம், மீட்கப்பட்டு, நல்ல வண்ணம் தேறி, புது நம்பிக்கை, புத்தொளியைத் தந்து, புது உலகம் காண உதவ ஆயத்தமாகியுள்ளது என்பது நற்செய்தியாகும்! வெற்றி வாகை சூடியவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்!   - கி.வீரமணி, ஆசிரியர்.செய்திகளை பகிர்ந்து கொள்ள

சிறுகதை : ஈரோட்டுப் பாதை!

துறையூர் க.முருகேசன்   டேய் குபேரா! குபேரா! வேலைக்காரனைக் கூப்பிடும் தோரணையா இது? - பிச்சைக்காரனுக்கு! விஜயா கோபக்காரி! அவள் முன்தானா அப்படிக் கூப்பிட வேண்டும்? சிவனாருக்குப் போல் நெற்றிக்கண் இருந்தால் எரித்திடுவாளே! பிச்சைக்காரன் அவர் பெயர் _ பெரிய கோடீஸ்வரர். குபேரன் அவன் பெயர் _ பிச்சைக்காரனின் பண்ணை வேலை ஆள்! என்ன கொடுமை! நீங்கள் அவனை குபேரா! குபேரா! என்று கூப்பிடுறீங்க, உங்கள் நண்பர்கள், சொந்தக்காரரெல்லாம் உங்களை பிச்சைக்காரா பிச்சைக்காரா என்கிறார்கள்? தூக்கில் அல்லவா தொங்க வேண்டும் போல் இருக்கிறது என் உணர்வு. என்ன செய்யலாம் மகளே, காரணத்தோடுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். எங்கம்மாவுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து இறந்து விட்டனவாம். நான்காவதாக நான் பிறந்தேனாம். அந்தக்கால அய்திகப்படி என்னை  தாய்மாமன் கையில் கொடுத்து, பிச்சையாக என் அப்பன் கையில் போடுவது போல் போடச் சொல்லி, அதற்கு ஈடாக குருணி தவிட்டை என் மாமன் கையில் கொடுத்து இருக்கிறார். என் பாட்டி பிச்சைக்காரன் என பெயர் வச்சுட்டாள்! அவன் அப்பன் குபேர பூஜை செய்ததால் அவன் பிறந்தானாம். குபேரன் என்று அவனுக்குப் பேர் வைச்சுட்டாங்க. இதை எத்தனையோ முறை சொல்லிட்டேன், உன் சினம் சிவனுக்கு மாதிரி வருது, எங்கு திரிபுரத்த எரித்திடப் போறியோ! போம்மா பள்ளிக்கூடம், என்று விஜயாவை அதட்டினார். விஜயா பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி. குபேரனின் மகன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன். இருவரும் ஒரே வகுப்பு. அரையாண்டின் மதிப்பெண் சான்றிதழைக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் கந்தசாமி. விஜயா வெளி வாயிற்படியில் நின்றுகொண்டு அய்யா அய்யா என்றாள், உள்ளே வர. எல்லாருடைய மதிப்பெண் சான்றிதழ்களையும் கொடுத்துவிட்டு கபிலன், கபிலன் என்று குரல் கொடுக்கவும், நைந்த கால்சட்டை, கறைபடிந்த மேல் சட்டையோடு, ஆசிரியர் முன் நின்றான் கபிலன். கபிலனிடம் மதிப்பெண் சான்றிதழைக் கொடுத்த ஆசிரியர், “அரையாண்டில் மட்டுமல்ல, இவன் பள்ளியில் சேர்ந்த நாளில் இருந்து இதுவரை மதிப்பெண் பட்டியலில் இவன்தான் முதல் ‘ரேங்க்’. நாளை மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ முதல் மாணவனாக வந்து நமது பள்ளிக்குப் பெருமை சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்றார். எல்லா மாணவர்களும் சிரித்துக் கொண்டு, “அவன் பேர் கபிலன் இல்லை; தபால் பெட்டி என்றார்கள். விஜயா அதை ஆமோதிப்பதுபோல் கைதட்டிச் சிரித்தாள். மாணவர்கள் சிரிப்பு எகத்தாளமில்லை. மாணவர்களிடையே எல்லாருக்கும் பட்டப்பெயர் இருக்கும், அவன் கால்சட்டையின் பின்புறம் ஒட்டுத்துணி போட்டுத் தைத்து அது கொஞ்சம் கிழிந்து ஓட்டையாக இருந்ததால் தபால் பெட்டி என்கிற பட்டப் பெயர் அவனுக்கு. விஜயாவின் சிரிப்பு அப்படியா! எகத்தாளம்! ஏளனம்! அவள் வீட்டு வேலைக்காரன் குபேரனின் மகன்தானே கபிலன். பட்டுப் பாவாடையுடன் பள்ளி வருபவளுக்கு, ஒட்டுத் துணியோடு உருப்படியற்ற சட்டையில் இருப்பவனைக் கண்டால் ஏளனம் வராதா? குபேரனுக்குச் சாப்பாடு கொண்டு வரும்பொழுதெல்லாம், உருட்டி மிரட்டி வேலை வாங்கி இருக்கிறாள். அப்பன் பெயர் குபேரன்; அவன் மகன் பிச்சைக்காரனினும் கேவலம். நாம அப்பன் பெயர்தான் பிச்சைக்காரன். நாம எப்படி பட்டாடையில் ஜொலிக்கிறோம்! அவனுக்கு ஆசிரியரின் பாராட்டு மழையா? கூடாது கூடவே கூடாது! ஆளைப்பாரு, செம்பட்டை முடி _ செம்மண் உடம்பு _ அழுக்குத் துணி. நாம் நாயை சந்தன சோப்பில் குளிப்பாட்டுகிறோம். அவன் துணி சோப்பு போட்டுக் குளிக்கிறானோ... குழை மண் குட்டையில் புரண்டு வாரானோ! இவன்தான் வரும் தேர்வில் பள்ளிக்குப் பெருமை சேர்க்கப் போறானாம்! இது ஆசிரியரின் புரட்டுப் பேச்சு என்ற ஏளனம்தான் அவளுக்கு. இறுதிப் பரிட்சையில் மாவட்டத்தில் முதன்மை! மாநிலத்தில் மூன்றாவது மாணவன் கபிலன். விஜயா பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி. பத்திரிகையில் அவன் புகைப்படத்தோடு பாராட்டுச் செய்தியில் அவன் வாழ்க்கைச் சுவட்டைப் படித்தவர்கள் வாழ்த்து மழை பொழிந்தார்கள். இளகிய, இரக்கம் கொண்டு ஒருவர் அவன் படிப்புச் செலவு என்னுடையது என்றார். அழகிய சீருடைகளைக் கொண்டு வந்து கொடுத்தோர், வெளியில் போட்டுக் கொள்ள புதிய ஆடைகளை அளித்தவர்கள், அவனை விடுதியில் சேர்க்கத் துணை புரிந்தோர் என ஒரு பட்டியலே நீண்டது. பல பள்ளிகள் போட்டி போட்டு அழைத்தாலும் தரமுள்ள பள்ளியில் சேர்ந்தான். பிச்சைக்காரன் விஜயாவைப் பார்த்து, “பார்டர் மார்க்கில் பாஸ் நீ! நம்ம வீட்டு வேலைக்காரனின் மகன் பத்திரிகையில் அவன் படம் வெளிவரும் அளவிற்கு மார்க்கு வாங்கி பாஸ் ஆகி இருக்கிறான். உன் வீட்டு வேலைக்காரன் மகன்தாண்டா மாநிலத்தில் மூன்றாவது ‘ரேங்க்’ என வாழ்த்து சொல்கிறவன், உன் மகள் மார்க் என்ன என்று கேட்கும்பொழுதுதான் வெட்கமாக இருக்கிறது. சரி, சரி, பதினாறு வயசு; இன்னும் இரண்டு வருடம் பள்ளிக்கூடம் போ! உன் மாமன் மகன் மதியழகனுக்கே உன்னைக் கட்டி வைத்துடுறேன்’’ என்றார் சிரித்துக் கொண்டே... நம்ம மகன் மாநிலத்தில் மூன்றாவது, மாவட்டத்தில் முதல் ஆள்! நம்ம முதலாளியின் மகள் ஒப்புக்கு பாஸ்! இதை அவரால் ஜீரணிக்க முடியாது, தக்க சமயம் வரும்பொழுதெல்லாம், நக்கலும் நையாண்டித்தனமாக நம்மளைக் கேலி பேசுவார்! வேலையை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்ற கூலி வேலைக்குப் போனான், குபேரன். இன்று கபிலன் கல்லூரிப் படிப்பை முடித்து, அரசு தேர்வாணையப் பரிட்சையில் தேர்ச்சி பெற்று, அரசின் உச்ச அலுவலகத்தில் உயர்பதவி! கபிலன் ஊருக்கு வருவான், வீட்டில் சில மணி நேரங்களே இருந்தாலும், வேண்டியவர்களைப் பார்க்காமல் செல்ல மாட்டான். தன்னால் முடிந்த உதவிகளை தன்னைப் போல ஏழ்மையில் வாடும் குழந்தைகளின் கல்விச் செலவுக்குத் தேவை அறிந்து கொடுப்பான். பொது சேவை, பொதுமக்கள் குறைபாடுகளைப் போக்க தக்க ஆலோசனைகளும் வழங்குவான். அவன் அதிகாரத்திற்கு உட்பட்ட உதவிகளைச் செய்து கொடுப்பான். தீர்க்க முடியாத பிரச்சனை _ அந்த ஊரில் பொதுவரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் மாடி வீடும், மச்சு வீடும் கட்டி இருப்பது! அவர்கள் எல்லாம் அரசியல் செல்வாக்கில் அசகாயசூரர்களாக விளங்குபவர்கள், எதிர்த்துக் கேட்க ஊர்க்காரர்கள் திராணியற்றவர்கள் அல்ல என்றாலும், எதிர்த்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என தன் செல்வாக்கால், எதிர்ப்பவர்களை காவல்துறை மூலம் கசக்கிப் பிழிந்திடுவார்கள் என்பதால் எவரும் எதிர்க்கவில்லை. என்றாலும், எல்லோரையும்விட பாதிப்பு பிச்சைக்காரனுக்குத்தான். அவர் நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள குட்டையில்தான் அந்த நீர் சங்கமமாகி ஊற்று நீராக அவர் கிணற்றை வற்றாத சமுத்திரம் போல் வைத்திருக்கிறது. நாளை அது வறண்டு பாலையாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருந்தவருக்கு கபிலனின் ஞாபகம் வந்தது. கபிலனைக் கூப்பிட்டால் வீட்டுக்கு வருவான் _ நம்ம வீட்டில் வேலைக்காரனாக இருந்தவனின் மகன். அன்று நாம கொடுத்த காசுலதானே அவன் அப்பன் உப்பு, மிளகாய், புளி, அரிசி என வாங்கிப் போட்டிருப்பான் ? அந்த நன்றி அவனிடம் இருக்கும். இல்லை என்றால், ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை!’ என்று சொல்லி இருப்பார்களா? ஆனால் அவன் வந்தால், நம்ம அளவுக்கு சேர் போட்டுத்தானே உட்கார வைக்க வேண்டும். நாயைக் குளிப்பாட்டி நடு மனையில் வைத்த கதையாகி விடுமே! அவனோ அரசாங்க பெரிய அதிகாரி! நிற்க வைத்துப் பேச முடியாது. அரசாங்க கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பார்கள். அவனை நிற்க வைத்துப் பேசினால் வரத்து வாய்க்காலையே மாட மாளிகை ஆக்கிடுவான். அவனிடம் பேசாவிட்டால், அரசியல் கட்சிக்காரன் நம்ம நிலத்துக்குப் பக்கத்துக் குட்டையையே ‘பிளாட்’ போட்டு வித்துடுவான் என்று எண்ணியவாறே குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். ஃபில்டர் காபியின் நறுமணம் நாசியை நெருடவும், நாற்காலியில் அமர்ந்தார். வேலைக்காரி வேலம்மாள்தான் குலுங்கிச் சிணுங்கித் தன் பொற்கரங்களால் காப்பி கொண்டு வந்து கொடுப்பாள் என்று நினைத்தார். வெள்ளைச் சேலையோடு விஜயா வந்தாள், காப்பி டம்ளரை கையில் ஏந்தி! அதைப் பார்த்தவுடன் கண்ணீரோடு மவுனமானார். “கபிலனும், விஜயாவும் பிச்சைக்காரனின் இதயத்தின் இரு பக்கமும் அமர்ந்து கொண்டு கேள்விக் கணைகளால் துளைப்பதுபோல் அவருக்கு ஒரு பிரமை! கபிலன் கேட்கிறான்...... “ஏங்கையா, உங்க மனசுல என்னைப்பற்றி எப்படியெல்லாம் நினைக்குறீங்கன்னு உங்க முகமே சொல்லுது, நம்ம பண்ணையில வேலை செய்தவன் மகன் படிப்பிலே எல்லோரையும் முந்தி பட்டதாரியாக அரசாங்கப் பணியில் பெரிய பதவியில் அமர்ந்து இருக்கிறான் என்பதற்காக அவனை அழைத்து நடு மனையில் நாற்காலி போட்டு உட்கார வைத்து சரிசமமாக உட்கார்ந்து பேசுவதா, என்பதுதானே உங்கள் நினைப்பு? அது உங்க தவறல்ல; உங்கள் முன்னோர்களின்  வழிவந்த வர்ணாசிரம மரபணுக் கோளாறு! அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த முடியாது! எங்களுடைய வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வாழ்நாளை அர்ப்பணித்த அய்யா பெரியார், அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராசர் இவர்களுடைய வழியிலே போய்க் கொண்டிருப்போம்! ஆனால், எங்களுடைய முன்னேற்றத்திற்கு எது தடைக்கற்களாக இருக்கிறதோ! அதை எங்கள் ஈரோட்டுப் பாதையிலே தகர்த்துக் கொண்டே செல்வோம்.’’ விஜயா பேசுவதாகத் தோன்றுகையில்..... “நீங்கள் பேசாதீர்கள்! நான் பேசுகிறேன் என்றாள் விஜயா. அப்பா, டிகிரி காப்பியின் மனம் நாசியில் ஏறும்போது வேலைக்காரியின் ஞாபகம்தானே வந்து இருக்கும்? அவள் _ எவள் பெற்ற பிள்ளையோ _ எப்படி இருந்தாலும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு சக்தி உங்களுக்கு! அதை எப்படி விவரித்துச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை! நீங்கள் அப்பாவாக இருப்பதால் அந்த அசிங்கமான வார்த்தைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அவளைவிட இளம்பெண் நான். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உணர்வு இருக்கிறதோ அதுதானே எனக்கும் இருக்கும? ஆண்மையின் தூண்டுதலால் வேலைக்காரியின் வரவை இந்த வயதிலும் எதிர் நோக்குகிறீர்கள். இருபத்தைந்து வயது குமரி நான்! இல்லற சுகத்தில் ஈடுபடாமல் இருந்தவள் என்றால் காமசுகம் என்னவென்று தெரியாமல் இருந்து இருக்கலாம். இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெண்கள் முன்னேறும் காலத்தில், உங்கள் வர்ணாசிரம மரபு பெண்களுக்குக் கல்வி எதற்கு என்று பதினெட்டு வயதிலேயே மணம் முடித்து வைத்தீர்கள் _ உறவு அற்றுப்போகக் கூடாது என்பதற்காக என் மாமன் மகன் மதியழகனுக்கு. எப்படி? ஆச்சார முறைப்படி, இரண்டு பேரின் ஜாதகமும் அப்பழுக்கற்று பூரண சுகத்தில் இருக்குது, ஆயுள் தொண்ணூற்றுக்கு மேல் என்று ஒரு ஜோதிடனல்ல, பத்துப் பேர் சொல்லியதால்! பாவம், மாங்கல்யம் என் கழுத்தில் ஏறிய மூன்றாம் வருடமே மாரடைப்பால் இறந்து விட்டார். போனவர் சும்மா போகவில்லை. ஒரு பெண் குழந்தையை வாரிசாகக் கொடுத்துவிட்டுப் போனார். அவளும் பிஞ்சிலேயே உதிர்ந்து விட்டாள் உங்கள் குலமரபுப்படி வெள்ளைச் சேலையை அவிழ்த்தெறியவும் முடியாது; அடுத்தவனுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கவும் முடியாது. கபிலன் சொன்னாரே, அந்த ஈரோட்டுப் பெரியார், அவர் படிக்காத புராணம் இல்லை, அறியாத சடங்கு சம்பிரதாயமில்லை, ஒரு ஆன்மிகக்காரனைவிட அந்தப் பகுத்தறியும் பெரியார்தான் அத்தனை கசுமாலங்களையும் படித்து, எப்படி மனித இனத்துக்குள்ளேயே ஜாதிகள் பிரித்து, தீண்டத்தகாதவனாக ஒரு பிரிவினனை ஆக்கி, இவன் வசதி வாய்ப்பிற்காக அவனை அடிமைத்தொழில் செய்ய வைத்துக் கொண்டானோ அதைப் போலத்தான் பெண்களையும் _  அவள் தாய், தாரம், பிள்ளை என்பதெல்லாம் கிடையாது, அவளும் சூத்திரச்சி! ஆண்களுக்கு அடிமை, போகப் பொருள் என எழுதி வைத்திருக்கிறான். ஆண்கள் செத்தால் அதோடு அவன் மனைவியும் அவன் சிதையிலே விழுந்து சாக வேண்டும். அவனுக்கு முன்பே அவன் மனைவி செத்தால் அவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். பிரிட்டிஷார் காலத்திலேயே இந்தக் கொடுமையைத் தடை செய்து விட்டார்கள். இல்லை என்றால் எத்தனையோ பெண்களைச் சிதையிலே தள்ளிக் கொன்று இருப்பார்கள். இது ஆரிய சூழ்ச்சி, ஆரிய மாயை! நம்மவன் அந்த ஆரிய சூழ்ச்சியை ஏற்றுக்கொண்டு ஜாதி பார்க்குறான், தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான், இன்னமும் பெண்களை முன்னேற விடாமல் போகப் பொருள் ஆக்குகிறான் என்றால் என்னப்பா! சொல்கிறீர்? நான் மதியழகனின் போகப் பொருள்! அவன் கரங்கள் பட்ட உடலில் வேறு கரங்கள் படக்கூடாது என்பதற்காக இந்த வெள்ளைச் சேலை வேலி! ஆனால், நீங்கள் இந்த வயதிலும் வேலைக்காரி மேல் மோகம் கொள்ளலாம். என்னப்பா நீதி?’’ பிச்சைக்காரன் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்னங்கப்பா ஆழ்ந்த யோசனை’’ என்றாள் விஜயா. “ஒன்றுமில்லை, நேற்று கடை வீதியில் ஈரோட்டுப் பெரியார் கட்சிக் கூட்டம் நடந்தது. நான் கொஞ்ச நேரம் நின்று கேட்டேன். ஒவ்வொருத்தரும் பேசிய பேச்சு என் நெஞ்சைச் சுட்டுவிட்டது. அந்தப் பேச்சை உள்வாங்கிப் பார்த்தேன், அவ்வளவுதான்! கொண்டாம்மா காப்பியை! அப்புறமா குபேரனிடம் சொல்லி கபிலனை வீட்டுக்குக் கூட்டி வாரேன். அவனால்தான் அந்த வரத்து வாய்க்கால் பிரச்சினை தீரும்’’ என்றார். “அப்பா, இதுவரை அந்தத் தெருப்பக்கம் காலடி எடுத்து வைக்கலயே!’’ என்றாள் விஜயா. “தெருவாவது மண்ணாங்கட்டியாவது, மனுசன்னா எல்லாம் ஒன்னுதான்! இதுல உயர்ந்தவன் என்ன, தாழ்ந்தவன் என்ன? அதெல்லாம் எவனோ எழுதிய கட்டுக்கதை என்றார். விஜயா காப்பியைக் கொடுத்துவிட்டு கட்டிலில் சாய்ந்தாள்! கடந்த கால வாழ்க்கை கண் முன் நிழலாடியது. கபிலனை உருட்டி மிரட்டி வேலை வாங்கியது, கேலி பேசியது, நம்ம பண்ணை அடிமையின் மகன்தானே என்று எகத்தாளாக நினைத்தது, இன்று நாம் நினைத்ததற்கு நேர்மாறாக அவன் தகுதியும் திறமையும் கூடி, அவனைக் காண்பவர்கள் எல்லாம் கைகட்டி மரியாதை செய்வதை நினைத்து, அவனைக் கண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதிலேயே அவள் மனம் ஓடியது. மதியழகனிடம் வாழ்ந்தது மூன்று வருட வாழ்க்கை! காமசுகத்தோடு கொஞ்ச காலம் ஓடினாலும், அவனால் சுமந்து, வளர்த்த கருவும்  என் வாழ்க்கைக்குத் துணையில்லாமல் போய்விட்டது. ஒரு சில நேரங்களில் அதை கனவாக நினைத்து மறந்து விடுகிறேன். ஆனால், அவன் சாவிற்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளைச் சேலை வேலிதானே பெண்மையையே கேலிக் கூத்தாக்குகிறது! என்று நினைத்துக் கண்ணீர் விட்டாள். கபிலனும், பிச்சைக்காரனும் நேருக்கு நேர் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்! கடந்த காலம் முதல் நடக்கும் காலம் வரை நிகழ்வுகள் அசை போட்டது. அதே வெள்ளைச் சேலையில் காப்பி டம்ளரோடு விஜயா நின்றாள்! இது என்ன கோலம் என்பதுபோல் விஜயாவையும் பிச்சைக்காரனையும் மாறி மாறிப் பார்த்தான் கபிலன். விஜயா கபிலனுக்கு காப்பி கொடுக்கும்பொழுது, அவள் கண்ணீர்த் துளிகள் காப்பியோடு கலந்தது. “நான் ஊர் பஞ்சாயத்துத் தலைவன், அதனால்தான் எங்கள் குலமரபு மாறாமல் விஜயாவை வளர்த்து திருமணம் செய்து கொடுத்தேன். அவள் தலையெழுத்து இப்படி ஆகிவிட்டது. பல வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கும் நிலை என்னுடையது. ஊரே ஒரு பாதையில் செல்லும்பொழுது நான் அந்தப் பாதையை மாற்றினால்... உன் வீட்டிற்கு ஒரு நியாயம்; ஊருக்கு ஒரு நியாயமா? என எதிர்த்துக் கேள்வி கேட்பான்! அதனால்தான் வெள்ளைச் சேலை! எங்கள் குலவழக்கப்படி தாலி அறுத்தவளுக்கு மறு திருமணம் செய்யக் கூடாது’’ என்றார். “கபிலனும் விஜயாவும் எங்கே, எப்படி சந்திச்சுப் பேசினார்கள் என்பதெல்லாம் பரம ரகசியம்’’ விஜயா இனி பிச்சைக்காரனின் மகளுமில்லை; மதியழகனின் முன்னாள் மனைவியுமில்லை. கபிலனின் சட்டபூர்வமான துணை. ஜாதி, மதம், வர்ணம், வன்கொடுமை என எதுவும் அவளை நெருங்கவும் முடியாது. நெருங்கினாலும் சட்டத்தின் வல்லமையால் தவிடு பொடியாகிவிடும். ஊர் கூடியது. பஞ்சாயத்தில் இப்படித்தான் பிச்சைக்காரன் பேசினார். “அவள் ஓடுகாலி ஆன பிறகு என் மகள் என்பதை மறந்துவிட்டேன்! இனி என் உயிர் போனாலும் என் பிணத்தின் பக்கம் அவளை விடாதீர்கள்! என் ஒன்றுவிட்ட பங்காளி முறை அண்ணன் மகன்கள் கொள்ளி போட்டுவிட்டு சொத்து சுகத்தை அனுபவித்துக் கொள்ளட்டும்! இப்படி என் வாயிலிருந்து வரும்... அதை வைத்து அவளை ஓரங்கட்டி என் சொத்து சுகத்தைப் பிடுங்கலாம் என்றால் அது முடியாது. அவள் என் கூட இருந்து இருந்தால், நீங்கள் நினைப்பதுபோல் நடந்து இருக்கும். காரணம், அவளுக்குப் பிறகு வாரிசு இல்லை _ அவள் ஒரு நடைபிணம் என்பதால். ஆனால், அவள் தன் வாழ்க்கைக்கு உயிர் ஊட்டி வசந்தத்தைத் தேடிக் கொண்டாள். “நீங்கள் என்னை ஒதுக்குவதற்குள், நானே ஒதுங்கிப் போகிறேன் _ உங்கள் ஜாதிக் கட்டில் இருந்து’’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். வரத்துவாரியின் ஆக்கிரமிப்பை அகற்ற அரசாங்கம் உத்தரவு கொடுத்த பிறகு, எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கி பத்து வருடமாக நடந்த வழக்கில் திடீரென்ற உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. ஆக்கிரமிப்பை அகற்ற எந்தத் தடையும் இல்லை, உடனடியாக அகற்றணும் _ அதுவும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் என்று. ஊர் கூடியது. கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் அதிகாரி, கிராம நிருவாக அதிகாரிகள் என ஒரு பட்டாளமும், ஊர் மக்களும் சேர்ந்து நின்றார்கள் _ கனரக வாகனத்துடன்! காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வருகையை எதிர்பார்த்தது, அந்தக் கூட்டம். ஆட்சித்தலைவரின் வாகனம் திடீரென்று அங்கு வந்து நின்றது. புதியதாகப் பொறுப்பேற்ற பின் ஆட்சித் தலைவருக்கு இதுதான் முதல் உத்தரவு. மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மா காரைவிட்டு இறங்குகிறார். கோட்டாட்சியர் முதல் கிராம நிருவாக அதிகாரி வரை மரியாதை செய்த பிறகு கிராம மக்களின் சார்பாக பிச்சைக்காரன் சால்வையை அம்மாவிடம் கொடுக்கிறார். அம்மா ஏறெடுத்துப் பிச்சைக்காரனைப் பார்க்கிறார்... மாவட்ட ஆட்சித்தலைவர் _ பிச்சைக்காரனின் மகள் விஜயா! கூலிக்காரன் மகன் பெரிய அரசு அதிகாரி, அவன் எஜமானின் மகள் மாவட்ட ஆட்சித் தலைவர்! விஜயா சிரித்துக்கொண்டே சொன்னார், “அப்பா, வெள்ளைச் சேலையில் இருந்த இந்த விஜயா மாவட்ட ஆட்சித்தலைவர்; கூலிக்காரனின் மகன் பெரிய அரசு அதிகாரி! இது ஈரோட்டுப் பாதையால் வந்த உயர்வு’’ என்று. பிச்சைக்காரன் மவுனப் புன்னகையில், “இதில் என் பங்களிப்பு எப்பொழுது ஜாதியைத் தாண்டி வெளிவருகிறதோ, அப்பொழுதுதான் சமூக மாற்றம் உண்டாகும்’’ என நினைத்தார்.செய்திகளை பகிர்ந்து கொள்ள

பெரியார் பேசுகிறார்: உண்மையான தர்மம்

 தந்தை பெரியார் இந்தக் கண்ணனூரிலுள்ள பழைமையானதும், மிக்கப் பொது ஜன சேவை செய்து வருவதுமான உங்களுடைய செவ்வாய் தரும சமாஜத்தின் தலைமை வகிக்கும் பெருமையை எனக்குக் கொடுத்ததற்காக முதலில் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமாஜத்தின் மூலமாக நீங்கள் செய்திருக்கும் பொது நல சேவைக்கு உங்களை மிகவும் பாராட்டுவதோடு, இங்குள்ள பொது ஜனங்களையும் இன்னும் அதிகமாக ஒத்துழைத்து உங்களுக்கு வேண்டிய சகாயம் செய்து, இச்சமாஜத்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும்படியாய்ச் செய்ய வேண்டுமாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகித்ததன் மூலம் எனது சொந்த அபிப்பிராயமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதோடு, நானும் சொல்ல வேண்டியதும் என் கடமையாக இருக்கிறது. உங்களுடைய சமாஜத்தின் பெயராகிய தர்மம் என்பது பற்றியும், இரண்டு பெரியோர்கள் உபந்யாசம் செய்த விஷயங்களாகிய பெண்கள் சுதந்திரம், தர்மம், கடவுள் என்பது பற்றியும், முறையே பேசுவது பொருத்தமானதென்று கருதுகிறேன். ஆகையால், அவற்றைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்கிறேன். முதலாவதாக தர்மம் என்பது பற்றிச் சொல்கிறேன். சகோதரர்களே! தர்மம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் தர்மம் என்கின்ற வார்த்தை பெரிதும் உபயோகப் படுத்தப்படுகிறது. அதைப் பற்றி பலர் பலவிதமாகச் சொல்லவும், எழுதவும் படுகிறது. ஆனால், சாதாரணமாக தர்மம் என்பதற்குப் பொருள் கூறும் போது, தர்மம் என்பது ஒரு மனிதனின் கடமைக்கும், மனிதனின் இயற்கைத் தன்மைக்கும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செய்ய வேண்டிய உதவிக்கும், மற்றும் ஒரு மனிதன் ஆத்மார்த்த சாதனம் என்னும் நலமடைவதற்குச் செய்ய வேண்டிய கடமை என்பதற்கும், பொதுவாக இயற்கை யென்பதற்கும், உபயோகப்பட்டு வருவதோடு, பெரும்பாலும் பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும், ஏமாற்றுக்காரர்களும் பிழைப்பதற்கும் ஒரு சாதனமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எது எப்படியிருந்த போதிலும், நான் அதை நீங்கள் எந்த வழியில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்று கருதுகிறேனோ அதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுகிறேன். அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்கிற உதவியை தர்மம் என்று கருதி, அதையே உங்கள் கடமையாகவும் கொண்டு நடந்து வருகிறீர்கள் என்பதாகவே நினைத்து அதைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன். ஒரு மனிதன், மற்றொரு மனிதனுக்குச் செய்யும் உபகாரம், கடமை என்பவை, காலதேச வர்த்தமானத்துக்கேற்றது போலும், அவ்வப்போது மாறுதலடையக் கூடிய ஒரு தன்மையுடையதேயல்லாமல் மற்றபடி தர்மம் என்பது ஏதோ ஒரு காலத்தில் யாராலோ, யாருக்கோ குறிப்பிடப்பட்டு அதேபடிக்கு நடந்து கொண்டிருக்க வேண்டியது அல்லவென்பதை உணர்ந்து கொண்டால் தான், நாம் உண்மையான தர்மம் செய்தவர்கள் ஆவோம் என்பதோடு, நம் தர்மமும், மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்படக் கூடியதாகும். அப்படிக்கில்லாமல் நம் பெரியோர்கள் செய்து வந்தார்கள், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள், அவதாரங்களும், ஆச்சாரிகளும் எழுதி வைத்தார்கள், வெகு காலமாக நடந்து வருகிறது, அநேகம் பேர்களும் செய்து வருகிறார்கள் என்கின்றதான காரணங்களை வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக அதன் பலாபலன்களைக் கவனியாமல் செய்து கொண்டிருப்பது வீண் வேலையாகும். ஏனெனில், ஒரு காலத்தில் தர்மம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள்தனமாகத் தோன்றப்படுவதை நேரில் பார்க்கிறோம். உதாரணமாக மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேகரித்து, அவற்றைப் பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுத்து ஆசிர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தர்மம் என்று கருதப்பட்டு  வந்தது. ஆனால், அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும், ஏமாந்ததனம் என்றும் தோன்றி விட்டது. அதுபோலவே ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப் படுத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது, மோட்சத்தில் இடம் சம்பாதித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அதை முட்டாள் தனமென்றும், தேசத்திற்குக் கெடுதியை விளைவிக்கத்தக்கதான துரோக மென்றும் தோன்றி அநேகர்களுக்குப் பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்தியசாலை முதலியவற்றிற்கு உபயோகப்படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றி விட்டது. ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து, நான்கு வேளை சாப்பிட்டு விட்டு சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு உத்திராட்சத்தையும், துளசி மணியையும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது. ஆனால், இப்போது அது திருடர்களுடையவும், சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடு கிறவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. ஒரு காலத்தில் கள்ளையும், சாராயத்தையும் குடிக்கக் கூடியதாகவும், ஆட்டையும், எருமையையும் பலியாக சாப்பிடக் கூடியதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதைக் கும்பிட்டுக் கொண்டு அவற்றை, அதற்கு வைத்துப் படைத்துக் கொண்டு, தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப்பட்டு வந்தது. இப்பொழுது அவை காட்டுமிராண்டித்தனமென்று உணர்ந்து மக்களுக்கு உணர்த்தப்பட்டு வருகிறது. மற்றும் ஒரு கூட்டத்தாருக்கு ஆடும் பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது. மாடு தின்பது அதர்மமாயிருக்கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தர்மமாக இருக்கிறது. பன்றி தின்பது அதர்மமாக யிருக்கின்றது. வேறொரு கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையும் சாப்பிடுவது தர்மமாக இருக்கிறது. பிறிதொரு கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையானாலும் சாப்பிடுவது அதர்மமாயிருக்கிறது. ஒரு மதக்காரருக்கே மதக் கொள்கைப் படி கள்ளு, சாராயம் குடிப்பது தர்மமாக இருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு அவற்றைத் தொடுவது அதர்மமாக இருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே விவாக சம்பந்த  முறையிலும்  ஒரு  கூட்டத்தார் அத்தை  பெண்ணை மணக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன், பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள். இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை மணக் கிறார்கள். ஒரு வகுப்பார் தங்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள் கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தைத் தங்கள் குலதர்மமாகக் கொள்ளுகிறார்கள். வேறொரு கூட்டத்தார் பார்ப்பனர்களை யோக்யமற்றவர்களென்று வெறுக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதனம் என்று கருதுகிறார்கள். இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தர்மமாகக் காணப்படுகிறது. மேலும், இதுபோலவே சாஸ்திர விசயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமூகத்திற்குக் கடவுளால் அளிக்கப்பட்ட தர்மமென்று சொல்கிற மனுதர்ம சாஸ்திரம், வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அவை சுயநலக்காரர்களின், சூழ்ச்சிக்காரர்களின் அயோக்யத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்துக் கொளுத்தப்படுகிறது. இதுபோலவே காலத்திற்கும், தேசத்திற்கும், அறிவிற்கும் தகுந்தபடி தர்மங்கள் மாறுவது சகஜமாயிருக்கிறது. உதாரணமாக, உங்கள் சமாஜத்திலேயே ஒரு அதிசயமான மாறுதலைப் பார்க்கிறேன். அதாவது மக்கள் இறந்து போய் விட்டால் அவர்களை வைத்து சுடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு அழகான ஒரு பெட்டி செய்து வைத்திருக் கிறீர்கள். இந்தப் பெட்டியை அநேகருக்கு உதவி அநேக பிணங்களை அதில் வைத்து வண்டியில் கொண்டு போனதாக உங்கள் ரிப்போர்ட்டில் வாசித்திருக்கிறீர்கள். இதை இந்துக்கள் என்பவர்கள் சற்று கேவலமாகக் கருதுவதுண்டு. எனக்கு அய்ந்தாறு வருடமாக இம்மாதிரி செய்ய வேண்டுமென்கிற ஆசையிருந்து வருகிறது. ஆனால், நீங்கள் செய்திருப்பது பலருக்குப் புதிதாகவும், அதர்மமாகவும் தோன்றினாலும் சீக்கிரத்தில் இந்தப் பழக்கம் எங்கும் தர்மமாகி விடுமென்று கருதுகிறேன். ஆகையினால் தர்மமென்கிற விசயத்தில் மிக அறிவைச் செலுத்தி உலகத்தையெல்லாம் நன்றாய் ஆராய்ந்தறிந்து, மிக்க அவசியமென்றும், பயன்படத் தக்கது எதுவென்றும் தெரிந்து செய்வது தான் உண்மையான தர்மமாகும். ஆகவே, இதுவரையில் நீங்கள் செய்து வந்திருக்கும் தர்மங்களைப் பாராட்டுவதோடு இனியும் கால, தேச, வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எல்லா மக்களுக்கும் பயன் தரத்தக்க தர்மமாகவே செய்து வருவீர்களென்று கருதுகிறேன். 31.3.1930 அன்று கண்ணனூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (குடிஅரசு 8.6.1930).செய்திகளை பகிர்ந்து கொள்ள

பெண்ணால் முடியும் : நோபல் பரிசு பெறும் பெண்கள்

2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் நான்கு பெண்கள் வெவ்வேறு பிரிவுகளில் நோபலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இருவரும் அறிவியல் பிரிவில் நோபல் பரிசைப் பெறும் முதல் பெண்கள் குழு என்கிற பெருமையைப் பெற்றிருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். ஆண்ட்ரியா கெஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1965இல் பிறந்த ஆண்ட்ரியா கெஸ், வானியற்பியலாளர், வானியல் - இயற்பியல் பேராசிரியர். பால்வீதியின் நடுவில் நாற்பது லட்சம் சூரியன்களின் எடைகொண்ட கருந்துளை இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்பியலில் நோபல் பரிசு பெறும் நான்காம் பெண் இவர். நட்சத்திரங்கள் அதாவது விண்மீன்கள் உருவாகும் பகுதியை அதிநவீனத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்ததற்காக இவர் போற்றப்பட்டார். பேரண்டத்தின் மய்யப்பகுதியின் பண்புகளைக் கண்டறியும் நோக்குடன் விண்மீன்களுக்கு இடையிலான செயல்பாட்டைக் கண்டறிந்ததில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. “பேரண்டத்தின் மீது எனக்குக் கட்டுக் கடங்காத பேராவல் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள். ஒவ்வொரு முறையும் தொலைநோக்கியால் பார்க்கும்போது நான் ஆச்சரியமடைவேன். நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும்வரை நிச்சயம் அதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்யும்’’ என்கிறார் ஆன்ட்ரியா கெஸ். ஜெனிஃபர் டவுட்னா, இமானுயேல் ஷார்பென்டியே முதல் பெண்கள் அணி மரபணுவில் மாற்றம் செய்யத்தக்க வகையிலான கிரிஸ்பர் (CRISPER-Cas9)  தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக  நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் மரபணுவை வெட்டும் கத்தரிக்கோல் போன்றது இது. இதைப் பயன்படுத்தி டி.என்.ஏ.வின் குறிப்பிட்ட பகுதியை வெட்டிவிட்டு மரபணுவில் மாற்றம் செய்ய முடியும். இந்தத் தொழில் நுட்பத்தை மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் என அனைத்திலும் செயல்படுத்த முடியும் என்பதால், பெரும்பாலான ஆட்கொல்லி நோய்களுக்குத் தீர்வு காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள்  நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மஸ்குலர் டிஸ்ராபி எனப்படும் தசைச்சிதைவு நோய், புற்றுநோய், மரபணுவில் ஏற்படும் சடுதிமாற்றம் போன்றவற்றை அணுகுவதில் இவர்களது கண்டுபிடிப்பு புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறது. நம்பிக்கை தரும் விருது பிரான்சில் 1968இல் பிறந்த இமானுயேல் ஷார்பென்டியே தற்போது பெர்லினில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிவருகிறார். நுண்ணுயிரியல், மரபியல், உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் இவர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். “எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருது, அறிவியல் துறையில் சாதிக்க நினைக்கும் இளம் பெண்களுக்கு நம்பிக்கைதரும் செய்தியாக இருக்கும். அறிவியல் ஆய்வுகளில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்று’’  எனக் கூறியிருக்கிறார். வாஷிங்டனில் 1964இல் பிறந்த ஜெனிஃபர் டவுட்னா, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வேதியியல், மூலக்கூறு - செல் உயிரியல் துறை பேராசிரியர். மரபணுவை வெட்டும் ‘கிரிஸ்பர்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில்   பரவலாக்கம் செய்து இந்தத் தொழில்நுட்பத்தைக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்’’ என்று  ஜெனிஃபர் டவுட்னா தெரிவித்திருக்கிறார். லூயிஸ் க்ளக் (இலக்கியம்) 1943இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த லூயிஸ் க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டாம் பெண் கவிஞர். தனி மனித இருப்பை உணர்த்தும் தன்னிகரகற்ற கவிதை வரிகளுக்காக இவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கியவர். 25 வயதில் இவரது முதல்  கவிதைத் தொகுப்பான ‘ஃபர்ஸ்ட் பார்ன்’ (1968) வெளியானது.  (தகவல் : சந்தோஷ்)செய்திகளை பகிர்ந்து கொள்ள

முகப்புக் கட்டுரை: புரட்டுகளை முறியடிக்கும் போராளிகள்!

