வாசகர் கடிதம்

ஜூன் 16-30

 

வாழ்க பெரியார்!

மதிப்பிற்குரிய ‘உண்மை’ இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என்பவை இயல்பாக நாட்டில் நடக்கக்கூடிய ஒன்றாகும். அதற்காக துப்பாக்கி மூலம் காவல்துறை வன்முறையில் ஈடுபடுவது கண்டனத்திற்கு உரியது. ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில் போராட்டம் நடத்தத் கூடாதா? அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். தி.மு.க ஆட்சிக் காலத்தில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் முறை நிறுத்தப்பட்டது. கலைஞர் ஒரு மனிதநேய பண்பாளர். இந்த ஆட்சியில் நடப்பவை வித்தியாசமாக உள்ளது. 13 மனித உயிர்களை துப்பாக்கித் தோட்டாக்கள் பதம் பார்த்துள்ளது. இப்படியே சென்றால் மனிதர்கள் சுதந்தரமாகப் போராடும் நிலையிருக்காது. மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நடத்தக்கூட விடமறுக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வைப் போன்று தமிழ்நாட்டில் வேறெங்கும் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறத்தின் வழியில் போராட்டம் நடத்தினால் அவர்களை தண்டிக்கக் கூடாது. தந்தை பெரியார், காந்தியார் ஆகியோர் அமைதி வழிப் போராட்டங்களையே நடத்தினர். நன்றி.

‘BAN STERLITE’

– அ.உதயபாரதி, கெருகம்பாக்கம்

“சமூகநீதிக்கு சவக்குழி”

உண்மை (ஜூன் 1-15, 2018) இதழில் எழுத்தாளர் மஞ்சை வசந்தனின் அடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆட்சி சூழ்ச்சி! ஆர்த்தெழுவோம்! முறியடிப்போம்! கட்டுரையில் சமூகநீதிக்கு எதிரான நெஞ்சை பிளக்கும் செய்திகள் ஏராளமாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

தந்தை பெரியாரின் பெருமுயற்சியால் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி-வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்று மத்திய-மாநில அரசுப் பணிகளில் அங்கம் வகித்து முத்திரை பதித்து வருகின்றனர் என்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாகும். ஆனால், நாட்டின் முதன்மைப் பணியான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகும் ‘அடித்தளப் பயிற்சி’ என்ற புதிய பயிற்சியில் தேர்ச்சி பெறவேண்டும் என்று மத்திய மோடி அரசு அண்மையில் அறிவித்துள்ளது ‘சமூகநீதியை சவக்குழிக்கு’ அனுப்ப முயலும் சதிச் செயலாகும்.

தந்தை பெரியாரால் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற தீய நோக்கத்தில் இன எதிரிகள் திட்டமிட்டு ‘நீட் மற்றும் அடித்தளப் பயிற்சி’ என்ற புதிய வடிவில் பல்வேறு சூழ்ச்சிகளை சன்னமாக செய்து வருகின்றனர். ஆனால், சமூகநீதிக்கு முன்னோடி மாநிலமான தமிழ்நாடு  நீட் – அடித்தளப் பயிற்சி உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில்உள்ள சூட்சமத்தை முறியடித்து, வெற்றிகரமாக சூடி இந்தியாவிற்கு வழிகாட்டியாகத் திகழும் என்பது உறுதி.

வெல்க சமூகநீதி! வீழ்க ஆரியம்!

– சீ.சீத்தாபதி, தாம்பரம், சென்னை-45

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *