பட்டுக்கோட்டை இளைஞரணி மாநாடு-2018

ஜூன் 16-30

“திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!!’’ என்ற கொள்கை முழக்கத்தோடு 29.05.2018 செவ்வாய்க்கிழமை மாலை தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ‘இளைஞரணி எழுச்சி மாநாடு’ மிகப் பிரமாண்டமாய் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

மிகச் சிறப்பாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டையொட்டி தஞ்சைக் கழக மண்டலத்தைச் சார்ந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கழக மாவட்டத்தைச் சார்ந்த அத்தனை ஊர்களிலும் சுவர் விளம்பரங்கள் மாநாட்டின் நோக்கத்தை தெளிவாய் எடுத்துக்காட்டின.

பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கழகக் கொடிகள் எண்ணிலடங்காது கம்பீரமாய் காட்சியளித்தன. பார்க்கும் இடமெல்லாம் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது. நடந்தது தஞ்சை மண்டல மாநாடு என்றாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்தெல்லாம் தோழர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர்.

மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்த எழுச்சிப் பேரணி:

பட்டுக்கோட்டைக் கழக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கா.தென்னவன் அவர்கள் தலைமையில் பட்டுக்கோட்டை ஒன்றிய கழகத் தலைவர் வை.சேகர் தொடங்கி வைக்க, மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை அண்ணா அரங்கின் அருகிலிருந்து பேரணி மிகுந்த எழுச்சியுடன் தொடங்கியது.

நகரின் முக்கிய சாலைகள் வழியாக முன்னேறி ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரி சிலையருகில் மாநாட்டு மேடையருகே இரவு 7 மணிக்கு பேரணி நிறைவு பெற்றது. பேரணியில் கழகக் கொடிகளை கையில் பிடித்துக்கொண்டு பெரியார் பிஞ்சுகள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி மற்றும் அவர்களைத் தொடர்ந்து கழகத் தோழர்களும் ராணுவ மிடுக்குடன் நெஞ்சை நிமிர்த்தி அணிவகுத்து சென்றனர்.

தீச்சட்டி ஏந்துவதற்கும் முதுகில் அலகு குத்தி கார் இழுப்பதற்கும் தெய்வசக்தி காரணமல்ல என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். உரத்தநாடு நா.அன்பரசு, கோயில்வெண்ணி பொன்.பாலா ஆகியோர் முதுகில் அலகு குத்தி காரை இழுத்துக்காட்டினர்.

 

மேலும், பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியவர்கள் வரை கூர்மையான அரிவாள் மீது ஏறி நின்று ‘கடவுள் இல்லை’ என்று உரத்து கூறியது கண்டு பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மேற்கண்டவைகளுக்கு கடவுள் சக்தி காரணமில்லை என்று மக்களும் தெளிவுக்கு வந்தனர்.

அதோடு மட்டுமல்லாது இயக்க தோழர்கள் அலகு காவடியையும், செடல் காவடியையும் எடுத்து வந்து கடவுள் பெயரில் செய்யப்பட்டுவரும் மூடப்பழக்கங்களின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கினர்.

தலைவர் சிலைகளுக்கு மாலையணிவித்தல்

பேரணி வந்துகொண்டிருந்த வழியில் இருந்த தந்தை பெரியார் சிலை, அறிஞர் அண்ணா சிலை, ‘பட்டுக்கோட்டை’ கல்யாணசுந்தரம் சிலை, ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரி ஆகியோரின் சிலைகளுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிலம்பாட்ட சாகசம்

பேரணியின் முன்பாக வீரவிளையாட்டுகள் நடந்தன. ‘கறம்பைக்குடி’ முத்துவின் சிலம்பாட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. இவரோடு சேர்ந்து பெரியார் பிஞ்சுகளும், கழகத் தோழர்களும் சிலம்பம் சுற்றி ஆடிப்பாடி வந்தனர்.

பொலிவோடு திகழ்ந்த மாநாட்டு மேடை

சுயமரியாதைச் சுடரொளிகள் புலவஞ்சி ரெ.இராமையன், புதுக்கோட்டை உள்ளூர் எம்.எஸ்.முத்துக்குமாரசாமி ஆகியோரின் பெயரில் மாநாட்டு மேடையும், அரங்கமும் மிக எழிலோடு அமைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டு தலைமை

மாநாட்டு வரவேற்புரையை பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன் ஆற்றினார். மாநாட்டுக்கு தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.வெற்றிக்குமார் தலைமை வகித்து, தலைமையுரையாற்றினார். இவரைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றினர்.

பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்

பொதுச்செயலாளர் உரையாற்றுகையில், “இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டுக்காக 65 தொடர் கூட்டங்களை சிறப்பாக நடத்தியிருக்கின்றனர். இன்று மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் அனைத்தும் வருங்காலத்தில் அரசின் சட்டங்களாக வரக்கூடியவைகள்’’ என்று முத்தாய்பாய் உரையாற்றினார்.

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

கவிஞர் அவர்கள் உரையாற்றுகையில், “இந்த மாநாட்டின் வெற்றி என்பது நமது இயக்கத் தோழர்களின் தொடர் நடவடிக்கைகளைப் பொறுத்து அமைந்திருக்கிறது’’

இம்மாநாட்டைத் தொடர்ந்து ஜூலையில் குடந்தையில் மாணவர் மாநில மாநாடு, 2019 ஜனவரியில் தஞ்சையில் கழக மாநில மாநாடுகள் நடைபெறும். மேலும், மாநாட்டு பேரணி சிறப்பு பற்றியும், வடக்கே பி.ஜே.பி ஆட்சியில் நடக்கும் அவலங்களை எடுத்துக்காட்டியும் விளக்கிப் பேசினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

“இளைஞர்கள் திராவிடர் கழகம் நோக்கி எந்த பிரதிபலனும் பாராமல் வந்து கொண்டிருக்கின்றனர். திராவிடர் கழகத்தாலும், தந்தை பெரியாராலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நிறைய பேர் மருத்துவர் ஆகி உள்ளனர்.

குருகுலக் கல்வியை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் பார்ப்பனரல்லாத தோழர்களே! நாங்கள் போராடுவது எங்கள் பிள்ளைகளுக்காக  அல்ல! உங்கள் பிள்ளைகளுக்குத்தான்.

தமிழின் பெருமைபற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். ஆனால், கோவில் கருவறையில் அர்ச்சனை மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ளவில்லையே ஏன்? எல்லாம் ஏமாற்று வேலை.

ஆர்.எஸ்.எஸ் திட்டம் தீட்டிக்கொடுத்து பி.ஜே.பி அரசு செயல்படுத்த துடிப்பதுதான் இந்த குருகுலக் கல்வி. இதனை ஒழிக்க உயிர்பலிதான் தேவையென்றால், அதற்கும் தயார். 13 உயிர்பலிகளைக் கொடுத்துதான் ‘ஸ்டெர்லைட் ஆலை’ மூடப்பட்டுள்ளது.

ஆபத்தான குருகுலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராவோம்! இளைஞர்களே, தோழர்களே குருதி கையொப்பமிட்டு போராட்ட வீரர் பட்டியலைத் தாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்தார் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர்  உரையாற்றி முடிப்பதற்குள் ஆயிரம் கழகத் தோழர்கள் போராட்டத்திற்கு தயார்! தயார்!! என்று பலத்த கரவொலிகளுக்கிடையே தமிழர் தலைவரிடம் பட்டியலை வழங்கினர்.

முத்திரை பதித்த மாநாட்டு நிகழ்வுகள்:

1. 700 ‘உண்மை’ சந்தா!

மாநாட்டு மேடையில், திராவிடர் கழக தஞ்சை மண்டல இளைஞரணி சார்பில் 700 ‘உண்மை’ சந்தாக்களுக்கான ரூ.2,20,500/_அய் மண்டல கழகப் பொறுப்பாளர்கள் கழகத் தலைவரிடம் வழங்கினார்.

2. பாடுபட்டோருக்கு பாராட்டு

பட்டுக்கோட்டை இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு அயராது உழைத்த தோழர்களுக்குப் பாராட்டும், சிறப்பும் செய்யப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்தார்.

தீர்மானங்கள்

29.05.2018 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டில், 17 தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்மொழிந்தார். பலத்த கரவொலிகளுக் கிடையே தீர்மானங்கள் வழிமொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மாநாடு நிறைவு

ஆசிரியர் அவர்களின் எழுச்சி மிகுந்த நிறைவுரையைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக இளைஞரணி தலைவர் எஸ்.மாதவன் நன்றி கூற இரவு 10 மணிக்கு மாநாடு வரலாற்று சிறப்புடன் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *