இராமாயணம் – இராமன் – இராமராஜ்யம்

ஜூன் 16-30

 (ஆய்வுச் சொற்பொழிவு – 5)

– இனியன்

சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் 21.05.2018 அன்று மாலை “இராமாயணம் _ இராமன் _ இராமராஜ்ஜியம்’’ (கம்பன் புளுகும் _ வால்மீகியின் வாய்மையும்) என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆய்வு சொற்பொழிவாற்றினார்.

இதே தலைப்பில் ஏற்கெனவே நான்கு நாட்கள் சொற்பொழிவு நடந்திருந்த நிலையில் அய்ந்தாவது நாளாக ஆசிரியரின் பொழிவை கேட்க அரங்கம் முழுவதும் ஆர்வத்துடன் மக்கள் கூடியிருந்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

ஆசிரியரின் ஆய்வுச் சொற்பொழிவு

“சி.ஆர்.சீனுவாசய்யங்கார் அவர்கள் பழைய இராமாயண நூல்களையெல்லாம் 1935ஆம் ஆண்டுகளில் தொகுத்து, “இராமாயண நோட்டுகள்’’ என்று தனியே ஒன்றை எழுதியிருக்கிறார். இதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் தொகுத்து வைத்து வரிவரியாக ஆய்வு செய்திருக்கிறார். அதையெல்லாம் சுட்டிக்காட்டி விமர்சனமும் செய்திருக்கிறார். உடனே அடுத்த பதிப்பை வெளியிடும்போது அந்தப் பகுதிகளையெல்லாம் நீக்கி இராமாயணத்தை ரிப்பேர் செய்துவிட்டனர்’’ என்று ஆசிரியர் அவர்கள் சொல்லும்பொழுது கூட்டத்தில் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது.

“இராமன் ஒன்றும் காய்கறிப் பிரியன் அல்லன்; பலவகை ஊன்களை சாப்பிட்டவன் தான் _ இதோ ஆதாரம்’’ என்று வால்மீகி இராமாயணத்திலிருந்து சில பாடல் வரிகளை ஆசிரியர் எடுத்துக்காட்டினார்.

“வால்மீகி காலத்தில் வடநாட்டில் ஆரியர்கள் ஊன் தின்றனர். ஆனால், கம்பனோ மரவகை உணவு உண்டனர் என்று புளுகி இருக்கின்றான். வால்மீகி வாய்மையுடையவர். அவரின் இராமாயணத்தில் இராமன் ஊன் உண்ணக் கூடியவன் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன’’ என்று ஆதாரங்களை சுட்டிக்காட்டி ஆசிரியர் பேசினார்.

“மகாபாரதம் மற்றும் இராமாயணம் இந்த இரண்டிலும் விலங்குகளை பலியிடுவது பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. மேலும் பலியிட்ட பசுக்களை தசரதனும் அவனது கூட்டத்தினரும் பங்கிட்டு உண்டு இருக்கின்றனர்.

காட்டு விலங்குகள் யாகத்தில் இடையூறு செய்கின்றன என்று முனிவர்கள் கூற, ராமனும், லட்சுமணனும் எண்ணிலடங்காத விலங்குகளைக் கொன்று குவித்தனர். இந்தச் செய்தி இராமாயணத்தில் பல்வேறு காண்டங்களில் நிறைய கிடைக்கிறது.

சீதை கருவுற்றிருந்தபோது பல்வேறு வகையான திராட்சை ரசம் மற்றும் பலவிதமான இறைச்சிகளை பணியாளர்கள் பரிமாறினார்கள்.’’

“பரத்வாஜ முனிவர் பரதனின் போர் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் பற்றி கூறியுள்ளார். அதில் இறைச்சி மற்றும் மதுபானம் ஆகியவற்றை ராமனே விரும்பி அனைவருக்கும் பகிர்ந்தளித்து தானும் உண்பார். மேலும் கொழுத்த கன்றுக் குட்டியை ராமனே வெட்டி இறைச்சியை பங்கிடுவானாம். அதுபோல் மான் இறைச்சி, எருமை, பன்றி, மயில் மற்றும் காட்டுக்கோழி, வனத்தில் திரியும் ஆடுகள் போன்றவற்றையும் விரும்பி உண்பாராம்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இலங்கை வேந்தன் இராவணனின் விருந்தில் சைவ வகை உணவுகள் மட்டுமே காணப்பட்டனவாம். அதைவிட கும்பகர்ணனின் உணவுகளில் எங்குமே இறைச்சி பற்றிய குறிப்புகள் இல்லை. அனைத்தும் முழுக்க முழுக்க சைவ உணவுகள்’’ என்று வால்மீகி ராமாயணத்தை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டி ஆசிரியர் அவர்கள் ஆய்வுச் சொற்பொழிவை நிறைவு செய்தார்.

ஆசிரியரின் ஆதாரப்பூர்வ பொழிவைக் கேட்டு ஏராளமானோர் தெளிவுகொண்டு பயனடைந்தனர். மேலும், இன்னும் இரண்டு சொற்பொழிவுகளில் இந்த ஆய்வு பொழிவு நிறைவடையும் என ஆசிரியர் அறிவிக்க இரவு 9 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *