நீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு

ஜூன் 16-30

 ஏற்படுத்தும் பதறவைக்கும் படுகொலைகள்! அதிரவைக்கும் மோசடிகள்!

மஞ்சை வசந்தன்

மருத்துவக் கல்லூரியிலும், பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை அறிவித்த அந்த நொடிமுதலே ‘திராவிடர் கழகம்’ கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது – அனைத்துக் கட்சிகளையும் கூட்டி கண்டனத்தைத் தெரிவித்தது – நாடெங்கும் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தியது;- வீதியெல்லாம் போராட்டங்களை நடத்தியது.

டில்லி நாடாளுமன்றம் முன்புகூட கழக ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டில்லி கான்ஸ்டியூசன் மன்றத்தில்  பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில், ‘நீட்’டை எதிர்த்துக் கருத்துரை கண்டன உரைகளை நிகழ்த்தினார்கள்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று முத்தரப்பினரையும் கூட்டி போராடியது.

“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும், குறிப்பாக கிராமப்புற மக்களும், முதல் தலை முறையாகக் கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைத்தவர்களும் இந்த ‘நீட்’ தேர்வால் தரைமட்ட மாக்கப்படுவார்கள்; மருத்துவக் கல்லூரி வாசல் பக்கத்தில் கூடத் தலைவைத்துப் படுக்க முடியாத ஒரு ‘ரௌலட்’ சட்டம் போன்ற தேர்வைத் திணிக்கிறது’’ என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்த குரல்  உண்மை, உண்மை, நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போது நிரூபணமாகி விட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வின் முடிவுகளே தமிழ்நாட்டுக்குப் பேரிடியாக இருந்தது 38.83 விழுக்காடுதான். இவ்வாண்டோ அரசு சார்பில் பயிற்சி மய்யங்கள் அமைத்து பயிற்சி கொடுக்கப்பட்டாலும்  39.55 விழுக்காடு என்ற நிலை தான்.

‘நீட்’ பயிற்சி மய்யங்களைத் தமிழ்நாடு அரசு வைத்ததாக தமிழ்நாடு அரசு சொல்கிறது. அப்படி வைத்தும் மேம்படவில்லை!

அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநிலம் 74% டில்லி 74%

அரியானா 73%

உத்தரப்பிரதேசம் 60%

பீகார் 60% என்று பட்டியல் சொல்லுகிறது.

இவ்வளவுக்கும் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் தமிழகத்தில் இருபால் மாணவர்களின் வெற்றி 91.1 விழுக்காடு.

உத்தரப்பிரதேசத்திலோ இது 77.16 விழுக்காடு

ராஜஸ்தானிலோ வெறும் 75 விழுக்காடு.

 

பிளஸ் டூ தேர்வில் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாநிலங்கள் ‘நீட்’ தேர்வில் அதிகம் பேர் வெற்றி பெறுவதும், பிளஸ் டூ தேர்வில் அதிக விழுக்காட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் குறைந்த அளவு வெற்றி பெறுவதும் எப்படி? இதன் பின்னணி என்ன? இதில் அடங்கியுள்ள மர்மம், சதி, சூழ்ச்சி , மோசடிகள் என்ன?

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளக் கூடாது என்ற சூழ்ச்சிக்கான காரணம் இப்பொழுது கண்கூடாகத் தெரிந்துவிட்டதா இல்லையா? தமிழ்நாட்டில் இவ்வாண்டு 1450 இடங்கள் பறிபோயிருக்கின்றன. கல்வியில் சிறந்த தமிழ்நாடு ‘நீட்’ தேர்வில் அகில இந்திய வரிசையில் 34ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள கொடுமை ‘நீட்’டின் சதியை காட்டி நிற்கிறது.

கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவால் பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், ‘நீட்’ தேர்வில் வெறும் 87 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது.

தற்கொலைகள் அல்ல; படுகொலைகள்!

மருத்துவராகும் கனவு பலிக்கவில்லையே என்ற அதிர்ச்சியால் சென்ற ஆண்டு அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்றால், இவ்வாண்டு செஞ்சியையடுத்த குக்கிராமமான பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா ‘நீட்’ தேர்வின் முடிவால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 495 மதிப் பெண்களையும், பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண்களையும் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லும் குக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணான ஒரு கூலித் தொழிலாளியின் மகள் பெற்றுள்ளார் என்பது ஓர் இமாலய சாதனையல்லவா!

பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபாவால் ‘நீட்’ தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது என்றால், இதற்குக் காரணம் பிரதீபாவா? ஒடுக்கப்பட்ட மக்களைக் குறி வைத்துக் கழுத்தறுத்துக் குதறும் ‘நீட்’ தேர்வா?

மற்ற மாநிலங்களுக்கு தேர்வு மய்யங்களை மாற்றியும், குறிப்பாக 2000 கி.மீ தூரத்திலுள்ள ராஜஸ்தானுக்கு தேர்வு மய்யங்களை மாற்றி இரண்டு நாள் ரயில் பயணத்தால் உடல், உள உளச்சல், செலவுகளால் ஏழை மாணவர்களுக்கு அதிக நிதிச் சுமை, மாணவர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியும் மன உளச்சலுக்கு ஆளாக்கினர். பெற்றோர் மனவேதனையில் தேர்வின்போது மரணமடைந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் கண்ணன்  மகள் சுபஸ்ரீ (17), 12ஆம் வகுப்பில் 907 மதிப்பெண் பெற்றவர், ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்த வேதனையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லியைச் சேர்ந்த பிரணவ் மெகந்திரதா என்ற மாணவர் கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதியும் வெற்றிபெற முடியாத விரக்தியில் 8ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அய்தராபாத் மாணவி ஜஸ்லீன் கவுர்(18), ‘நீட்’ தேர்வில் எதிரிபார்த்த மதிப்பெண் பெற முடியாததால் ஒரு வணிக வளாகத்தின் 10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள பயலூர் பகுதி விவசாயி நாராயணன் மகள் சவுமியா ‘நீட்’ தேர்வு தோல்வியால் வேதனையுற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பதி கொர்ல குண்டாவைச் சேர்ந்த பாலாஜி (20), ‘மருத்துவர் ஆகவேண்டும்’ என்ற ஆர்வத்தில் கடுமையாகப் போராடி கடந்த இரண்டு முறை ‘நீட்’ தேர்வு எழுதியும் தோல்வி அடைந்ததால் மனவேதனையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலாஜியின் தாயார் வனஜாகுமாரி ஏற்கெனவே கணவரை இழந்திருந்த நிலையில் இரு மகன்களில் இளைய மகனையும் இழந்தார்.

கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம், சண்டூர் அருகே தோனிமலே கிராமத்தில் கனிம சுரங்க நிறுவனத்தில் வேலைபார்க்கும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட திருமலை_நாகமணி தம்பதியரின் மகள் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்தவர், மருத்துவராக ஆசைப்பட்டு ‘நீட்’ தேர்வெழுதி குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்த வேதனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவையெல்லாம் தற்கொலைகளா? இல்லை! இல்லை! தாங்கொணா மன அழுத்தம் தந்து செய்த படுகொலைகள்!

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சமூகநீதி என்பதற்கு என்னதான் பொருள்? அனிதாக்களும், பிரதீபாக்களும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருளா?

‘நீட்’ தேர்வில் நிறைந்துள்ள மர்மங்கள் அதர்மங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சி.பி.எஸ்.இ.யிடம் எந்தத் தகவலைக் கேட்டாலும் எங்களிடத்தில் தகவல் இல்லை என்பதுதான் ஒரே பதிலாக இருக்கிறதே _ இதுகுறித்து விக்னேஷ் பழனிசாமி என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். (4.6.2018).

இதன் மர்மம் என்ன? சூழ்ச்சிகளும், மோசடிகளும் ‘நீட்’டுக்குள் புதைந்து கிடக்கின்றன என்று அய்யப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன என்பதைத்தானே இது உறுதிப்படுத்துகிறது.

