தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தொடரும் வரலாறு
பதிலடி
இவர்தான் பெரியார்
அண்ணா நூற்றாண்டு 2008-2009
கவிதை
சிறுகதை
அன்றே சொன்னது 'உண்மை'
முதல் பெண்ணியவாதி
ஆய்வு
உலகப் பகுத்தறிவாளர்
உத்தப்புரம்
உலகப் பார்வை
அணுஅணுவாய் - 10
பெட்டிச் செய்திகள்
 
 
 
 
 
 
மே 16-31 2008
பிரதி எடுக்க நண்பருக்கு அனுப்ப

தலையங்கம்

புதுடில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் என்ற மிகப்பெரிய மருத்துவமனை ( AIIMS - All India Institute of Medical Sciences) யில் கடந்த தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் 2003 இல் பா.ஜ.க. அமைச்சரான திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, டாக்டர் வேணுகோபாலு(ஆந்திரப் பார்ப்பனர்)க்கு பதவியில் ஓய்வு பெற வேண்டிய நிலையில், ஒரே அடியாக 5 ஆண்டுகள் பதவி நீடிப்புக் கொடுக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
(அந்த அமைப்பின் நிர்வாகக் குழுவினருக்குக்கூட அந்தப் பதவி நீடிப்பு 5 ஆண்டுகள் என்பது பிறகே தெரிய வந்ததாம். அக்கூட்டம் முடிந்துபோன பிறகு, குறிப்பேட்டில் இப்படி 5 ஆண்டு பதவி நீடிப்பு - சுஷ்மா சுவராஜ் என்ற பார்ப்பன அம்மையாரால் தரப்பட்டது).
கடந்த 30.11.2007 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்த இயக்குநர் பதவியில் உள்ளவர்கள் 65 வயதுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற நிலையில், அதனை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார். இந்தச் சட்டம் கொண்டு வந்தது கெட்ட நோக்கத்துடன் (Mala fide intention) என்று வாதாடினார்.
அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புக் கூறிய உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் (ஜஸ்டீஸ் தருண் சாட்டர்ஜி, ஜஸ்டீஸ் எச்.எஸ். பேடி ஆகிய இரு நீதிபதிகள்) கொண்ட அமர்வு, இச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது.
தீர்ப்பளித்த சில மணித் துளிகளில் அந்த நிறுவனத்திற்குச் சென்று பதவியில் அமர்ந்துவிட்டாராம் டாக்டர் வேணுகோபால்!
இத்தீர்ப்பு ஒரு தவறான தீர்ப்பு ஆகும்! எப்படியெனில்,
(1) தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்களது முடிவு அல்ல இது; மாறாக, நாடாளுமன்றம் - டில்லி உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப - நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம்!
நாடாளுமன்றத்திற்கே உள்நோக்கம் - கெட்ட எண்ணம் (malafide) எனக் கூற முடியுமா?
(Can anybody suggest malafide for the Parliament? The Soverereignty of the Parliament could not and should not be questioned)
நாடாளுமன்றத்தின் இறையாண்மை - சட்டம் இயற்றும் உரிமை அதிகாரம் என்பது, நீதிமன்றங்களால் சுருக்கப்படவோ, உள்ளெண்ணம் கற்பிக்கப்படவோ கேள்வி கேட்கப்படவோ கூடிய ஒன்றல்லவே இந்திய அரசியல் சட்டவிதிகளின்படி.
2. இது மத்திய அரசின் கொள்கை முடிவு. (Policy Decision). இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலையிடலாமா? தலையிட முடியுமா?
இதே நீதிமன்றத்தில் சில மாதங்களுக்குமுன் ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜூ தலைமையில் அமைந்த அமர்வில் ஒரு தீர்ப்பில் அரசுகளின் கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றமோ, உயர்நீதி மன்றமோ தலையிடக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட வில்லையா? அதன்படி இந்தத் தீர்ப்பு தவறான - ஏற்க முடியாத தீர்ப்பு அல்லவா?
சட்டங்கள் நிறைவேற்றும் சட்டமன்றங்களுக்கோ, நாடாளுமன் றத்திற்கோ கெட்ட நோக்கம் - கெட்ட எண்ணம் (Mala fide) கற்பிக்க முடியாது என்பது ஏற்கெனவே பல தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்ட சட்ட நிலையாகும்.