சமா.இளவரசன் பகுத்தறிவைப் பரப்பும் பணி அத்தனை எளிமையானதன்று. எதையொன்றையும் கேள்வி கேள்! ஆராய்ந்துபார்! சிந்தித்துப் பார்! என்று அறிஞர்கள், பகுத்தறிவாளர்கள் சொல்வது கேட்போருக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால், அதன்படி மக்களைச் சிந்திக்கச் செய்வது கடினமானது. அப்படிச் சொன்னவர்களெல்லாம் மக்களிடமிருந்தும், ஆளும் கூட்டத்திடமிருந்தும் கடும் எதிர்ப்பையே பரிசாகப் பெற்றிருக்கிறார்கள். வெகு மக்கள், எளிதில் ஏற்றுக் கொள்கிற அல்லது ஏற்றுப் பழகியிருக்கிற ஒன்றை எதிர்த்துக் கேள்வி கேட்டால், அது தங்களையே எதிர்த்துக் கேட்கப்பட்டதாய்த் தோன்றுமளவுக்கு மக்களை மயக்கி வைத்திருப்பவைதான் அவர்தம் நம்பிக்கைகள். ஏனெனில், அந்த நம்பிக்கைகளை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள், அதை நம்புவோரின் அறிவுத்திறனையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. இது அவர்களின் ‘ஈகோ’வைக் கொஞ்சம் சுரண்டிப் பார்க்கிறது. தவிரவும், எதுவொன்றையும் கேள்வி கேட்காமல் ஏற்பதிலும், அதன் சுவைகளில் மயங்கும் பெருங்கூட்டத்திலொரு துளியாய்க் கரைவதிலும், வெகுமக்கள் நம்பும் ஒன்றுடன், அப்பெருங்கூட்டத்தின் பெரும் பலத்தைத் தாம் பெறும் உணர்வோடு மந்தை மனநிலையில் அதில் இணைவதிலும், தமக்குக் கிட்டாத ஒரு பலம் அதன் மூலம் கிடைப்பதாக ஒரு போதை உண்டாகிறது. அதுவே மீண்டும் மீண்டும் மூட நம்பிக்கைகளின்பாலும், போதைகளின்பாலும் மக்களை இட்டுச் செல்கிறது; தக்க வைக்கிறது. (இத்தகைய பலத்தைக் காட்டித் தான்,  -யை உருவாக்கி மத, ஜாதி, இனவாத அமைப்புகள் மேலும் ஆட்களைத் தங்கள் பக்கம் இணைக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை இங்கு விவரிக்கத் தேவையில்லை.) சிறு வயதிலிருந்து கேட்டுப் பழகிய அதிசயக் கதைகளும், மதங்களின் பரப்புரையும் நம் காலத்திலும் ஏதேனும் அதிசயம் நிகழும் என்னும் ஆழ்மன ஆர்வத்தை வளர்த்துவருகின்றன. நடக்கவே முடியாது என்று நமக்கு நன்கு தெரிந்த ஒன்றே, நிகழ்ந்துவிட்டதாக யாரேனும் சொன்னால், அது அந்த ஆழ்மன ஆர்வத்துக்குத் தீனியாக அமைந்துவிடுகிறது; அதை நம்புவதற்கு ஒரு துணை கிடைத்தால்போதும் என்கிற அளவில் நம்பச் சொல்கிறது. (ஏதேனும் ஒரு பத்திரிகையோ, ஊடகமோ, தெரிந்தவர்களோ அதை உண்மை என்பது போல் சொன்னால் கூடப் போதும் - உறுதியாகக் கூட சொல்ல வேண்டியதில்லை. அதே நேரம் படித்தவர்கள் என்றால், ஒரு டாக்டரோ, சயண்டிஸ்ட் (விஞ்ஞானி) என்று போர்டு போட்டுக் கொண்டவரோ அதை ஏற்றுக் கொண்டால் அல்லது நாசாவே வியந்தது என்று ஒரு பேச்சுக்கு யாராவது சொன்னால் கூட போதுமானது.) இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான் அறிவியல் வளர்ந்துவிட்ட 20, 21 என்னும் இந்த இரு நூற்றாண்டுகளிலும் கூட புதிது புதிதாக அற்புதங்களும், அதிசயங்களும் மத, மொழி, நாடு பேதங்களின்றி எங்கும் அரங்கேற்றப்படுகின்றன. புதிய புதிய சாமியார்கள், கார்ப்பரேட் குருமார்கள் எல்லாம் புறப்படுகிறார்கள். மக்கள் திரளைத் திரட்டுகிறார்கள்; மடையர்களாக்குகிறார்கள். இருந்தாலும் அயராமல் பகுத்தறிவாளர்கள், உண்மையை நாடுவோர் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். காலம் முழுக்க நடைபெறும் இப்போராட்டத்தில் எண்ணற்றோர் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். பகுத்தறிவுப் பிரச்சார வடிவங்களில் எழுத்து, பேச்சு, விவாதம், கலைவடிவங்கள் என்று பல வகைகளுண்டு. மூடநம்பிக்கைகளைத் தோலுரிப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. ஆனாலும், சொல்லுவிங்க... செய்ய முடியுமா?, இல்லைன்னு நிரூபிக்க முடியுமா? என்பது மிக எளிமையாக எழும் கேள்வி. அதற்கான பெரும் விடை தான் செயல்விளக்கம்! இயற்கையை மிஞ்சிய ஏதோ ஒன்று நடப்பதாகச் (Paranormal) சொல்லப்பட்டாலும், அதிசயம், அற்புதம், மந்திரசக்தி, மாயாஜாலம், யோகசக்தி என்று எத்தனை பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அதன் பின்னே ஒளிந்திருப்பது தந்திரம் தான் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து நிறுத்துவதால் செயல்விளக்கத்திற்கு எப்போதும் தனிச் சிறப்பும் ஈர்ப்பும் உண்டு. அக்னிச் சட்டி எடுக்க முடியுமா? ஆத்தாவை வேண்டாமல், விரதம் இருக்காமல் அக்னிக் குண்டம் இறங்க முடியுமா? என்பதில் தொடங்கி, யோக வலிமை இல்லாவிட்டால் அந்தரத்தில் பறக்க முடியுமா? என்று கேட்பதுவரை, மக்களை ஏமாற்றும் அனைத்துப் புரட்டுகளையும் இத்தகைய செயல்விளக்கங்களால் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் பகுத்தறிவாளர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற பகுத்தறிவுப் பிரச்சாரங்களில் திராவிடர் கழகம் தொடர்ந்து நடத்திவரும் மந்திரமா? தந்திரமா?, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. அறிவியல் விளக்கங்களுடன் கூடிய இத்தகைய செயல்விளக்கங்கள் உலகெங்கும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. பேய், பிசாசு, அதீதசக்தி, அமானுஷ்யம் ஆகிய பெயரில் பலரால் நம்பப்பட்டவைகளையும், தாங்களே அதீத சக்தி கொண்டோர் என்று நம்பிய பலரையும் உண்மை அறிவியல் விளக்கங்களால் அம்பலப்படுத்தியவர் சீரிய பகுத்தறிவாளரான டாக்டர் ஆபிரகாம் தாமஸ் கோவூர் (10, ஏப்ரல், 1898 - 18 செப்டம்பர் 1978). கேரளாவில் பிறந்து, இந்தியாவிலும், பெரும்பாலும் இலங்கையிலும் வசித்தவரான கோவூர், ஓர் உளவியல் நிபுணர். அவருடைய அனுபவங்கள் ஒவ்வொன்றும் இன்றும் நாம் சந்திக்கும் பல வகை அமானுஷ்யங்களின் புதிர்களை விடுவிக்கக் கூடியவை. அவை தமிழிலும் திராவிடர் கழகத்தால் பல வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘உண்மை’ இதழில் முன்பு தொடராகவும் வெளிவந்துள்ளன. ஆவி பிடித்ததாகவும், ஏவல் வேலையென்றும், மாந்திரிகம், சாமியார்கள் என்று மூடத்தனத்தில் வீழ்ந்த பல குடும்பங்களின் பிரச்சினைகளை, உரிய முறைகளில் ஆய்வுக்குட்படுத்தி, அவர்களின் உளவியல் பிரச்சினைகளை ‘ஹிப்னாடிச’ முறையில் சீர்செய்தவர். இந்தியாவிலும், இலங்கையிலும் பல மனிதக் கடவுள்களின் குட்டுகளை உடைத்தவர். அதனால் வந்த எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவர். பல ஆண்டுகாலம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். பலமுறை அவர் திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதுண்டு. 1975-ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பங்கேற்று மிகச் சிறந்த உரையாற்றினார். அவரது நூற்றாண்டுவிழாவையும் திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்தியது. இலங்கை பகுத்தறிவாளர் அமைப்பை நிறுவியவர் இவரே! கேரளாவில் ஆண்டுதோறும் இவர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தனது மறைவுக்குப் பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கும், கண்களைப் பார்வையற்றோருக்கும் கொடையாகக் கொடுத்துச் சென்றார் கோவூர். கோவூரின் பகுத்தறிவுப் பிரச்சாரமும், அதில் அவர் கையாண்ட முறையும் மேலும் பலரை அவரைப் போல செயல்படவைத்தன. அப்படி அவரால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பணியையும், பாணியையும் தொடர்ந்தவர்களில் முக்கியமானவர் பசவ பிரேமானந்த் (17 பிப்ரவரி 1930 -- 4 அக்டோபர் 2009). கேரளாவில் பிறந்தவரான இவர் 1969-இல் ஆபிரகாம் கோவூரைக் காணும்வரை தியோசாபிகல் சொசைட்டியைப் பின்பற்றுபவராகத் திகழ்ந்தார் தமது பெற்றோரைப் போல. தியோசாபியை போதித்த ஹெலெனா ப்ளவாட்ஸ்கி என்ற ரஷ்ய அம்மையாரைத் தீவிரமாகப் பின்பற்றினார் பிரேமானந்த். கோவூரின் சந்திப்புக்குப் பின், தியோசாபியை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களில் முக்கியமானவரானார். 1940களில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் பங்கேற்பதற்காகத் தனது பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டு, பின்னர் குருகுலக் கல்வி மூலம் சில காலம் பயின்ற பிரேமானந்த், தனது வாழ்வினை புரட்டர்களுக்கெதிரான போராட்டக் களமாகவே மாற்றிக் கொண்டார். புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவைத் தோலுரித்து, போராட்டங்களும், வழக்குகளும் நடத்தினார். 500 பேருடன் புட்டபர்த்தி நோக்கி நடைபயணம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டார். மக்களை ஏமாற்றிய அவரது தந்திர விளையாட்டுகளுக்கு உரிய செயல்விளக்கங்களுடன் பதிலடி கொடுத்தார். அலகு குத்துதல், மந்திரித்தல், உயிருடன் புதைத்தல், மாந்திரிகம் செய்தல் போன்றவற்றின் புரட்டுகளை அம்பலப்படுத்தி, அவற்றைத் தானும் நிகழ்த்திக் காட்டி பிரச்சாரம் செய்தார். ‘சாய்பாபாவின் படுக்கையறையில் கொலைகள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டதோடு, சாய்பாபாவின் பாலியல் அத்துமீறல்களையும் வெளிப்படுத்தினார். இதற்காக இவர் மீது நான்கு முறை கொலைமுயற்சிகள் நடைபெற்றன. சில முறை தாக்குதலால் காயம்பட்டுமிருக்கிறார். வெறுங்கையில் விபூதி வரவழைத்தல், நகை வரவழைத்தல், வாயிலிருந்து லிங்கம் கக்குதல் போன்ற சாய்பாபாவின் வித்தைகளைத் தானும் செய்துகாட்டி அவை வெறும் தந்திரங்களே என்று விளக்கினார். அந்தரத்தில் மிதப்பதாகவும், அமர்வதாகவும் வித்தை காட்டும் ஏமாற்றுப் பேர்வழிகளின் மோசடி வித்தைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அதற்காக ‘இந்தியன் ஸ்கெப்டிக்‘ என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியதோடு, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பையும் (FIRA) உருவாக்கினார். இவரைப் பற்றி பன்னாட்டு ஊடகங்கள் ஆவணப்படங்களை உருவாக்கியுள்ளன. இயற்கையை மீறிய சக்திகளையோ, அற்புத சக்திகளையோ சரியான விதிமுறைகளுக்குட்பட்டு நிரூபிப்பவர்களுக்கு இந்திய பண மதிப்பில் ஒரு லட்சம் ரூபாயைப் பரிசாக 1963-இல் அறிவித்தார் ஆபிரகாம் கோவூர். அவரது மறைவுக்குப் பிறகு அதே ஒரு லட்ச ரூபாய் சவாலைத் தொடர்ந்தார் பிரேமானந்த். இறுதிவரை இந்தச் சவாலை எவரும் எதிர்கொள்ளவுமில்லை; வெல்லவுமில்லை. கோவை மாவட்டம் போத்தனூரில் தனது இறுதிக் காலத்தைச் செலவிட்டு, அங்கேயே 2009-ஆம் ஆண்டு மறைந்த பிரேமானந்த், தனது உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடையளித்ததோடு, தனது சொத்துகளை இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புக்கே உரித்தாக்கிச் சென்றார். அவருடைய பணியை இன்றும் அவ்வமைப்பின் தலைவராகத் திகழும் நரேந்திர நாயக் முன்னெடுத்து வருகிறார். பசவ பிரேமானந்த்தும், நரேந்திர நாயக்கும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பல முறை பங்கேற்றுள்ளதோடு,   மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறைகளையும் நடத்திப் பலரையும் உருவாக்கியுள்ளனர். இத்தகைய பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் உலக அளவில் ஈடுபட்டுப் புகழ்பெற்றவர் அண்மையில் மறைந்த ஜேம்ஸ் அமேசிங் ராண்டி (7 ஆகஸ்ட், 1928 --- 20 அக்டோபர், 2020). கனடாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவரான ராண்டியின் வாழ்க்கையும் அனைத்து பகுத்தறிவாளர்களின் வாழ்க்கையைப் போல சுவையானது. ஹாரி ப்ளாக்ஸ்டோன் என்ற புகழ்பெற்ற தந்திரக் (மேஜிக்) கலைஞரால் இளம்வயதில் ஈர்க்கப்பட்ட ராண்டி, சைக்கிள் விபத்து ஒன்றினால், 13 மாதங்கள் நடமாட முடியாமல் இருந்தபோது ஏராளமான மேஜிக் புத்தகங்கள் படிப்பதில் செலவிட்டார். 17 வயதில் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, விழாக்காலங்களில் சாலையில் நிகழ்ச்சி நடத்தும் (Carnival Show) மேஜிக் கலைஞராகச் சிலகாலம் இருந்தார். கனடா நாட்டின் டொரண்டோ நகர இரவு விடுதிகளில் ஹிப்னாடிஸம், டெலிபதி போன்றவற்றைச் செய்துகாட்டும் உளவியல் மேடைக் கலைஞராகவும் (Mentalist) இருந்ததுண்டு. மக்களின் மனதைப் படிப்பதாக ஏமாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஒருவரின் புரட்டை அவரது சர்ச்சிலேயே சென்று வெளிப்படுத்தி, அதனால் சில மணி நேரம் சிறையிலும் இருந்திருக்கிறார் இளம் ராண்டி. ஜேம்ஸ் ராண்டி தனது 20 வயதுகளில் கனடாவின் ‘மிட்நைட்’ பத்திரிகையில் ராசிபலன் எழுதியிருக்கிறார் ராண்டி. ஆம்... மிக எளிமையாக! பிற பத்திரிகைகளில் வரும் ராசி பலன் பகுதிகளில் இருந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக பலன்களை மாற்றிப் போட்டு ஸோரான் என்னும் பெயரில் அவர் எழுதிய ராசிபலன்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பிறகு மேஜிக் கலைஞராக உலகம் முழுவதும் பயணம் செய்து பணியாற்றி, அமெரிக்காவில் வந்து குடியேறினார். தொலைக்காட்சிகள் பிரபலமாகத் தொடங்கிய பிறகு, ஏராளமான நிகழ்ச்சிகளை அதன் வாயிலாக நிகழ்த்திக் காட்டினார். தப்பித்தல் கலையில் தேர்ந்தவரான ராண்டி, கால்களோடு கைகளைச் சேர்த்துச் சங்கிலியால் பிணைத்து, தலைகீழாக நயாகரா அருவியின் மேல் தொங்கி, அதிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் மீளும் சாகசத்தை நிகழ்த்திக் காட்டினார். பன்னாட்டளவில் முக்கியமான மேஜிக் கலைஞராக மாறினாலும், அவரது ஈடுபாடு, தந்திரக் கலைகளை மந்திரம் என்றோ, இயற்கையை மீறிய சக்தி என்றோ, மனோசக்தி என்றோ கதையளந்து மூடநம்பிக்கையைப் பரப்புவோரை அம்பலப்படுத்துவதிலேயே தன்னுடைய திறமையைப் பயன்படுத்தினார். பார்வையாலேயே வசியம் (Psychic Powers) செய்து கரண்டிகளை வளைக்கவும், உலோகப் பொருள்களைத் தன் பால் ஈர்க்கவும் முடியும் என்று உலகம் முழுவதையும் ஏமாற்றி வந்த யூரி கெல்லர் என்பவரின் புரட்டை உடைத்து, அது வெறும் ஏமாற்றுத் தந்திரமே என்று வெளிப்படுத்தினார். யூரி கெல்லரைப் போலவே கரண்டியை வளைத்தும், பொருள்களைத் தன்பால் ஈர்த்தும் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். நான் பயன்படுத்துவது தந்திரமே என்று ஜேம்ஸ் ராண்டி சொன்னாலும், இல்லை நீங்கள் மனோவசியக் கலையைப் பயன்படுத்துகிறீர்கள்... அதைத் தந்திரம் என்று பொய் சொல்கிறீர்கள் என்று தலைகீழாக வாதிட்ட மூடர்களும் உண்டு. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்பவரின் சில கணிப்புகள் இப்போதும் நடப்பதாக உலக அளவில் வியந்து பேசப்படுவதுண்டு. அவற்றையும், தன் கேள்விகளாலும், ஆதாரங்களாலும் உடைத்து நொறுக்கினார் ஜேம்ஸ் ராண்டி.        The Magic World of the Amazing Randi (1989), Flim-Flam! (1982), The Faith Healers (1987), James Randi, Psychic Investigator (1991), Conjuring (1992), Test Your ESP Potential (1982) and An Encyclopaedia of Claims, Frauds, and Hoaxes of the Occult and Supernatural (1995) போன்ற அவரது நூல்கள் முக்கியமானவை. கத்தி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து நோய்களைக் குணப்படுத்துவதாக ஏமாற்றுவோரின் தந்திரங்களை வெளிப்படுத்தி, மேடையிலேயே அத்தகைய நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினார். அமெரிக்காவில் பால் கர்ட்ஸ் போன்ற பகுத்தறிவாளர்களுடன் இணைந்து,  Peranormal என்றழைக்கப்படும் இயல்புக்கு மிஞ்சிய செய்கைகள் என்று சொல்லப்படுபவற்றைக் கண்டறிய ‘இயல்பு மீறிய செயல்கள் பற்றிய அறிவியல் பூர்வ விசாரணை குழு (Committee for the Scientific Investigation of Claims of the Paranormal - CSICOP)  என்னும் தனி அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். தன்னை  (புரட்டு உடைப்பாளர்) என்று சொல்வதைவிட  (ஆய்வாளர்) என்று சொல்வதே சரி என்பாராம் ராண்டி. இயல்புக்கு மிஞ்சிய செய்கைகளை இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் நிபந்தனைகளின் அடிப்படையில் நிரூபித்துக் காட்டினால் ஒரு மில்லியன் டாலர் பரிசு (இன்றைய இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கும் மேல்) என்ற சவாலை கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை தனது அறக்கட்டளை (The James Randi Educational Foundation (JREF)) மூலம் அறிவித்திருந்தார். 2015-ஆம் ஆண்டுவரை யாராலும் வெல்லப்படாத அந்தத் தொகையை மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் பணிகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்குத் தன் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறார் ராண்டி. இந்தியாவுக்கு வந்திருக்கிறார் ஜேம்ஸ் ராண்டி. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அவரைச் சந்தித்த பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் தமிழ்நாட்டில் பெரியாரின் அமைப்பு செய்துவரும் பணிகளை எடுத்துச் சொன்னபோது, பெரியாரைப் பற்றியும், அவரது அமைப்பு பற்றியும் தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். கடந்த அக்டோபர் 20 அன்று மறைவுற்ற ஜேம்ஸ் ராண்டிக்கு காணொலி வாயிலாக படத் திறப்பு நிகழ்ச்சியினை நவம்பர் 1ஆம் நாள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அவர்கள் தலைமையில் நடத்தி அவரது பணிகளை நினைவு கூர்ந்தது பகுத்தறிவாளர் கழகம். மேஜிக் கலையை, தந்திரக் கலைதான் என்று ஒப்புக் கொண்டு அதை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நடத்துவதை எப்போதும் பகுத்தறிவாளர்கள் பொருட்படுத்துவதில்லை. அது கலைகளில் ஒன்று என்கிற அளவில் அவர்களும் கூட அவற்றை ரசிப்பார்கள்; நிகழ்த்தியும் காட்டுவார்கள். ஆனால், அதற்கொரு மந்திர, வசிய சக்தி முலாம் பூசி ஏமாற்ற நினைத்தால் ஒரு போதும் அவற்றை விட்டுவைக்க மாட்டார்கள். புரட்டுகளைத் தோலுரித்து, புரட்டர்களை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படையச் செய்ய தங்கள் சொத்து, படிப்பு, வாழ்க்கை, உயிர் என அனைத்தையும் முன்வைத்து களத்தில் நிற்கிறார்கள். இதனால் தாங்கள் சந்திக்கும் சவால்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களையெல்லாம் எதிர்கொண்டு மனித சமூகம் ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து மீண்டு, பகுத்தறிவும் அறிவியல் மனப்பான்மையும் கொண்ட சமூகமாக மாற வேண்டும் என்கிற மானுடப் பற்றுதான் பகுத்தறிவாளர்களை இயக்குகிறது. அந்தப் பணியில் உலகம் முழுக்க இருக்கும் பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். புரட்டுகள் இருக்கும் வரை அதை முறியடிக்கும் போராளிகள் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருப்பார்கள்.செய்திகளை பகிர்ந்து கொள்ள

சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம்

முனைவர் வா.நேரு   “இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக் கூடுமே தவிர, புராண இதிகாசப் பண்டிதர்கள் என்பவர்களுக்கு, அதுவும் நம் “கலை, காவியப் பண்டிதர்களுக்குத் தெரிவது சுலபமான காரியமல்ல” என்றார் தந்தை பெரியார். (இனிவரும் உலகம்... முன்னுரை). அறிவியல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், புராண இதிகாசப் பண்டிதர்கள் கதை அளந்து கொண்டிருந்த காலத்தில் கரோனா அவர்களின் கதையை எல்லாம் பொய் என்பதனை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. நாம் பகுத்தறிவாதிகள். இந்தப் பிரபஞ்சம் (Universe) பற்றிச் சிந்திப்போம். “வானம் எனக்கு ஒரு போதி மரம் நாளும் எனக்கு அது சேதி தரும்“ என்பது ஒரு திரைப்படப் பாடலின் வரிகள். வானத்தைப் பற்றி நாள்தோறும் புதுப் புதுச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரபஞ்சம் என்றால் என்ன? இரவில் வீட்டின் மாடியில் படுத்துக்கொண்டு வானத்தை நோக்கினால் சின்னச் சின்னப் புள்ளிகளாக நிறைய விண்மீன்கள்(Stars) தெரிகின்றன. சில விண்மீன்கள் பெரிதாகவும், சில விண்மீன்கள் சிறிதாகவும் வானம் நமக்கு ஒரு விண்மீன் தொகுப்பாகப் தெரிகிறது. நாத்திகரான அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து சில செய்திகளைச் சொன்னார். “நமது பிரபஞ்சத்தில் பல இலட்சக்கணக்கான காலக்சிகள்(Galaxy) உள்ளன. ஒரு காலக்சியில் 10,000 கோடி விண்மீன்கள் இருக்கலாம். அந்த காலக்சிகளில் ஒன்றுதான் நமது பால்வெளி மண்டலம். இந்தப் பால்வழி மண்டலத்தில் 100 மில்லியன் விண்மீன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நமது சூரியன். நமது சூரியன் ஒரு விண்மீன். சூரியனை 8 கோள்கள், வால் விண்மீன்கள், குள்ளக்கோள்கள், விண்கற்கள் எனச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இதனை சூரியக் குடும்பம் என்கிறோம். இது போலவே மற்ற விண்மீன்களையும் கோள்கள் (Planets) சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நமது பால்வழி மண்டலத்தில் மட்டும் பூமியைப் போல் 5000 கோடி கோள்கள் இருக்கின்றன.” (ஸ்டீபன் ஹாக்கிங் -தன்னம்பிக்கையின் நாயகன், ஏற்காடு இளங்கோ, மங்கை வெளியீடு, சென்னை-18. பக்கம்-99). பிரபஞ்சத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நாம் இருப்பது பூமியில். பூமி இருப்பது சூரியன் எனும் விண்மீன் குடும்பத்தில். நமது பால்வெளி சூரியனைப் போன்ற 100 மில்லியன் (10 கோடி) விண்மீன்கள் அடங்கியது. நமது பால்வெளியைப் போல இலட்சக்கணக்கான பால்வெளிகள் (காலக்சிகள்) அடங்கிய தொகுப்பிற்கு பிரபஞ்சம் (Universe) என்று பெயர். எவ்வளவு பெரிய பிரபஞ்சம். இவ்வளவு பெரிய பிரபஞ்சம் என்றவுடனேயே ஆத்திகர், கடவுள் படைப்பு என்று சொல்ல ஆரம்பிப்பார். ஆனால் கடவுள் படைப்பு, சொர்க்கம் என்பதனை எல்லாம் ஸ்டீபன் ஹாக்கிங் முழுமையாக மறுத்தார். ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகமான “பிரம்மாண்ட வடிவமைப்பு” (The Grand Design) என்பதில் “உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை. இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப அது தானாகவே உருவானது” என்று குறிப்பிட்டுள்ளார். “இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு எதுவும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. கடவுள் இதனை உருவாக்கவும் இல்லை. மதத் தத்துவவாதிகள் கூறுவது போல உலகுக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. கடவுள் வந்து, தடவிப் பார்த்து, பிரபஞ்சமே, நீ உருவாகு என்று கூறுவது அபத்தமானது” என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். (ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன், ஏற்காடு இளங்கோ, பக்கம்_86). தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதனையும், சொர்க்கம் என்று ஒன்று இல்லை என்பதனையும், பிரபஞ்சத்தைப் பற்றிய விளக்கங்கள் கூறும்போது மிக அழுத்தமாகச் சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங். சரி, இந்தப் பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் அது பற்றிய சிந்தனைகளும்  எப்படியெல்லாம் மனித குலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கப் போகிறது? நாம் வாழும் இந்த உலகம், பூமி எத்தனை ஆண்டுகள் இருக்கும்? பூமி இருக்கும் சூரியக் குடும்பம் எத்தனை ஆண்டுகள் இருக்கும்? நாம் வாழும் பூமி ஒரு நாள் அழிந்து போகுமா? என்பதை எல்லாம் பிரபஞ்ச அறிவியலோடு இணைத்துப் பார்ப்பது நமக்கு வியப்பைத் தருகிறது. ஒரு நாள் பூமியில் இனி மனிதர்கள் வாழ முடியாது என்கிற நிலைமை வருமா? வரும் என்று சொல்கின்றார் பிரபஞ்சத்தைப் பற்றி பல்வேறு அறிவியல் உண்மைகளைத் தனது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்த ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள். இன்றைய கரோனா காலமே அப்படி ஒரு நிலைமையை உண்டாக்கி இருக்கிறது. நமது அருமையான தோழர்கள் சிலரை இழந்திருக்கிறோம். பல தோழர்கள் கரோனா நோயை எதிர்கொண்டு, முழுமையான குணம் பெற்று இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். கரோனாவால் உலகமே பெரும் அச்சத்தில் உள்ளது. மக்கள் பயப்படுகிறார்கள். கரோனா போன்ற பல தொற்று நோய்கள், மிக எளிதாக மனிதர்களிடையே பரவக்கூடிய தொற்று நோய்கள், இனியும் தொடர்ந்து தோன்றும், பரவும், மனித குலத்தை அச்சுறுத்தும்  என்று அறிவியல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் அறிஞர்களும்  சொல்கிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்து வருகின்றபோது என்ன செய்வது என்னும் கேள்வி எழுகிறது. அதற்கான பதிலாக ஸ்டீபன் ஹாக்கிங், மனிதன் வேறு கோள்களில் சென்று குடியேற வேண்டும் என்று சொன்னார். ‘இனிவரும் உலகம்’ பற்றி சிந்தித்த சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு கருத்துகளைச் சொன்னது போல, இனி வரும் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்து ஸ்டீபன் ஹாக்கிங் பல்வேறு கருத்துகளைச் சொன்னார். நாம் வேறு கோள்களில் குடியேறி வாழலாம். அப்படி வாழும் காலம் எதிர்கால நூற்றாண்டுகளில் மனிதர்களுக்கு கிடைக்கலாம். மனித இனம் எப்போது தோன்றியது, எங்கே தோன்றியது, எப்படி இப்போது இருக்கும் பூமி முழுவதும் பரவியது என்பதைப் பற்றி பல செய்திகளை மரபியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஓர் இடத்தில் தோன்றி வாழ்ந்த மனித இனம், பல ஆயிரம் ஆண்டுகள் பயணத்தின் விளைவாக இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. முதல் பரவல் என்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு, கால்நடையாகச் சென்றிருக்கிறார்கள். போகும் வழியில் தங்கி, சில காலம் கழித்து அங்கிருந்து கிளம்பி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் அது போலவே ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கும் கால்நடையாகவே மனிதர்கள் குழு குழுவாகச் சென்றிருக்கிறார்கள். தங்களது பண்பாட்டை, நாகரிகத்தை வளர்த்திருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு கிடைத்த மூளை வளர்ச்சியும், இரண்டு கால்களால் நேராக நிமிர்ந்து நடக்கும் தன்மையும் விளைவித்த அற்புதம் அவனை உலகம் முழுவதும் பரவ வழி செய்தது. பேருந்து, இரயில், விமானம் என்று அடுத்தடுத்த வந்த நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கோ செல்வதை மிக எளிமையாக்கி இருக்கிறது. சில மணி நேரங்களில் கண்டம் விட்டுக் கண்டம் செல்ல முடிகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து வாழ்ந்து, அங்கேயே செத்து மடிந்த மனிதன், இன்றைக்கு அறிவியலால் பல நாடுகளில், பல கண்டங்களில் வாழும் மனிதனாக மாறியிருக்கிறான். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் செல்வது போல, நமது பூமியிலிருந்து வேறு கோள்களுக்கு ராக்கெட் மூலமாகச் செல்வதும், அங்கு சென்று வேலை பார்ப்பதும், பின்னர் தாய் நாட்டிற்கு திரும்புவது போல பூமிக்குத் திரும்புவதும் எதிர்காலத்தில் இயல்பு ஆகலாம். அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன், அங்கிருந்த இயற்கைச் செல்வங்களை எல்லாம் வெள்ளையர்கள் அள்ளிக்கொண்டு சென்றது போல, வேறு கோள்களில் இருக்கும் இயற்கை வளங்கள் பூமி இருப்பவர்களுக்குப்  பயன்படலாம்; கொண்டு வரலாம். இப்படியெல்லாம் கூட நாம் யோசிக்கலாம். எலன் மஸ்க் (Elon musk) என்பவர் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த தொழில் அதிபர். இவர் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் மனிதர்கள் குடியேறுவதைப் பற்றி பேசுகின்றார் - எழுதுகிறார். அவருடைய திட்டத்தின் (பிராஜக்ட்) பெயர் ஸ்பேஸ்-எக்ஸ் (SPACE X). 2019ஆம் ஆண்டிற்கான ஸ்டீபன் ஹாக்கிங் -விண்வெளி தொடர்பு (Space communication) விருதினைப் பெற்றிருக்கின்றார். அமெரிக்காவில்  உள்ள நாசாவின் உதவியோடு அதற்கான திட்டங்களைத் தீட்டி, முதலில் ஒரு 100 பேரை செவ்வாய்க் கோளில் குடியேற்றுவது என்று திட்டமிட்டுச் செயல் ஆற்றி வருகின்றார். அதனைப் போல நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான குடியேற்றம் பற்றியும் தனது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ரைட் சகோதரர்கள் விமானத்தில் முதன்முதலில் பறப்பதற்கு முயற்சி செய்தது போல எலன் மஸ்க் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். செவ்வாய் கோளில் மனிதர்கள் குடியிருப்பைக் கட்டுவதே தனது நோக்கம் என்று சொல்கிறார். முதலில் நாம் கேட்கும்போது நமக்கு சிரிப்பு வரும். ஆனால் பூமியில் இருந்தால் நாம் இனி உயிரோடு இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்துபோவோம் என்று நிலை வருகின்றபோது, உயிரோடு இருப்பதற்கான, வாழ்வதற்கான வாய்ப்பு இன்னொரு கோளிலோ அல்லது சந்திரன் போன்ற துணைக் கோளிலோ இருக்கிறது என்று சொன்னால், கொஞ்சம் பணம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை, அங்கு சென்று சில ஆண்டுகள் வாழ்ந்து பார்ப்போமே என்று மனிதர்களுக்குத் தோன்றும். ஆனால் இது  நடைமுறையில் வந்தால், பல கோடி ரூபாய் வசதி உள்ளவர்கள் மட்டுமே வேற்றுக் கோளுக்குச்  சென்று வாழமுடியும். மாற்றி யோசிப்பதுதானே பகுத்தறிவு. கடவுள் சித்தப்படி உலகம் நடைபெறுகிறது என்று எண்ணிக் கொண்டு ஆத்திகவாதி சென்று கொண்டிருக்கிறான். ஆனால் வரக்கூடிய ஆபத்துகளையும், எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்புகளையும் இணைத்து முன் செல்லக் கூடியவன் பகுத்தறிவுவாதி. நாம் வேறு கோளில் சென்று வாழ்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். வேறு கோளில் வசிப்பவர்கள், நம்மைப் போல அங்கே இருந்து வந்து பூமியில் வசிக்க வேண்டும் என்று நினைத்தால்?.... வேறு கோள்களில் உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? ...இருக்கிறது என்று சொன்னார் ஸ்டீபன் ஹாக்கிங். எந்த எந்தக் கோள்களில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் உயிர்கள் தோன்றியிருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் என்பது பல இலட்சக்கணக்கான கோள்களைக் கொண்டது. உயிரினங்கள் இருக்கக்கூடிய கோள்களும் இருக்கும், இல்லாத கோள்களும் இருக்கும் என்றார். பறக்கும் தட்டு என்பது எல்லாம் உண்மை இல்லை என்று கூறும் ஸ்டீபன் ஹாக்கிங் வேற்றுக் கோள்களில் வசிப்பவர்கள் நமது பூமிக்கு வரலாம் என்றார். அப்படி வந்தால் பூமியில் இருக்கும் நாம் பாதிப்புக்கு உள்ளாவோம். எப்படி கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தவுடன், அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரை இழந்தார்களோ, அதுபோல பூமியில் இருக்கும் நமக்கு அவர்களால் ஆபத்து ஏற்படும். அவர்கள் நம்மை விட பலமடங்கு அறிவுக்கூர்மை உடையவர்களாக இருக்கக்கூடும் என்ற ஆபத்தையும் நமக்குச் சொன்னவர் பகுத்தறிவுவாதி ஸ்டீபன் ஹாக்கிங். எதைக் கண்டும் அஞ்சி வாழ்வதல்ல வாழ்க்கை. ஆனால் இனி வரும் பிரபஞ்சம் எப்படி இருக்கக்கூடும் என்னும் அறிவு, அறிவியல் தரும் அறிவு, நமக்கு புதிய வழிகளையும், புதிய வெளிச்சங்களையும் காட்டக்கூடும்.செய்திகளை பகிர்ந்து கொள்ள

அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (256) எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழாரம்!

அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ஆசிரியரை வரவேற்கும் கழகத் தோழர்களிடையே மகிழ்ச்சியாக உரையாற்றும் ஆசிரியர் 4.1.1995 அன்று அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினேன். கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பை அளித்தனர். தோழர்களின் வரவேற்பு உள்ளத்தை நெகிழ வைப்பதாக இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பார்வையாளர் பகுதிக்கு வருகையில் தோழர்கள் விமான நிலையமே அதிரும் வண்ணம் வாழ்த்து ஒலி முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். பார்வையாளர் பகுதியில் வரிசையாக நின்றிருந்த கழகத் தோழர்களை ஒவ்வொருவராக விசாரித்தவாறே விமான நிலைய  வெளிப்பகுதிக்கு வந்தேன். கூடியிருந்த ஏராளமான தோழர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! என உணர்ச்சிப் பொங்க முழக்கமிட்டனர். கழகத் தோழர்கள் வளையம்போல கைகளைப் பிணைத்துக் கொண்டுதான் என்னை வெளியே அழைத்து வர முடிந்தது. அங்கு கூடியிருந்த கழகத் தோழர்களின் எழுச்சிமிக்க வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் மத்தியில் பேசினேன். “உங்களை மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான தோழர்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் காட்டுகிற அன்புக்கு நான் என்றென்றைக்கும் தகுதி உள்ளவனாக நடந்து கொள்வேன். நான் உடல்நலம் நல்ல முறையில் தேறி இங்கே வந்திருக்கிறேன். முன்னைவிட இன்னும் அதிகமாகப் பணி செய்வேன். நான் இல்லாதபோது இந்த இயக்கத்தை நன்றாக, மிகச் சிறப்பாக வழி நடத்தினீர்களே, அதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய இயக்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. எந்தச் சவாலையும் சந்திக்கும், சமாளிக்கும் என்பதை நான் இல்லாத வேளையில் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இளைஞர்கள்தான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை’’ என உணர்ச்சி மேலிடப் பேசினேன். 6.1.1995 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியேந்திரன் அவர்கள் மகனும் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ச.இராசசேகரன் அவர்களின் தம்பியும் _ கழகத் தோழருமான வழக்கறிஞர் சுந்தரம் மரணம் அடைந்தார் என்கிற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராகப் பணியாற்றியவர். ‘மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு எங்களுடன் ஓராண்டு சிறையில் இருந்தவர். மிகவும் இளம் வயதில் (43) அவருடைய மறைவு  கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இரங்கல் செய்தி வெளியிட்டோம். வழக்கறிஞர் சுந்தரம் 7.1.1995 அன்று ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அதிபர் திருமதி சந்திரிகா குமாரதுங்கே அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை கொழும்பில் அறிவித்தார். இதனை வரவேற்று மத்திய _ மாநில அரசுகளின் அணுகுமுறையும் மாறவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன். அதில் “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் ஓய்வுக்குப் பிறகு அதிகாரப் பகிர்வு குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு திருப்பம் _ ஒரு புதிய உதயம் _ இரு தரப்பினருக்கும் என்பதை உலகம் உணருகிறது. தமிழினத்தைப் படுகொலையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும். இலங்கை அதிபரின் இந்த முயற்சியை தமிழ்நாட்டு இன உணர்வாளர்களான தமிழர்கள் சார்பில் வரவேற்கிறோம். உலகம் முழுவதிலும் உள்ள உண்மைத் தமிழர்களும் வரவேற்பார்கள் என்பது திண்ணம். இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கேவும், விடுதலைப் புலி இயக்கத்தின் நிறுவனர் தம்பி. பிரபாகரனும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்பதை இந்திய (மத்திய) அரசும், மாநில அரசும் வெறும் செய்தியாக மட்டும் பார்க்கக் கூடாது. ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் அமைப்பைத்தான் இலங்கை அரசு அங்கீகரிக்கிறது; ஒப்புக் கொள்கிறது என்பதை பாறையின் மீது செதுக்கப்பட்ட எழுத்தினைப் படிப்பதைப் போல படித்து, பாடம் பெற்று, பழைய வெறுப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். வறட்டுக் கவுரவம் பார்க்காது, பழைய போக்கை மாற்றிக்கொண்டு புதிய சிந்தனை -_ செயல்முறை பற்றியும் யோசிக்க வேண்டும். புதிய வெளிச்சம் தெரிகிறது; பழைய இருள் விலகுகிறது; நிரந்தரமான ஓர் தீர்வு அமையும் என்று நம்புவோமாக! 95ஆம் ஆண்டு ஒரு நல்ல திருப்பத்தைத் தரட்டும்’’ என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். பிரபஞ்சன் 8.1.1995 அன்று தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் நீதியரசர் பெ.வேணுகோபால் - விஜயலட்சுமி தம்பதியினரின் திருமணப் பொன் விழா, புரசைவாக்கம் தர்ம பிரகாசு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. அதில் கலந்துகொண்டு அவருக்கும், அவரின் துணைவியாருக்கும் வாழ்த்துத் தெரிவித்து, சால்வை அணிவித்து மரியாதை செய்தேன். என்னுடன் துணைவியார் மோகனா அம்மையாரும் கலந்து கொண்டு திருமதி விஜயலட்சுமி அம்மையாருக்கு சால்வை அணிவித்தார். “நமது குடும்பத் தலைவர் நீதியரசர் வேணுகோபால் _ விஜயலட்சுமி இணையர் நூற்றாண்டு கண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்’’ என வாழ்த்துரையில் கூறினேன். 8.1.1995 அன்று கடலூர் டவுன் ஹாலில் கழகத்தினரால் நடத்தப்பட்ட எனது பிறந்த நாள் விழாவில், நண்பர் பிரபஞ்சன் கலந்துகொண்டு திராவிடர் கழகத்தின் பணியினையும், எழுத்தாளராய் எனது எழுத்துப் பங்களிப்பையும் பாராட்டிப் பேசினார். அதில் சில பகுதிகள் இவை: “தமிழுக்கும், தமிழின் மேன்மைக்குமாக கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த ஒரு தலைவருக்கு நன்றி தெரிவிப்பு விழாவை நடத்துகிறோம். நண்பர்களே! கருத்துக்குக் கருத்து பதில் கூறுகின்ற இயக்கம் திராவிடர் கழகம். இந்த இயக்கத்தின் நோக்கமே 1920ஆம் ஆண்டிலிருந்து இதுதான். பார்ப்பன _ வர்ணாசிரம தர்மங்களுக்கு எதிரான பலத்த தாக்குதல்களைத் தொடுக்கின்ற ஒரே சிறுத்தையின் கூடாரம் இந்தக் கழகம். தலைவர் வீரமணி அவர்களை எத்தனை பேர் சிறந்த எழுத்தாளராகப் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்று சமூகவியலின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர் தலைவர் வீரமணி அவர்கள். அவர் எழுதியுள்ள நூல்களில், “கோயில்கள் தோன்றியது ஏன்?’’ “காங்கிரஸ் ஏன் தோன்றியது?’’, “சங்கராச்சாரி _யார்?’’ ஆகிய மூன்று புத்தகங்கள் போதும். வீரமணிக்கு ஒன்று இரண்டல்ல 300 டாக்டரேட் பட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும். 1982ஆம் ஆண்டு சிதம்பரத்தில், தலைவர் வீரமணி அவர்கள் ஆற்றிய உரை, ‘சிதம்பர ரகசியம்’ என்று அது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வீரமணி ஆற்றிய ஆயிரம் சிறந்த உரைகளில் _ ஆயிரத்தில் ஒன்றாக நிற்கத்தக்க உரை அந்த உரை. சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று, அதன் பிடரியைப் பிடித்து ஆட்டுவது என்று சொல்லுவார்களே _ அது இப்பொழுது பொருந்தாது. ஓநாய்களின் கூடாரத்திற்கு _ சிதம்பரமாகிய அந்த இடத்திற்கு இந்தச் சிங்கம் சென்று, அந்த ஓநாய்களை கிழித்துப் போட்ட கதை அந்தக் கதை. ‘சிதம்பர ரகசியம்’ என்னும் அந்த நூலைப் படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்! இன்றும் கூட தத்துவார்த்த புத்தகங்களை வெளியிடுகின்ற கட்சி திராவிடர் கழகம் ஒன்றுதான். அந்தப் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். “கோயில் தோன்றியது ஏன்?’’ என்னும் புத்தகத்தை வீரமணி எழுதியிருக்கிறார். அருமையான புத்தகம். தத்துவார்த்தமாக நீங்கள் படிக்காத வரைக்கும் நீங்கள் திராவிடர் கழகத்தில் பரிபூரணமாக உறுப்பினராகும் தகுதியை இழக்கிறீர்கள். ‘டாகுமென்டேசன்’ என்றால், எதையும் பதிவு செய்து வைத்தல். வீரமணி அவர்கள் அளவுக்கு படித்த இன்னொரு அரசியல் தலைவர் இந்த நாட்டிலே கிடையாது. வீரமணி அவர்கள் அளவுக்கு ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியவரும் கிடையாது - அண்ணாவுக்குப் பிறகு, அண்ணாவின் ஆரிய மாயைக்குப் பிறகு! இது உண்மை. தந்தை பெரியார் கருத்தில் எள்ளளவும் பிறழாதவர், தமிழர் மேம்பாட்டுக்கு உழைப்போரெல்லாம் இவரின் நண்பர்களாக இருப்பார்கள். மிகவும் ஆராய்ச்சிப்பூர்வமான எழுத்தாளர் இவர். இவரின் வாழ்க்கை நெறிப்படி நாமும் வாழ்வோம்! என்ற உறுதிமொழியை நாம் ஏற்று அதன்படி நடப்போம். இந்த வாய்ப்பை எனக்குத் தந்தமைக்காக துரை.சந்திரசேகரன் அவர்களுக்குக் கடமைப்பட்டவனாகியுள்ளேன்’’ என பல்வேறு கருத்துகளை பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். 10.1.1995 அன்று பெரம்பூர் _ செம்பியத்தைச் சேர்ந்தவரும் கழகத் தலைமைக் கழகத்தில் பணிபுரிந்தவருமான கி.ராமலிங்கம் அவர்களின் தந்தையார் இரா.கிருட்டினன் மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து, அவருடைய இல்லத்திற்கு கழக முன்னணியினருடன் சென்று அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, கி.ராமலிங்கத்திற்கு ஆறுதல் கூறினோம். உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற பன்னாட்டு தமிழறிஞர்களை பாராட்டி சிறப்பு செய்யும் ஆசிரியர். 14.1.1995 அன்று தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற  பன்னாட்டுத் தமிழறிஞர்களுக்கு கழகத்தின் சார்பில் பெரியார் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் தலைமை ஏற்று, தமிழறிஞர்கள் கே.ஏ.முகமது கமாலுதீன் _ஆங்காங்க், கவிஞர் மு.க.மா.முத்தமிழ்ச்செல்வன் மற்றும் இ.மகேஸ்வரன் _ மலேசியா, வி.குமாரசாமி _ பிரான்ஸ், மூர்த்தி _ சிங்கப்பூர் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, கழக வெளியீடுகளை அன்பளிப்பாகக் கொடுத்து சிறப்புச் செய்தோம். நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். அந்தப் பாராட்டு விழாவில் பேசுகையில், “உலகின் பல பகுதிகளிலிருந்து தமிழ்த் தூதர்களாக இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். பெரியார் திடலில் உள்ள நாங்கள் உலகத் தமிழ்த் தூதர்களை மறவாதவர்கள். தமிழ்த் தூதர்களாகிய நீங்கள் எங்களிடமிருந்து எந்த வகையான உதவிகளையும் எப்போதும் எதிர்பார்க்கலாம். எங்களால் இயன்றதையெல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம்.’’ என பல கருத்துகளை எடுத்துரைத்தேன். 19.1.1995 அன்று தந்தை பெரியார் கொள்கை வழி பிறழாமல் கடைசி வரை வாழ்ந்த பொன்மலை தென்பகுதி ரயில்வேமென் யூனியன் முக்கிய தோழராய் இருந்தவருமான என்.கோவிந்தராசு மறைந்தார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தன்னிடமிருந்த நூற்றுக்கணக்கான இயக்க நூல்களை கழகத்திற்கு அன்பளிப்பாக அளித்தவர். திராவிடர் கழக கொள்கைப் பிரச்சாரத்தை _ தான் சந்திக்கும் மக்கள் யாவரிடமும் இடைவிடாமல் அவர் செய்து வந்தார். அது கழகத்திற்கு பயனும் தந்தது. அவருடைய மறைவால் திராவிடர் கழகம் சிறந்த பிரச்சாரம் செய்து வந்த பெரியார் தொண்டரை இழந்துள்ளது என இரங்கல் தெரிவித்தோம். கீழவாளாடி முதல் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் 23.1.1995 அன்று சென்னை அண்ணா நகர் சோபா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு, தலைமை ஏற்று நடத்தி வைத்தேன். செ.குப்புசாமி _ துளசியம்மாளின் மகன் கவுதமனுக்கும், பி.கே.பலராமன் _ ரேணுகா ஆகியோரின் மகள் கவியரசிக்கும் சுயமரியாதைத் திருமண முறைப்படி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மணமக்களுக்கு வாழ்த்து கூறுகையில், “சுயமரியாதைத் திருமணம் என்பது வாழ்வியல் திருமணம்; மனிதநேயத் திருமணம். பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி அவர்கள் சிறந்த கொள்கை வீரர். எந்த நிலையிலும் தந்தை பெரியாரின் கொள்கையை வழிகாட்டியாகக் கொண்டு லட்சிய உணர்வுடன் வாழ்ந்து வருபவர் என்று கூறி, அவருடைய அய்ம்பதாவது திருமண நாளையொட்டி, அவரையும் அவருடைய இணையரையும் மாலை மாற்றிக்கொள்ளச் செய்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். 25.1.1995 அன்று திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் லால்குடி அடுத்த கீழவாளாடியில் தலைமைக் கழக ஆணைக்கேற்ப முதல் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக கழகப் பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் ‘உண்மை’ கிருட்டினன் வரவேற்புரை ஆற்றினார். அங்கு மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர்களை கழகத்தின் சார்பில் பாராட்டி சால்வை அணிவித்து, பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கினோம். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற 95 வயதைக் கடந்த லால்குடி வட்டம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மணக்கால் ரத்தினம் அவர்கள் நடந்து வர முடியாத நிலையில், அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று சால்வை அணிவித்து, விருது வழங்கி, பாராட்டிதழையும் வழங்கினோம். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சங்கப் பிள்ளை அவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது. மாநாட்டினை ஒட்டி இளைஞரணியின் சார்பில் வீதி நாடகமும், கழகப் பாடல்கள் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மாநாட்டினை முன்னிட்டு நகரமே ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் இருந்தது. மாநாட்டில் எனது உரையை பொதுமக்களும், கழகப் பொறுப்பாளர்களும் இறுதிவரை கேட்டு மகிழ்ந்தனர். 25.1.1995 அன்று திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சிறுதையூர் பேருந்து நிலையம் எதிரில் மாநில திராவிடர் விவசாய அணி செயலாளர் இ.ச.தேவசகாயம் அவர்களால் கட்டப்பட்ட ‘பெரியார் திருமண மாளிகை’ பெயர்ப் பலகையை பலத்த கைத்தட்டலுக்கிடையே மகிழ்ச்சியோடு திறந்து வைத்தேன். இ.ச.தேவசகாயத்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். பெரியார் திருமண மாளிகையின் திறப்பு விழா அன்றே கீழவாளாடி திராவிடர் கழக விவசாய தொழிலாளரணியின் தலைவர் வை.முத்து _ பழனியம்மாள் ஆகியோரின் மகன் ஜெயராஜுக்கும், கடுக்காத்துறை ரா.பெரியசாமி _ கனகம்மாள் ஆகியோரின் மகள் கலைச்செல்விக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச்செய்து வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன். சிதம்பரம் ஜெயராமன் 28.1.1995 அன்று ‘இசைச்சித்தர்’ என்று நம் எல்லோராலும் மிகுந்த பாசத்தோடும், மரியாதையோடும் அழைக்கப்படும் திருவாளர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் மறைவுற்றார் என்கிற செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் துயரத்தையும் அடைந்தேன். “இசை உலகில் அவரது சாதனை ஒப்பற்ற ஒன்றாகும். தமிழிசை வளர்த்த ஞானசூரியனாகத் திகழ்ந்த மாமேதை அவர். தமிழின உணர்வும், மொழி உணர்வும், தத்துவ ஞானமும் _ அவரது இயல்பும் ஆற்றலும் தனிச் சிறப்பானவை. எவராலும் நிரப்பப்பட முடியாத ஓர் இடம் அவரது இடம். அவரது பெருமை என்பது தமிழினத்தின் பெருமையாகும். தமிழ், ஆங்கில ஏடுகள் பலவற்றில் அவரது மறைவு குறித்து அவருக்குத் தரவேண்டிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்பது கண்டனத்திற்குரிய ஒன்று. தமிழ்நாடு அரசும், அதன் இயல் இசை நாடக மன்றமும் அவருக்குரிய சிறப்பினைச் செய்ய முன்வருவது அவசியம், அவசரம். அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு தமிழிசைக் கல்லூரிக்கு அவரது பெயரைச் சூட்ட முதல்வருக்கு இதனை வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றோம். அவரது இழப்பினால் வாடி வருந்தும், அவரது பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என இரங்கல் செய்தியை வெளியிட்டோம். சிவகங்கை சண்முகநாதன் 30.1.1995 அன்று சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும் _ சுயமரியாதை வீரரும் _ முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதன் அவர்கள் முடிவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தோம். “தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்னும் அறக்கட்டளையின் தலைவராக 17 ஆண்டுகளாக சிறப்பாகத் தொண்டாற்றியவர். நமது நிரந்தர மரியாதைக்குரிய ‘வக்கீல் அய்யா’ என்று அன்பொழுக அனைவராலும் அழைக்கப்படும் மானமிகு சிவகங்கை திரு.இரா.சண்முகநாதன் அவர்களின் மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும். ‘ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்ற வரிகளுக்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு அவர். நம் அறிவு ஆசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இயக்கத்தில் தன்னை கட்டுப்பாட்டின் உருவமாக நினைத்து செயல்பட்ட ஓர் இராணுவ வீரனைப் போல் கடைசி மூச்சடங்கும் வரை ஒரே இயக்கம், ஒரே தலைமை, ஒரே கொடி, ஒரே கொள்கை என்பதைத் தவிர, வேறு எந்த சபலங்களையும் அறியாதவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற்குப் பிறகும் இயக்கம் இன்று புத்தொளி பெற்று, புகழ்க் கோபுரத்தில் நின்று ஒளியூட்டுகிறது என்றால் அவரைப் போன்றவர்களது சந்தேகமற்ற வழிகாட்டுதலும், பேராதரவுமே காரணமாகும். அவரது இழப்பு சுயமரியாதைக் கொள்கைக் குடும்பத்திற்கே பேரிழப்பு! அவரது இழப்பால் நேரிடையாக பாதிப்புக்கு ஆளாகியுள்ள அவரது துணைவியார் அம்மா இராமலக்குமி அம்மையாருக்கும் குடும்பத்தினர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம். சிவகங்கை சண்முகநாதன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் ஆசிரியர் 3.2.1995 அன்று கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டேன். ஜாதி ஒழிப்பு மாநாட்டின் முதல் நிகழ்வாக கழக இளைஞரணியினரின் வீதி நாடகமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் தேனி பரமராஜ் _ தங்கம்மாள் ஆகியோரின் மகன் கிருட்டினசாமிக்கும், மேட்டூர் கந்தசாமி _ கலையரசி ஆகியோரின் மகள் புனிதாவுக்கும், குருவை வெள்ளையன் _ ராசம்மாள் ஆகியோரின் மகன் சரவணன், சேலம் சுந்தரமூர்த்தி _ ஜாய் மனோகரி ஆகியோரின் மகள் சுதா ஆகியோருக்கும் மேடையிலேயே ஜாதி மறுப்பு மண விழாவை உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தேன். 80 வயது முதிர்ந்த பெரியார் பெருந்தொண்டர்களும் பாராட்டப்பட்டனர். சத்தியமங்கலம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் சிறப்புரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மணமக்களை வாழ்த்தி உரையாற்றுகையில், “இந்த ஆண்டு முழுவதும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறோம். இங்கே ஜாதி ஒழிப்பு மாநாட்டில் 2 ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. இங்கே அமர்ந்திருக்கிற மணமக்களைப் பாராட்டுகிறேன். இதுதான் தந்தை பெரியார் தொண்டர்களின் இலக்கணம். அதற்கு அடையாளமாகத்தான் இந்த இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணத்தை இங்கே நடத்திக் காட்டியிருக்கிறார்கள். ஜாதி ஒழிப்பு மாநாட்டில் எங்கள் செலவிலேயே உங்களுக்கு மாலை வாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறோம்’’ என ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தை எடுத்துக் கூறினேன். கல்லாவி ஜாதி ஒழிப்பு மாநாட்டில் மணமக்கள் அண்ணா.சரவணன் - இந்திராகாந்தி வாழ்க்கை ஒப்பந்த விழாவில் உறுதி மொழி கூறி நடத்தி வைக்கும் ஆசிரியர் 5.2.1995 அன்று தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கல்லாவியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு மேடையில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையை பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே திறந்து வைத்தேன். அதனை ஒட்டிய மாநாட்டு மேடையிலேயே அண்ணா.சரவணன் - இந்திராகாந்தி மற்றும் குமார் _ கலையரசிக்கும் ஜாதி ஒழிப்பு திருமணங்கள் நடைபெற்றது. அவர்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். அதனைத் தொடர்ந்து சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற எஸ்.கே.சின்னப்பன், க.இரணியன், ஆ.ராம்தாசு, ராசேந்திரன் ஆகியோருக்கு சால்வை போர்த்தி சான்றிதழ் வழங்கிப் பாராட்டினேன். மாநாட்டில் கலந்துகொண்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தேன். தந்தை பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியையொட்டி கல்லாவி நகரமே கழகக் கொடி, தோரணங்களாலும், மின் விளக்குகளாலும்,  அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் இறுதிவரை இருந்து உரையைச் செவிமெடுத்தனர். (நினைவுகள் நீளும்)செய்திகளை பகிர்ந்து கொள்ள

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (66): வைத்தியநாத அய்யரின் யோக்கியதை!

நேயன் சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தினந்தோறும் மாலை 4:00 மணிக்கு ஆலயத்துக்குச் செல்லும் சந்நிதித் தெருவில் 4 தொண்டர்கள் சத்தியாக்கிரகம் செய்கிறார்கள். இதுவரை தலைவர் ராமன் பிள்ளை உள்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் 4 பேருக்கு திருவிதாங்கூர் பீனல்கோடு 90ஆவது செக்ஷன்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததினால் 6 மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது என ‘திராவிடன்’ -19.5.1930 செய்தி வெளியிட்டது. ஆடி அமாவாசையன்று சுமார் 100 நாடார்களும், ஹரிஜனங்களும் கிழக்குக் கோபுரத்தின் வழியாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் நுழைய எத்தனித்ததாகவும் சனாதனிகளும் சேர்வைக்காரர்களும் தடுத்துவிட்டதாகவும், பகல் பூஜைகள் வழக்கத்துக்கு முன்னதாகவே நடத்தப்பட்டு, கோயில் கதவுகள் பூட்டப்பட்டு விட்டனவாம். ஆக, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் அறிவதோடு, அந்தப் போராட்டங்கள் பெரிதும் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் தொண்டர்களாலேதான் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. பெரிய கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் செல்ல தற்போது தடையில்லை என்றாலும், கிராமப்புறக் கோயில்களில் தாழ்த்தப் பட்டோருக்கான தடையும், அதை யொட்டிய தாக்குதல்களும் நடைபெறுகின்றன என்பது கசப்பான உண்மை என ‘விடுதலை’ 16.8.1939 நாளிதழில் செய்தி வெளியிட்டது. ஸ்ரீ மீனாக்ஷி கோவில் ஆலயப் பிரவேசம்: கோயில்களில் பூஜைசெய்யும் பட்டர்கள் நிலை ஒரே நிலையில் இல்லாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சியார் அதிகாரிகள் உத்தரவுப்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசத்தை ஒப்புக்கொள்ளலாம் என்றும், மற்றொரு கட்சியார், எவர் எவ்விதம் உத்தரவிடினும் தாங்கள், தீண்டாதார் ஆலயப் பிரவேசத்தை ஆதரிப்பதில்லை என்றும், ஒருகால் பெருந்திரளாக மக்கள் ஆலயத்தினுள் புகுந்துவிட்டால் ஸ்வாமி இருக்கும் மூலஸ்தானத்தைப் பூட்டிக்கொண்டு வெளியில் வந்துவிடுவதென்றும் தீர்மானம் கொண்டிருப்பதாய்த் தெரிகிறது. கோயிலுக்குச் சென்ற மூவரை கோயில் சிப்பந்திகள் யார், எந்த ஊர் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் நீ யார் என்று கேட்டுவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது என ‘திராவிடன்’ (26.9.1932 பக்கம் - 11) நாளிதழில் செய்தி வெளியிட்டது. ‘தினத்தந்தி’ நாளிதழ் மதுரை வைத்தியநாத அய்யரைப் பற்றிய கட்டுரையொன்றை 8.7.2014 அன்று வெளியிட்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களையும் நாடார்களையும் அழைத்துக் கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன் 8.7.1939லேயே முதன்முறையாக ஆலயப் பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டுகிறது. சென்னைச் சட்டமன்றத்தில் 01.11.1932இல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30.10.1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது? வைத்தியநாத அய்யரின் யோக்கியதை! யார் இந்த வைத்தியநாத அய்யர்? இவருடைய நோக்கம் என்ன? எந்தச் சூழ்நிலையில் இவர் கோயில் நுழைவுக் கிளர்ச்சி செய்கிறார்? எந்த வகையில் அந்தக் கோயில் நுழைவு நடைபெறுகிறது? அதற்கு முன்னும் பின்னும் அவருடைய செயல்பாடுகள் என்ன? என்பதை அறிந்து கொண்டால் பார்ப்பனர்களால் தாங்கிப் பிடிக்கப்படும் வைத்தியநாத அய்யரின் முகமூடி கிழிந்து விடும். “நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கோயில் நுழையும் உரிமை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு விரோதமான சாத்திரங்களையும் _ பழைய ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும்’’ என்று தந்தை பெரியாரால் 1922ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாநாட்டில் மேற்கண்ட தீர்மானத்தைக் கொண்டுவர விடாமல் பல பார்ப்பனர்கள் தகராறு செய்தனர். அதையும் சமாளித்து திரு.வி.க. முன்மொழிய, தந்தை பெரியார் வழிமொழிந்தார். அந்தத் தீர்மானத்தை ஆட்சேபித்து சத்தியமூர்த்தி அய்யர், மதுரை வைத்தியநாத அய்யர், கும்பகோணம் பந்தலு அய்யர் ஆகியோர் கூச்சல் போட்டு, குழப்பம் விளைவித்து, பெரும் கலகத்தையே உருவாக்கி அத்தீர்மானத்தை ஓட்டுக்கு விடாமல், அத்தீர்மானத்தின் சாரமான கோயில் நுழைவு உரிமையின் உயிர்நாடியை அழித்து விட்டனர். 1922ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்கு எதிராகக் கூப்பாடு போட்ட மதுரை வைத்தியாத அய்யர்தான் கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று தேசியத் திலகங்கள் எல்லாம் எழுதியும் பேசியும் வருகின்றனர். வைத்தியநாத அய்யரின் வருணாசிரம வெறியை வரலாறு பறைசாற்றுவதை மறைத்துவிட்டு, மனுதருமவாதிகள் அவரை ‘அரிசனத் தந்தை’ என்ற அடைமொழியோடு பொய் வரலாற்றைப் புனைந்து எழுதுகிறார்கள். 1922ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்கு எதிராக இருந்த மதுரை வைத்தியநாத அய்யர் 1939ஆம் ஆண்டு மதுரை கோயிலில் நுழையும் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அன்று இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? அவரை அந்தப் போராட்டம் நடத்தத் தூண்டிய காரணி எது? 17 ஆண்டுகளில் வைத்தியநாத அய்யரின் மனநிலை மாற்றம் அடைந்து தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து விட்டாரா? அதன் பின்னர் தீண்டாமைக் கொடுமையை அழிப்பதையே தன் வாழ்நாளில் முக்கியப் பணியாகச் செய்தாரா? இல்லை. இல்லவே இல்லை. தீண்டாமையை ஒழித்து, ஏற்றத்தாழ்வை அழித்து எல்லோருக்கும் எல்லா உரிமையும் கிடைத்திட அவர் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தவில்லை. தீண்டாமைக்கு எதிராக அவர் போர் தொடுத்தார் என்பது உண்மையானால், தீண்டாமைக்குக் காரணமான ஜாதியையும், ஜாதியை உருவாக்கிய இந்து மதத்தையும் சேர்த்து அல்லவா எதிர்த்திருக்க வேண்டும்? அப்படி அவர் ஜாதியையும், இந்து மதத்தையும் எதிர்த்து இயக்கம் எதுவும் நடத்தவில்லை. நடத்தியதாக, அவர் புகழ்பாடும் கட்டுரையாளர்கள் யாரும் கூறவில்லை. ஆக, வைத்தியநாத அய்யர் மதுரையில் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த அவருக்குத் தூண்டுகோலாக இருந்தது தீண்டாமைக் கொடுமை அல்ல என்பது உறுதியாகிறது. வரலாற்றுப் பக்கங்களில்... அப்படியானால், அவருடைய போராட்டம் நடக்கக் காரணமாக இருந்தது எது? எந்த இலாபத்தை எதிர்பார்த்து அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்? என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதுபற்றிய மேலும் விவரத்தை வரலாற்று ஆய்வாளர்களின் மேற்கோள்களுடன் அறிந்து கொண்டால் வைத்தியநாத அய்யரின் பித்தலாட்டத்தனமான அரிசன சேவையைப் புரிந்து கொள்ளலாம். (தொடரும்.....)செய்திகளை பகிர்ந்து கொள்ள

வரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

நினைவு நாள் : 27.11.2008 விசுவநாத்பிரதாப்சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாதகாலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார். 80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால்,  சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா?  என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர். இடஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப்பங்கீடு என்றஉரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர். பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால்,  பா.ஜ.க.வுடன் சமரசமாகப் போயிருக்கலாம். மண்டல்குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்கு முன் பத்தாண்டு கால ஆட்சியாளர்கள் அப்படித் தானே நடந்து கொண்டார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதியஜனதா தன் ஆதரவை விலக்கி தன் முகவரியைக் காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.  உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்து கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது.  (விதிவிலக்கு - காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஏ.கே.அப்துல் சமது என்னும் பெருமகனார்) அப்போது கூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா?  சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்! மும்பையில் வன் முறையைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே! திராவிடர் கழகத் தோழர்களிடத்திலும், தலைவரிடத்திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. “வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன்”  என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது. ஈழத்திலே - ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம்,  பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டு ராஜீவ்காந்தி பூரித்து மகிழ்ந்தார். அந்த ராணுவத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அழைத்த பெருமை,  அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்குக்குத்தான் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “எந்த ஓர் இயக்கத்துக்கும் முத்திரை குத்தக் கூடிய ரப்பர் ஸ்டாம்ப் எனது சட்டைப் பையில் இல்லை” என்று பதிலடிதந்தார். வி.பி. சிங் மறைவைக் கூட இருட்டடித்தன உயர்ஜாதி ஊடகங்கள்!  அந்த அளவுக்கு அவர் சமூக நீதியாளர் என்பது தான் அதன் ஆழமான பொருளாகும். வி.பி. சிங் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது. முடியவே முடியாது! வாழ்க வி.பி.சிங்!  செய்திகளை பகிர்ந்து கொள்ள

வாசகர் மடல்

‘உண்மை’ நவம்பர் 1 -15 இதழில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் அருமை. ‘தீபாவளி’ பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. ஆரியர்கள் எப்படி தன்னுடைய பண்டிகைகளை நம்முடைய பண்டிகைகளாக மாற்றி அதன் மூலம் வணிகம் செய்கிறார்கள் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் வே.எழில் அவர்களின் ‘ஆண் குழந்தை வளர்ப்பு’ கட்டுரை இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. பெற்றோர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் உடல் போக்குகளையும், அவர்களுடைய குணம் சார்ந்த விஷயங்களையும் சிறு வயது முதலே சொல்லித் தந்து வளர்க்க வேண்டும் என்பதை ஆசிரியர் அருமையாக விளக்கி எழுதியுள்ளார். ஜெயக்குமார் அவர்களின், பெரியார் - இங்கர்சால் ஒப்பீட்டுக் கட்டுரை பகுத்தறிவாதிகளின் இனநலப் போக்குகளை நாம் அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. ‘அய்யாவின் அடிச்சுட்டில்...’ வரலாற்றில் ‘வி.பி.சிங் அவர்கள் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திய பாங்கு அருமை. ஆசிரியரின் ‘நச்’ பதில்கள் அருமை. முகப்புக் கட்டுரையாக உள்ள கோ.கருணாநிதியின் ‘ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்?’ கட்டுரை மத்திய ஆளும் பா.ஜ.க. எக்காலத்திலும் கணக்கெடுப்பை வெளியிடாது. அதனை மூடி மறைத்து நம்மை அடிமையாக நடத்தவே முயலும் என்பது அவர்களின் கொள்கையாக உள்ளது. மருத்துவர் இரா.கவுதமனின் மருத்துவக் கட்டுரை மருத்துவ உலகில் நடைபெற்று வரும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியும் அதன்மூலம் மனிதர்களின் நோய்க் கூறுகளை அழித்து நீண்ட நாள் வாழ முடியும் என்பதைக் கூறுகிறது. ‘உண்மை’ இதழ் அனைவரும் படிக்கும் வகையில் பல்வேறு செய்திகளோடு வெளிவருவது அருமை. தங்களின் பணி சிறக்கட்டும். இப்படிக்கு சமத்துவ அசுரன் ‘உண்மை’ அக்டோபர் 16-31, 2020 படித்தேன். அதில் ஆசிரியர் எழுதிய தலையங்கம் படித்தபோது, நம் மக்களின் தியாகங்கள் பற்றிய நினைவுகள் மனதை வருடுகிறது. ‘உண்மை’யில் வெளிவரும் செய்தி இளைஞர்களுக்கு நல்ல பாடமாக அமையும். அதனை ஒட்டிய சில வரலாற்றுச் செய்திகள்: 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று திருச்சி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் இந்தியின் கட்டாயத்தை எதிர்த்துத் தந்தை பெரியார் வீறுரை. 1938 பிப்ரவரி 27இல் காஞ்சியில் தமிழக வரலாற்றில் முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு. 1938இல் அய்ந்து பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்முதலில் தளை செய்யப்பட்டனர். 1939 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் உயிர் ஈகம் செய்தவர் நடராசன். 26.1.1965 சிவகங்கை மாணவர் இராசேந்திரன் தமிழக வரலாற்றில் மொழிப் போருக்காகத் துப்பாக்கிச் சூடுபட்டு இறந்த முதல் பெருநிகழ்வு. 1965 பிப்ரவரி 2இல் கடலூர் - கடலூரை அடுத்த அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீயிட்டு வீரச்சாவு எய்தி ஈகியானார். உலக வரலாற்றில் 1965 போல மொழிப் போராட்டம் இதற்கு முன் நடந்ததாகச் செய்தியில்லை. அய்.நா.சபையிலும் பேசப்பட்டது. இந்த மொழிப் போரில்தான் முதன்முறையாய் இராணுவம் வந்தது. முதன்முதலாய்த் தமிழர்கள் குவியல் குவியலாய்க் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் நடந்தது. உலக வரலாற்றிலேயே மொழிக்காக முதன் முதலாய்த் தீக்குளித்த துயரம் நிகழ்ந்தது. மொழிப்போர் வரலாற்றை அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் அண்ணாவின் அறிவு புலப்படும், நமது ஆசிரியரின் ஒப்பரும் இயக்கப் பணியை வியப்போடு பார்க்கிறேன். - க.பழநிசாமி, தெ.புதுப்பட்டிசெய்திகளை பகிர்ந்து கொள்ள