“Tech For All” தன்னார்வ தொண்டு நிறுவனம் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தரும் அறிக்கை:

அரியலூர் மாணவி ஒருவர், பிரதிபா என 35 பேர்களுக்கு அதிகமானோர் எங்கள் தொண்டு நிறுவனத்திற்கு ‘நீட்’ குறித்து புகார் கடிதம் அளித்துள்ளனர்.

‘நீட்’ தேர்வு முடிவுகள் இன்று மாலை வரும், மதியம் 2 மணி வரும் என்று சொன்னார்கள். ஆனால், நண்பகல் 12.30 மணிக்கே அவசர அவசரமாக வெளியிட்டு விட்டார்கள். ஏன் இந்த அவசரம்? நிச்சயம் இதில் குளறுபடி இருக்கின்றது. எங்கள் அமைப்பும் இதை கண்டுபிடித்து இருக்கிறது.

வெளிவந்திருக்கும் ‘நீட்’ தேர்வு முடிவுகள் முழுக்க முழுக்க மோசடியான தேர்வு முடிவுகள் (திணீதீக்ஷீவீநீணீtமீ ஸிமீsuறீt).

‘நீட்’ தேர்வு தோல்வியால் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் நடந்து தற்கொலைகள் அல்ல. சமூகத்தின் மீது மத்திய அரசு நடத்திய படுகொலைகள்.

இதை சாதாரணமாக சொன்னால், ‘அலட்சியம்’ என்று சொல்லலாம். அதிகபட்சமாக சொல்ல வேண்டுமென்றால், ‘தேச துரோகம்’. இந்த தவறுகளுக்கு எல்லாம் யார் காரணமோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

காவிரி தீர்ப்புக்கு 35 ஆண்டு காலமாக தாமதித்து வரும் நீதிமன்றம் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியிடுவதற்கு மட்டும் இத்தனை அவசரம் காட்டியது ஏன்?

எங்கள் தொண்டு நிறுவனம் கொடுத்த தவகல்களின்படிதான் திரு.டி.கே.ரங்கராஜன் வழக்கு போட்டிருக்கிறார்.

‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கெல்லாம் மத்திய அரசே காரணம். அதனால் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி கட்டமாட்டோம் என்று தமிழக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்து ‘நீட்’ எழுதியவர்கள் 24,720 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 460 பேர் மட்டும். இதற்குக் காரணம்:

1.                     பல மாநிலங்களில் தேர்வு மய்யம் அமைத்தது.

2.                     மாணவர்களை தீவிர சோதனை நடத்தி உளவியல் நெருக்கடி கொடுத்தது.

3.                     தமிழ் வினாத்தாள்கள் தாமதமாக தேர்வறைகளில் மாணவர்களுக்கு வழங்கியது.

4.                     180 கேள்விகளில் 90கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டு மாணவர்கள் 90% சதவீதத்திற்கும் மேல் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் நடந்த குளறுபடியால் தோல்வி அடைந்திருக்கின்றனர்.

CBSE Board–இன் மத்திய அரசின் கல்வித் துறை செயலாளர் ‘அனில் சொரூப்’  (Secretary, Department of School Education and Literacy, MHRD) தனது டிவிட்டரில், ‘சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் எல்லா நாளும் அது முடியாது’ என்று ‘நீட்’ தேர்வு முடிவு வெளிவரும் முன்பு பதிவிட்டது கவனிக்கத்தக்கது. ‘நீட்’ தவறுகளுக்கெல்லாம் யார் காரணம் என்பது இவருக்குத் தெரியும். இருந்தும் பெயரை வெளியிட ‘அனில் சொரூப்’ விரும்பவில்லை.

‘நீட்’ கொடுமைகளுக்கெல்லாம் மத்திய அரசும், மாநில அரசுமே காரணம் என்கிறது அவ்வறிக்கை.

தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் முரண்பாடும் முறைகேடும்

‘நீட்’ தேர்வு எழுதியவர்களைவிட முடிவுகள் அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைவிட, தேர்வு முடிவுகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தேசிய அளவிலான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மாதம், 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இம்மாதம் 4ஆம் தேதி வெளியாயின. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களைவிட, வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், ஒரு சில மாநிலங்களில் குறைவாகவும் இருப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்கள் என சிபிஎஸ்இ இணையதளத்தால் வெளியிடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 288. ஆனால் தேர்வு முடிவுகள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேருக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று பீகாரில் தேர்வு எழுதியவர்கள் என அறிவிக்கப்பட்டதற்கும், முடிவுகள் வெளியான எண்ணிக்கைக்கும் 30 ஆயிரத்து 430 பேர் அதிக வித்தியாசம் இருக்கும் நிலையில், ஹரியானாவில் 16 ஆயிரத்து 740 பேர் எனவும் எண்ணிக்கை கூடியுள்ளது. ஆனால், சண்டிகரில் தேர்வு எழுதியவர்கள் என 18 ஆயிரத்து 768 பேர் என அறிவிக்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியானதோ ஆயிரத்து 344 பேருக்குத்தான். இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் எண்ணிக்கை வேறுபாடு உள்ளது.

‘நீட்’ தேர்வின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது என்றால் இது திட்டமிடப்பட்ட சதியா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திறமையான மருத்துவர்களை உருவாக்கத்தான் ‘நீட்’ என சொல்லப்படும் நிலையில், சர்ச்சைகளும், குளறுபடிகளும் களையப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

எத்தனைப் பேர் ‘நீட்’ தேர்வு எழுதினார்கள் என்பதில்கூட முன்னுக்குப்பின் முரணான தகவல்கள். இவர்கள்தான் தகுதி திறமைக்காகவே பிறந்தவர்களாம். நியாயமில்லாமல், முறைகேடாக நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வே ரத்து செய்யப்பட்டு இருக்க வேண்டாமா?

நீதிமன்றமும்கூட ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? எல்லா வகையான ஆதிக்க சக்திகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே தூக்குக் கயிறைத் தூக்கிக்கொண்டு நிற்கிறது. மக்கள் புரட்சி ஒன்றால்தான் இதற்குத் தீர்வு கிடைக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மோசடியால் வந்த முதல் தகுதி

இந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார். கல்வியில் பின் தங்கிய மாநிலமாக உள்ள பிகார் மாநில மாணவி தேசிய அளவில் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த மாணவி குறித்த சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அந்தமாணவிக்கு இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பிகார் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அந்த மாணவி, ‘நீட்’ தேர்விற்காக டில்லியில் தங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக தயார் செய்துவந்துள்ளார். டில்லியில் தங்கி படித்ததால், பிகாரில் உள்ளஅவர் படித்த பள்ளியில் வகுப்பிற்கு சரியாக செல்லவில்லை. அதனால் பொதுத் தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அவருக்கு இல்லை. ஆனாலும் பொதுத்தேர்வு எழுதிய அந்த மாணவி 500-க்கு 433 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

வருகைப்பதிவு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கிருஷ்ணாந்த், “நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மாணவி கல்பனா குமாரி பிகாருக்குப் பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதை அனைவரும் பாராட்ட வேண்டும். அதை விடுத்து அவரது வருகைப் பதிவு குறித்து சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது. உரிய விதி முறைகளை பின்பற்றியே தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டார். அவரை பற்றி யாரும் சர்ச்சை எழுப்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த கல்பனாவின் தந்தை பிகார் மாநில பள்ளிக் கல்வி துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராக உள்ளார். இவரது தாயார் அரசு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.

அது மட்டுமல்ல போதிய வருகைப் பதிவு இல்லாத இவரைத் தகுதிப்படுத்த இவருக்கென்று தனி ஆணையையே அம்மாநில அரசால் பிறப்பிக்கப்பட்ட அநியாயம் அங்கு அரங்கேறியுள்ளது. (பெட்டிச் செய்தி காண்க) எப்படியிருக்கிறது பி.ஜே.பி பித்தலாட்ட ஆட்சி?

