தலையங்கம்
எவ்வளவு காலத்துக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பது?
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரியும் ஏறத்தாழ 12,000 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருவது மிகவும் வேதனைக் குரியது.
மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறையின் பாரா முகம் - தீர்வு காண விரையாமை - மிகவும் கண்டனத்திற்-குரியவையாகும்.
நமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதி இதை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர, பிரதமரின் தலையீடு தேவை என்று வற்புறுத்தியுள்ளது அனைத்துத் தரப்பினருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது!
எவ்வளவு காலத்துக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பது?
1. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளா கவே ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே நீடிப்பது முறை யல்ல. எவ்வளவு காலத்திற்கு அந்த நிலையிலேயே அவர்கள் நீடிப்பது?
இவர்களில் பலர் ஏற்கெனவே நிறுவனத்திற்கு இடம் தந்த குடும்பங்களையும் சார்ந்தவர்களாகவும் இருக்கும் நிலையில், இப்படி அவர்களை அவதிக் குள்ளாக்குவது நியாயமல்ல.
2. நெய்வேலி நிறுவனம் லாபத்தில் நடக்கும் பொதுத் துறை நிறுவனம் என்ற பெருமை இருக்கை யில், அந்த லாபத்தைப் பெறுவதற்குக் காரணமான தொழிலாளர்களில் ஒரு கணிசமான பகுதியினருக்கு வேலை வாய்ப்பை நிரந்தரப்படுத்தினால், மேலும் உற்சாகத்துடன் பணிபுரிந்து மேலும் லாபம் ஈட்டவும், அவர்தம் குடும்பங்கள் குதூகலிக்கவும் வழிவகை ஏற்படும் அல்லவா?
நாள் ஒன்றுக்கு இழப்பு 750 மெகாவாட்
3. இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 750 மெகாவாட் மின்சார உற்பத்தி இழப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
750ஒ15=11250 மெகாவாட் ஆக இத்தனை ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இழப்பு - இன்றைய தொழில் வளர்ச்சிக் காலகட்டத்தில் ஏற்பட அனுமதிக் கலாமா?
நோய் நாடி நோய் முதல் நாட வேண்டாமா?
தமிழ்நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு (அதற்குரிய பல காரணங்கள் இருப்பினும்) மக்களி டையே அதிருப்தி மேகங்களை உருவாக்காதா? கலைஞர் ஆட்சியின் இமாலயச் சாதனைகளைக்கூட சிற்சில நேரங்களில் மாற்றி திசை திருப்பப் பயன் படுத்தப்படும் நிலையில், இந்த நிலை தொடருவது நாட்டுக்கே பெரும் இழப்பு அல்லவா?
4. நமது முதல்வர் கலைஞர் அவர்கள் தமது கடிதத்தில் பிரதமருக்குச் சுட்டிக்காட்டியுள்ளதுபோல், இந்த வேலை நிறுத்தம் - தொழிலாளர் பிரச்சினை இதர பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அவசரமாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டுமென வற்புறுத்தியுள்ளார்கள்.
இதுபற்றி மத்திய அரசு உடனடியாக ஒரு சுமூக மான முடிவினை ஏற்படுத்தி, 12 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களை நிரந்தரமாக, மகிழ்ச்சியாக வாழ வைக்க முன்வரவேண்டும்.
"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன்
காணத் தகுந்தது வறுமையோ,
பூணத் தகுந்தது பொறுமையோ?"
-புரட்சிக்கவிஞர்
கி. வீரமணி
ஆசிரியர்