தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நேபாளம்
4000 ஆண்டுகள் பழமை
மிக்க பண்பின் குடி இருப்பு
உலகப்பகுத்தறிவாளர்
கவிதை
சிறுகதை
சிறந்த நூலிலிருந்து
மருத்துவம்
நெசந்தானுங்க
மூடநம்பிக்கை
இந்துத்துவா
ஆய்வு
'மதம்' வந்தது எப்போது?
நிகழ்வு
அனுஅனுவாய் - 9
பளிர்...பளிர்...
பெட்டிச் செய்திகள்
 
 
 
 
பிரதி எடுக்க நண்பருக்கு அனுப்ப

தலையங்கம்

தீண்டாமை - அதன் மூல வேரான ஜாதியை ஒழிக்க உறுதி கொள்வோம்!தீண்டாமை ஒழிப்பு என்பது ஏட்டளவில்தான் இருந்து வருகிறது. இருப்பதிலேயே கொடிய தீண்டாமை கோயில் கருவறையில் நீண்டகாலமாக கொலு கொண்டிருந்தது.
தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பால், திராவிடர் கழகத்தின் இடைவிடாப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் தன்மான இயக்கம் வழிவந்த மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சரானதால் இதற்கொரு முடிவு கட்டப்பட்டது.
ஆனாலும், இன்னும் தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்து வருகிறது. தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இது நிலவுவது வெட்கப்படத்தக்கது.
சட்டம் இருந்தும் காகிதப் புலியாகத்தானிருக்கிறது. இந்த நிலையில், தமிழகக் காவல்துறையில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு என்ற அமைப்பு தீண்டாமை ஒழிப்பில் புது யுக்திகளைக் கையாண்டு வருகிறது.
கிராமப் பகுதிகளில் அனைத்துத் தரப்பினரையும் ஓரிடத்தில் உட்கார வைத்து, தேனீர் கொடுத்து உபசரித்து உள்ளார்த்தமாகப் பேசி, புதிய நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதுதான் அந்தப் புதியயுக்தி.
17 ஆயிரம் கிராமங்களில் 17 லட்சம் பேர்களுக்கு இத்தகு சமத்துவ தேனீர் விருந்து அளிக்கப்பட்டுள்ளது என்பது தேனீரை விட சுவையான - மகிழ்ச்சியான செய்தியாகும்.
சமபந்தி போஜனம் என்பதுபோல ஆண்டுக்கொரு முறை கோயில்களில் நடத்தப்படும் சடங்காச்சாரமாக இது இருந்து விடக் கூடாது.
உள்ளன்போடு ஒருவருக்கொருவர் பேசி, அளவளாவி, கைகொடுத்து சகோதரத்துவத் தன்மையை உருவாக்கும் முயற்சியாக இது அமையவேண்டும்.
ஏதோ ஒரு தடவை இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதோடு தம்பணி முடிந்துவிடுவதாக கருதிவிடக் கூடாது.
மறுமுறையும் இதுபற்றி கணிப்புச் செய்யவேண்டும். முதல் முயற்சிக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை யும் நேரிடையாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அதில் கிடைக்கும் பதிலின் மூலம்தான் இந்த முயற்சிக்குப் பலன் கிடைத்திருக்கிறதா - இல்லையா என்பதை அறிய முடியும்.
குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்துக்கு அரசு பிரச்சாரம் செய்வதுபோல தீண்டாமை ஒழிப்பைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் எங்கு நோக்கினும் கண்களையும், கருத் தினையும் கவரும் வண்ணம் விளம்பரப் பலகைகள் இருக்க வேண்டும். ஊடகங்கள் குறிப்பாகத் தொலைக்காட்சியில் நாள் ஒன்றுக்கு இத்தனை முறை விளம்பரப்படுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்தவேண்டும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களைக் கொண்டு இதனைச் சொல்ல வைக்கவேண்டும்.
கலையுலகப் பிரமுகர்களைக் கொண்டு சிறுசிறு நாடகங்களைத் தயாரித்து ஒளிபரப்பலாம்.
திராவிடர் கழகம், தமிழகம் தழுவிய அளவில் நடத்தவிருக்கும் ஜாதி ஒழிப்பு மாநாட்டிலும் இதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மதச் சார்பற்ற சக்திகளுடன் கைகோத்து நமது தலைமுறையில் தீண்டாமை அதற்கு மூல வேரான ஜாதியை ஒழிக்கும் பணியில் ஒன்றிணைந்து பாடுபட உறுதியேற்போம்! 23.4.2008 அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு தக்க நடவடிக்கையை உடனே மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பதை வற்புறுத்தி, கொண்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒருமனதாக அனைத்துக் கட்சிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, ஆமோதிக்கப்பட்டு நிறை வேறியதற்காக, தமிழக அரசையும், ஆளும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளையும் நாம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக - அவர்தம் உள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் - பாராட்டி நன்றி கூறுகிறோம்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டுவரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப் படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிகி றேன். நீங்கள் அதை ஆதரிக்கவேண்டும் எனக் கேட் டுக்கொள்கிறேன் என்று முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தை அவையின் காங்கிரஸ் தலைவர் திரு. சுதர்சனம், பா.ம.க. தலைவர் திரு. கோ.க. மணி, ம.தி.மு.க. தலைவர் திரு. கண்ணப்பன் ஆகியோர் முழுமனதோடு ஆதரிப்பதாகத் தெரிவித்து நிறைவேற்றியுள்ளனர்.
அய்ரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு நார்வே நாடு காட்டும் ஆர்வம், தாய்லாந்து, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் காட்டிய ஆர்வம் இவைகளைக் காணும் போது, கலாச்சார உறவு - அதுவும் தொப்புள்கொடி உறவு கொண்ட தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியா இதில் பாராமுகமாக இருப்பது எவ்வகையிலும் அதற்குப் பெருமை அளிக்காது.
17 ஆண்டுகளுக்கு முன்னே நடந்த ஒரு சம்பவத் தையே திரும்பத் திரும்பக் கூறி, மனப்புண்ணைக் கிளறுவதினால் நித்தம் நித்தம் செத்து மடிந்துகொண்டும், வாழ்வுரிமைக்காக காடுகளிலும், வேறு நாடுகளிலும் சென்று வாழும் எம்மினத்துத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்காது!
தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியாரைக் கொன்றவர்களைப் பயிற்றுவித்த அமைப்புகள் அரசியலைப் பிடித்து, அடுத்து இந்தியாவின் பிரதமர் என ஆசைப்பட்டு, தற்போது பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளதையும், பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர் எந்த இனத்தவர், எந்த மதத்தவர் என்பதையும் மறந்து மன்னித்தும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதுபோல, நேரடியான, ஈடு செய்ய இயலாத இழப் புக்கு ஆளாகியுள்ள அந்தக் குடும்பத்து உறுப்பினர் களான திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா போன்றவர்கள் மனிதநேயத்தின் மறு உருவங்களாகக் காட்சியளித்து, உலகத்தவர் மதிப் பீட்டில் பெரிதும் உயர்ந்து வரும் நிலையில், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை நாதியற்ற முறையில் அழிக்கப்படும் படலத்தை, மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பது எவ்வகையிலும் நியாயமாகாது!
நார்வே போன்ற நாட்டின் சமாதானத் தூதுவர்கள் முதல் அனைவரும் அரசியல் தீர்வு காணுங்கள்; இராணுவ நடவடிக்கையில் தீர்வு கிட்டாது; இருபுறமும் அழிவு தொடரும் என்று ஒருமித்துக் கூறிடும் நிலையில், மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மன்மோகன்சிங் அவர் களது அரசு இதில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை யில் தலையிட்டுப் போர் நிறுத்தம் அறிவித்து - பேச்சு வார்த்தையை தொடங்கிட இலங்கையின் ராஜபக்சே அரசினை வற்புறுத்தவேண்டும்.
இதற்கிடையில் பலவகையான இராணுவ உதவிகளும், பயிற்சிகளும் இலங்கைக்கு இந்தியா வழங்குகிறதோ என்ற அய்யத்திற்கு அறவே இடமின்றி, சீசரின் மனைவி சந்தேகத்திற்கப்பாற்பட்டவர் என்ற பழமொழிக்கொப்ப நடந்துகொள்ளவேண்டும்.
இந்தியாவின் பெருமையும், புகழும் உலக அரங்கில் இதனால் உயரும்.
இந்தியாவின் மூத்த அரசியல் ஞானியாகத் திகழும் கலைஞரின் வழிகாட்டுதலைப்பற்றிக் கொண்டு, உடனடியாக நடைபோடட்டும்! சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலிலிருந்து இந்திய அரசு மீள்வதும் அவசரம் - அவசியம்!

கி. வீரமணி
ஆசிரியர்


பெரியார்
- உண்மை - விடுதலை - The Modern Rationalist - பெரியார் பிஞ்சு - பெரியார் வலைக்காட்சி