கல்பனா குமாரி 10ஆம் வகுப்பிலும் மோசடி

ராஜஸ்தான் மாநில கல்வித்துறை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பிவானி சிங் ரஜாவர் கூறுகையில் (தி டைம்ஸ்ஆஃப் இந்தியா, 13.5.2017), “கல்பனா குமாரி 2015ஆம் ஆண்டுவரை பிகாரில் உள்ள நவோதயா வித்யாலயாவில் பயின்று வந்தார். ஆனால், 10ஆம் வகுப்புத் தேர்வு மட்டும் பிகார் பள்ளிக் கல்வித் துறை தேர்வில் எழுதி மாநிலத்தில் முதல் வகுப்பு பெற்றுள்ளார்.

பிகார் பள்ளியில் காப்பியடிப்பது மட்டுமல்ல; பள்ளிக்கே வராமல் டில்லி, ராஜஸ்தான், சண்டிகர் போன்ற இடங்களில் தங்கி, இரண்டு மூன்று ஆண்டுகளாக ‘நீட்’ தேர்விற்கு தயாராகிக் கொண்டு பள்ளி இறுதித் தேர்வு எழுதும்போது மட்டும் பள்ளிக்கு வந்து தேர்வெழுதி செல்வார்கள். அப்படி எழுத வந்த ஒருவர்தான் கல்பனா குமாரி. பள்ளிக்கூடத்திகே வராமல் முதல் மதிப்பெண் எடுப்பதும், அதை கொண்டாடுவதும் வெட்கக் கேடானது. பள்ளிக்கு ஒழுங்காக வந்து கடுமையாக உழைத்து தேர்வெழுதி வெற்றிபெற்ற சிபுல்தலா பள்ளி மாணவர் அபினவ் ஆதர்ஷ்தான் மாநிலத்தில் அறிவியல் பாடப் பிரிவில் முதல் மாணவராக வரத் தகுதியானவர்’’ என்றார் அவர்.

வெளிநாடுவாழ் பார்ப்பனர்கள் நுழைந்தது எப்படி?

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், சந்தடியில்லாமல், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என்ற பெயரால் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பார்ப்பன _- பனியாக்களை திணித்ததுதான் இந்த ஆட்சியின் வெளிப்படைத் தன்மைக்கு எடுத்துக்காட்டா?

மேல்தட்டு சி.பி.எஸ்.இ.க்காக அந்த சி.பி.எஸ்.இ. என்ற அமைப்பே தேர்வு நடத்துவது என்பது எந்த வகையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி ஒன்றரை ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதன் நிலை என்ன? அது கேட்பாரற்றுக் கிடக்கிறதே!  இதுதான் இந்தியாவின் கூட்டாட்சியா? மாநிலங்களை மதிக்கும் மனப்பான்மையா?

மாநில அரசும் அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்தால் ஏதோ ஒப்புக்காக இரு மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி விட்டோம் – அத்தோடு நம் கடமை முடிந்து விட்டது என்று சோம்பல் முறித்துக் கிடப்பது வெட்கக்கேடல்லவா!

“அம்மா ஆட்சி _- அம்மா ஆவி’’ என்று சொன்னால் போதுமா? 69 சதவிகிதப் பிரச்சினையில், அவர் எப்படி நடந்து கொண்டார் என்று ஒரே நொடி நேரம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

மாணவர்கள் தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்கப்பட்டதா?

“தேர்வு எழுதும் மாணவர்கள் விரும்பினால், காப்பியடிப்பது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு’’ என்று பீகார் மாநிலக் கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி   (“The Students who feel they have right to cheat”, 30.5.2017) கூறியதை நினைவு கூர்ந்தால், வடக்கே ‘நீட்’ தேர்வில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிய முடியும்!

90% மாணவர்களுக்கு எதிரானது

பத்து சதவிகிதம் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் நலனுக்காக 90 சதவிகிதம் வேறு கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பலியாகவேண்டுமா?

ஒரே மாதிரியான கல்வி திட்டமும், சம தரத்தில் கல்வி கற்பிக்கும் வசதியும், வாய்ப்பும் இல்லாத ஒரு துணைக் கண்டத்தில், அனைவரையும் சமதளத்தில் நிறுத்தி ‘நீட்’ என்ற பெயராலே தகுதி திறமையைச் சோதிப்பது கடைந்தெடுத்த அநீதியும், மோசடியும் அல்லவா!

