நூல் அறிமுகம்
நூல் : மனதில் ஹைக்கூ
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : ஜெயசித்ரா
7எ, இருளப்பக் (கோனார்) சந்து,
வடக்கு மாசி வீதி, மதுரை - 625 001.
பக்கங்கள் : 64 விலை: ரூ 40
நடைமுறை வாழ்க்கையில் காணுகின்ற காட்சிகளைக் கருத்தோவியமாய் - ஹைக்கூவாய் ஒளிரச் செய்துள்ளார் கவிஞர். சூழல், சமுதாயச் சிந்தனை, நிருவாகக் கோளாறு.... என்று வாழ்க்கை யின் ஒவ்வொரு அங்கமும் அலசி ஆராயப் பட்டுள்ளது.
விளைவித்தன கேடு/கண்களுக்கும் மனதிற்கும்/தொ(ல்)லைக்காட்சிகள், யாரும் பார்க்கவில்லை கடவுளை / எல்லோரும் பார்க்கின்ற சாத்தான்/தொ(ல்) லைக்காட்சி என்று சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் அடக்கி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிபற்றிய வரிகள் மக்களைச் சிந்திக்க வைப்பன.
ஜோதிடம் என்ற போர்வை மக்களை மூடநம்பிக்கையினுள் மூழ்கடித்திருப்பதை, எதிர்காலம் அறிவதாக / நிகழ்காலம் வீணடிப்பு/சோதிடம், மடக்கட்டங்கள் கணித்து/ மனக்கட்டடங்கள்தகர்ப்பு/ சோதிடம் என்று குமுறியுள்ளார் கவிஞர்.
படிக்காவிட்டாலும்/ பாடமாகுங்கள் மருத்துவ மனைக்கு/ உடல்தானம், விழி இழந்தவருக்கு / விழி ஆகுங்கள் / ஒளி ஏற்றுங்கள் என்று சமுதாய விழிப்புணர்வுக்கு வித்திட்டுள்ளார்.
பரபரப்பான உலகில் பெற்றோரின் மீது பிள்ளைகள் காட்டும் வெறுப்பினை, குஞ்சுகள் மிதித்து/ கோழிகள் காயம்/ முதியோர் இல்லம் என்ற புதுமொழி படைத்து துணுக்குற வைத்துள்ளார்.
மொத்தத்தில், மனதின் உள்ளக் குமுறல்களை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் முத்திரை பதித்து படிப்போர் மனதினைத் தென்றலாகத் தீண்டி மகிழ்ச்சியுற வைப்பதே மனதில் ஹைக்கூ.
நூல் : நுகத்தடி மனிதர்கள்
ஆசிரியர் : மன்னை மணி. கணேசன்
வெளியீடு : தமிழருவி
18ஏ, பராங்குசம் தெரு,
மன்னார்குடி - 614 001.
பக்கங்கள் : 60 விலை: ரூ 30
நேர்ந்துவிட்ட ஆட்டை/ வெட்டிப் போட்டு/ கோழிக்கறி ஆக்கி/ படையல் சோறு வடிச்சு/ எல்லாம் சரிதான்/ முனியன்சாமி/ சாப்பிடுவதெப்போ? என்று முதல் கவிதையினுள் இடம் பெற்றுள்ள வரிகளே நன்முத்தாய் அமைந்து நம் மூளையைத் தட்டி எழுப்புகிறது.
இரண்டாம் கவிதை, ரௌத்ரம் பழகி/ ஆயுதம் தரி/ படரும்/ சாதிவேரில்/ கோடாரியை/ ஓங்கிப்போடு என்று வேகமாகப் பறையொலித்துச் செல்கிறது. குவளைக்குள் / அடைபட்டுக் கிடக்கிறது/ கங்கை நதி, துருப்பிடித்த கம்பிகளைப்/ பிராண்டிப் பிராண்டி/ நகம் கிழிந்து/ இரத்தம் ஒழுக/ ஒரு கூண்டுக்கிளி, என்று பல வெளிச்சப் புள்ளிகளால் ஒளிர்விட்டுச் செல்கிறது.
மணக்கும் / வீதிகளில் / குப்பைகளாய் ஆங்கிலப் பள்ளிகள் / பட்டாம்பூச்சியின் முதுகில் / பாறாங்கல் சுமை என்று இன்றைய கல்வி முறையினைச் சாடிச் செல்கிறது. கோவில் நிறுத்தம் எனும் தலைப்பில், சாதாரணமாக ஒரு பேருந்துக் காட்சியில் நடைபெறும் கொடூரங்களை விளக்கி, தலைவிரித்து / பேயாய் நிற்கும் / ஆலமரம் என்று பேரதிர்ச்சியுடன் முடிவுறுகிறது.
ஒவ்வொரு கவிதையும் அனுபவமாக, விளக்கமாக, குறியீடாக, சமூக விமர்சனமாக, கோபமாக, வலியாக, ஆதங்கமாக.... பல கோணங்களில் கேள்விக் கணைகளை எழுப்பி அகத்தில் ஒளி எழ வைத்திருப்பதே நுகத்தடி மனிதர்கள்.