அதற்கு விரோதமாக, முரணாக இந்த வேணுகோபால் அய்யர் வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
3. ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு ஒரே அடியாக 5 ஆண்டுகள் பதவி நீடிப்பு என்பது விசித்திரச் சலுகை அல்லவா? இது எந்த நோக்கத்தோடு முந்தைய NDA அரசால் குறிப்பிட்ட நபருக்குப் பதவி நீடிப்பு ஆணை வழங்கப்பட்டது?
இந்த உள்நோக்கத்தை உச்சநீதிமன்றம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?
நமக்குத் தெரிந்தவரை பதவி நீடிப்புகள் - முக்கி யமானவர்களுக்கு வழங்குவது சகஜம் என்றாலும், ஒரே அடியாக 5 ஆண்டுகள் (At One Stroke) கொடுக்கப்பட்டதாக முன்மாதிரிகள் உண்டா?
இந்நிலையில் அதை ஒழுங்குப்படுத்திட நாடாளு மன்றத்திற்கு உரிமை இல்லையா?
65 வயதுதான் அதிகபட்சம் என்று சட்டத்தில் சொல்லப்பட்டது எப்படித் தவறாகும்? உச்சநீதிமன்ற நீதிபதிக்கே கூட வயது வரம்பு 65 வயதுதானே! இந்த இயக்குநர் ( Director) பதவிக்கு ஒப்பந்த அடிப்படை கூடாது; மாறாக, சட்டப்படி அவர்கள் இருக்கவேண்டும் என்பது தவறானதல்ல என்ற மத்திய அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் - அதுவும் டில்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியே (Direction) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டாமா? இந்தச் சட்ட விதி நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதை உச்சநீதிமன்றம் கவனிக்கத் தவறியதேன்?
4. இதைக் காரணம் காட்டி உடனே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராஜி னாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க., கேட்பது ஏற்க முடியாத ஒன்றாகும். அடாவடித்தனமும் ஆகும்!
டாக்டர் அன்புமணி அவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல அது; அமைச்சரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றின் முடிவுப்படி நிறைவேற்றப்பட்ட சட்டம்!
டாக்டர் அன்புமணி ஒரு சமூகநீதிப் போராளி; மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர் என்றவுடன், ஊடகங்கள் (Media), பார்ப்பன மேல்சாதிக்காரர்களையே கொண்ட இட ஒதுக்கீடுக்கு விரோதமான எதிர்ப்பு சக்திகள், இத்தீர்ப்பை வைத்து அவரை வெளியேற்ற நினைப்பது சூழ்ச்சிப் பொறியல்லாமல் வேறு என்ன?
ஏற்கெனவே அமைச்சர் டி.ஆர். பாலுமீது (அவர் சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர் என்பதால்) அபாண்டப் பழி சுமத்தி வெளியேறக் குரல் கொடுத்தது மாதிரி!
இது ஒரு தனிப்பட்ட அமைச்சர் டாக்டர் அன்புமணி பிரச்சினை அல்ல; 5 ஆண்டுகாலமாக மத்திய அரசின் அந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து இயக்குநர்களாக, அடுத்த பதவி உயர்வுகள் பெற்றி ருக்கவேண்டிய பலருக்கு - ஒரு நபருக்கு இந்த 5 ஆண்டுகால பதவி நீடிப்பால் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலை - மிகப்பெரிய சமூக அநீதி அல்லவா?
அரசியல் சட்டம் வற்புறுத்தும் சமூகநீதி தத்துவத்திற்கு முற்றிலும் மாறான ஒன்று அல்லவா? இதை ஏன் நீதிபதிகள் கவனிக்கத் தவறினர்?
அரசு ஊழியர் ஒருவர், அரசுக்கு எதிராக - அதன் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களே, வேலை நிறுத்தத்திற்குத் தூண்டியும், அவர்களது வேலை நிறுத்தம், பணி பாராமைக்கு ஆதரவாக நடந்துகொண்டதையும்விட மிகப்பெரிய ஒழுங்கீனம் வேறு உண்டா?
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது, பொது ஒழுக்கம், சமூக வளர்ச்சி, சமூகநீதி பற்றி சிந்திக்கவேண்டாமா?
தனி நபருக்கு வேலை கொடுக்க பொதுவான ஒரு சட்டமே செல்லாது என்று கூறலாமா?
அமைச்சரவை, நாடாளுமன்றம் இதுபற்றி மிகவும் ஆழமாகப் பரிசீலித்து இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்.

கி. வீரமணி
ஆசிரியர்


பெரியார்
- உண்மை - விடுதலை - The Modern Rationalist - பெரியார் பிஞ்சு - பெரியார் வலைக்காட்சி