‘நீட்’ தேர்வை நடத்த ஒப்படைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ‘புரோ மெட்ரிக் டெஸ்டிங் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்தின் கணினியிலிருந்து கேள்விகள் திருடப்பட்டு பெருந்தொகைக்கு விற்கப் பட்டதாகத் தகவல் வந்ததே – இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 30 டாக்டர்கள், கணினி பொறியாளர்கள், தேர்வு நடத்திய கண்காணிப்பாளர்களிடத்தில் காவல் துறையால் விசாரணை செய்யப்பட்டதே, அதன் தொடர்ச்சியான நிலைப்பாடு என்ன?

அதற்குப் பிறகு அதுகுறித்த எந்தவிதத் தகவலும் வெளிவராமல் கமுக்கமாக மூடி மறைத்தது ஏன்? அதில் இன்னும் யார் யாருக்குத் தொடர்பு? சம்பந்தப்பட்டவர்கள் பெரிய இடத்துக்காரர்கள் என்பதால் ஊற்றி மூடப்பட்டு விட்டதா? இப்படி மோசடி மேல் மோசடி செய்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் கருவியாகத்தானே ‘நீட்’ கொண்டுவரப்பட்டுள்ளது?

தவறான கேள்விகளுக்கு தகுந்த பரிகாரம் என்ன?

தமிழில் எழுதப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கான கேள்வித் தாளில் 49 தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதே – இதற்குப் பரிகாரம் என்ன? தேர்வு நடத்துவோர் தவறுக்காகத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட வேண்டுமா? தவறான 49 கேள்விகளுக்காகக் கூடுதல் இழப்பீட்டு மதிப்பெண்கள் ஏன் வழங்கப்படவில்லை?

இதுதான் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் ஊழலற்ற நிருவாகத்துக்கான ‘அக்மார்க்’ முத்திரையா?

இழப்பீட்டு மதிப்பெண் கோரும் வழக்கும் சி.பி.எஸ்.சி செய்த சதியும்

மாணவி பிரதீபா இறக்கும்முன் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், “நான் 2018 மே மாதம் 6ஆம் தேதி நடந்த ‘நீட்’ தேர்வை தமிழ்மொழியில் எழுதினேன். தமிழ்மொழியில் உள்ள வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டு இருந்தது. எனவே அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி., டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். ‘நீட்’ தேர்விற்காக 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 13 லட்சத்து 23 ஆயிரத்து 672 மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். இதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

4 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து தேர்வு எழுதினார்கள்.

ஆனால் சமச்சீர் கல்வி முறையில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளில் இருந்து ‘நீட்’ தேர்வு வினாக்கள் பின்பற்றபடவில்லை.

மே 6-ம் தேதி நடந்த ‘நீட்’ தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது.

தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் இயற்பியல் பாடப்பிரிவில் 10 வினாக்களும், வேதியியல் பாடப்பிரிவில் 6 வினாக்களும், உயிரியல் பாடப்பிரிவில் 33 வினாக்களும் தவறாக கேட்கபட்டிருந்தன.

குறிப்பாக வினா எண் 50, 75, 77, 82 ஆகிய வினாக்கள் உள்பட 49 வினாக்கள் தவறாக இருந்தன. இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வினாத்தாளில் தவறாக கேட்கபட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். இதுதொடர்பாக மே 10-ஆம் தேதி சிபிஎஸ்இ மற்றும் முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அளித்தேன்.

மேலும் எந்தெந்த வினாக்கள் தவறு என தனித் தனியாகக் குறிப்பிட்டு பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். 49 வினாக்கள் தவறாக உள்ளது என புகார் அளிக்கப்பட்ட நிலையில் எனது மனுவை பரிசீலனை செய்யாமல் மே 24-ம் தேதி விடைத்தாள் வெளியிடப்பட்டது.

