சேது சமுத்திரத் திட்டம் அரசின் கொள்கை முடிவு -
உச்சநீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது!
திருச்சியில் கடந்த 8.9.2010 அன்று மாநாடு போன்று கூடிய மக்கள் கடலின் முன்னே, நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பேருரையில், முத்தாய்ப்பாக இரண்டு முக்கியப் பிரகடனங்களைச் செய்துள்ளார்கள்.
முதலாவது, கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்று - ஆறாவது முறையும் தி.மு.க.தான் ஆட்சிக்கு - 2011 இல் நடைபெறப் போகும் பொதுத் தேர்தலுக்குப் பின் வரும்; இது உறுதி என்று கூறியுள்ளார்கள்.
இரண்டாவது, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, நீதிமன்ற வழக்கு நிலுவையைக் காட்டி நிறைவேற்றவிடாமல் தடுக்கும் தற்போதுள்ள நிலையில், மத்திய அரசு கவனஞ்செலுத்தி, உச்சநீதிமன்றத்தில் விரைவு வழக்கு மனுபோட்டு, பணிகளை விரைந்து முடிக்க முன்வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இந்த இரண்டும் அரசியல் ரீதியாக மக்கள் மனநிலையைப் படம் பிடித்த அப்பட்டமான உண்மை நிலவரங்களே தவிர, வேறில்லை.
சேதுகால்வாய்த் திட்டம் தி.மு.க.வின் திட்டம் மட்டுமா? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சென்ற முறை ஆட்சிக்கு வந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டு, 2006 இல் மதுரையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் (UPA) மட்டுமல்ல, அதற்கு வெளியேயிருந்து ஆதரவு தந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. போன்ற கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களையும் அழைத்து, மதுரையில் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் அனைவரும் கலந்து, இத்திட்டம் விரைந்து முடிக்க விரும்பி ரூபாய் 2,400 கோடி செலவழிக்க அனுமதிக்கப்பட்ட திட்டம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தென்னாட்டின் பொருளாதார வளத்திற்கே வழி செய்யும் திட்டம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்களாலும் மற்றும் சகோதரர் வைகோ போன்றவர்களாலும் குறிப்பிடப்பட்ட திட்டமாகும்.
மற்றொரு உண்மை, அத்திட்டத்தை தி.மு.க.வின் சார்பில் திரு.டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் துறை அமைச்சராக இருந்து, செயல்படுத்த விரைந்த ஆறாவது வழித்தடம் என்பது நிபுணர்களால் அளிக்கப்பட்டதாகும்.
ஆதாம் மணல் திட்டை, ராமர் பாலம் என்று இல்லாத ஒன்றை முன்னிறுத்தி, பா.ஜ.க., ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். உண்மை என்னவென்றால், இந்தத் தடத்தை தேர்வு செய்தவர்கள் வாஜ்பேயி பிரதமராக இருந்த (NDA) தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிதான் - கப்பல் துறை அமைச்சர்களாக இருந்த சத்ருகன்சின்கா, அருண்ஜெட்லி மற்றும் இணை அமைச்சர்கள் உமாபாரதி, திருநாவுக்கரசர் போன்றவர்களே!
நாகபுரி தேசிய நீரி ஆய்வு நிறுவனம் தேர்வு செய்த இடம் - மற்ற வழித்தடங்களில் பவளப் பாறை, மீன் பிடித் தடைகள், மீன் வளப் பாதிப்பு, சுற்றுச்சூழலுக்கு எதிர் நிலை, பன்னாட்டு அமைப்புகளின் அனுமதி என்ற காலதாமதம் ஆபத்து - இவற்றை வைத்து நிபுணர்கள் நன்கு ஆராய்ந்த பிறகே 6 ஆவது வழித்தடத்தை உறுதி செய்து இறுதியாக்கி, பணிகள் தொடங்கப்பட்டன.
அதை விரைந்து முடிக்க, பணியை முடுக்கியவர்தான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA) தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலு.
இதனை அப்போது ஆதரித்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அப்படியே தலைகுப்புற பல்டி அடித்து (தி.மு.க.வுக்கு அப்பெருமை சேர்ந்துவிடக் கூடாதே என்பதற்காக) இப்போது கூடவே கூடாது; கைவிடவேண்டும் என்று கூறி, அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுக்கே துரோகம் இழைக்கின்றார் கூச்சநாச்சமின்றி!
அதே வரிசையில் பா.ஜ.க.வினரும், அரசியல் அனாமதேயங்களும் ராமர் பாலம் என்ற ஒரு போலிக் கூச்சலைப் போட்டு தாமதப்படுத்த உச்சநீதிமன்றத்தையே பயன்படுத்த முயற்சிக்கின்றனர்!
இதை இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (UPA) அனுமதிக்கலாமா?
உச்சநீதிமன்றம் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியது - சேது சமுத்திரத் திட்டம் போன்ற அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்களுக்கும் பொருந்துமே!
மக்கள் பணம் 2,000 கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்டு, இன்னும் 12 கிலோ மீட்டர்தான் பாக்கி என்ற அளவில் இப்படி ஒரு முட்டுக்கட்டை போட, ஆளும் காங்கிரசும் தெரிந்தோ, தெரியாமலோ பா.ஜ.க., அ.தி.மு.க. அணிக்குத் துணை போகலாமா?
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. போன்ற கட்சிகள், அரசியலுக்கு அப்பால் நின்று தமிழ்நாட்டின் நலன் கருதி, அவர்கள் அவர்தம் குரல் கொடுக்கத் தவறலாமா? அரசியல் நிலைப்பாடு குறுக்கிட்டாலும், பொதுநலத்தை, தமிழ்நாட்டின் வளத்தைக் கருதி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வற்புறுத்திட முன்வரவேண்டாமா?
முதலமைச்சரின் முதல் பிரகடனம் - அவரது ஆசை அல்ல; உண்மையான யதார்த்த நிலை - ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களின் ஏகோபித்த ஆதரவு என்ற பாறையின்மீது அவர் நின்று முழங்கியுள்ளார்.
- கி.வீரமணி,
ஆசிரியர்