சரியான முறையில் தமிழில் மொழிமாற்றம் செய்யபடாமல் இருந்த வினாத்தாளால் தமிழ் வழி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே மே 6ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி உத்தரவிட வேண்டும். மேலும் ‘நீட்’ தேர்வு முடிவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முறையிட்டனர். நீதிபதிகள் அவசர மனுவாக விசாரிக்க அனுமதி அளித்து மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு ஏற்கப்படும் என்றனர். மனுதாரர் தரப்பில் மீண்டும் அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அதாவது பிற்பகல் நீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன் தேர்வு முடிவை அவசர அவசரமாக சி.பி.எஸ்.இ வெளியிட்டது சதித் திட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதனால் வழக்கு ஜூன் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தவறான வினாக்களால் மதிப்பெண் இழந்த மாணவர்களுக்கு இழப்பீட்டு மதிப்பெண் கோரும் வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் அவசர அவசரமாக ‘நீட்’ தேர்வு முடிவை அறிவித்தது அயோக்கியத்தனம் அல்லவா? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைத்த அநீதி அல்லவா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

“கிராமத்துப் பிள்ளைகள், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, பாட்டாளி மக்களுடைய பிள்ளை களெல்லாம் இனிமேல் டாக்டராக வரவேண்டு மானால், இந்த நீட் தேர்வைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு உறுதியை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். என்னவென்று சொன்னால், பிரதீபாவோ, அனிதாவோ அல்லது அந்தப் பெற்றோர்களோ (திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிவகங்கை கண்ணன்) புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உயிரோடிருந்த காலத்திலே உருவாகாத உணர்ச்சியை, அவர்களுடைய மறைவின் காரணமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆகவே அந்தப் போராட்டம் ஒரு தொடர் போராட்டமாக இருக்கும். ‘நீட்’டை ஒழித்துக் கட்டும்வரை தொடர்ந்து போராடுவோம். இந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. இழப்பு இழப்புதான்! எனினும், நம்முடைய சமுதாயத்தவர்க்கு நாம்தான் இருக்கிறோம் என்ற நோக்கில் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற வந்திருக்கிறோம். இனி அனிதாக்களோ, பிரதீபாக்களோ தொடரக் கூடாது, தொடரவிடக் கூடாது என்ற உணர்வோடு போராடிக் கொண்டிருக்கிறோம்.  பிரதீபாவின் தாயார் இன்னும் நினைவு திரும்பாத நிலையிலே இருப்பதைப் பார்க்கும்போது, இன்னும் பரிதாபமாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே நிறைவேற்றி அனுப்பிய சட்டங்களுக்கு உரிய ஒப்புதல் பெற்று, உடனடியாக ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.’’

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

பாரதிய ஜனதா கட்சி அல்லாத 6 மாநில முதல்வர்கள் இணைந்து ‘நீட்’ தேர்வை எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

‘நீட்’ தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகம் மிகவும் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனை முடிவதற்குள், நேற்று ‘நீட்’ தேர்வு முடிவு காரணமாக பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ கல்லூரியில் சேர முடியாது என்பதால் அவர் பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால் மீண்டும் ‘நீட்’டிற்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

‘நீட்’ தேர்வை எதிர்க்கும் 6 மாநில முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி ஆகிய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

கிராம, ஏழை மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வால் பாதகம் ஏற்பட்டுள்ளது. இந்தியை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்கள் நீட்டை எதிர்க்க ஒன்று சேர வேண்டும். இந்த சமத்துவமற்ற தேர்வை எல்லோரும் ஒன்றாக எதிர்க்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முதற்கட்டமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்பது கட்டாயம் என்றாலும், அனைத்து மாநிலங்களும் ஒட்டுமொத்தமாக ‘நீட்’ தேர்வை எதிர்க்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். ‘நீட்’ தேர்வை எதிர்ப்பதோடு, ‘நீட்’ தேர்வை நிரந்தரமாய் நீக்க பா.ஜ.க. ஆட்சியை மத்தியில் நீக்குவது ஒன்றே சரியான வழியாகும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாய் நின்று அதைச் சாதிக்க வேண்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *