தலையங்கம்: உச்சநீதிமன்றத்தின் இரண்டு மெச்சத்தகுந்த தீர்ப்புகள்!

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு மெச்சத்தகுந்த தீர்ப்புகள் வெளிவந்துள்ளன! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புமிகு(Landmark Judgements) தீர்ப்புகள் அவைகள்!! ஒன்று, பெண்ணுரிமை பற்றியது; மற்றொன்று தற்போதுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் யதேச்சதிகார கருத்துரிமை பறிப்பைத் தடுத்து, ஓங்கி அதன் தலையில் ‘குட்டு’ வைக்கும் தீர்ப்பு. இராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளில் உயர் பதவிப் பொறுப்புகளில் நிரந்தரப் பணி வழங்கும் நடைமுறைகளில் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அதிகாரிகள் தங்களுக்கு நீதி வழங்க வேண்டுமென்று நீதிமன்றங்களை அணுகி 18 ஆண்டுகாலமாக நடந்த சம உரிமைப் போருக்கு இத்தீர்ப்பு முற்றுப் புள்ளி வைத்து, சரியான நீதி வழங்கியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. அதையடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மேற்கொண்டது. இந்நிலையில், தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான நடைமுறைகளில் பாகுபாடு  (Discrimination) காட்டப்படுவதாக பெண் அதிகாரிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு விரைவுப்படுத்தவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர். (காரணம் வெளிப்படை; ஆர்.எஸ்.எஸ். கொள்கை, பெண்களை சமையலறை, குடும்ப நிருவாகத்தை முடக்கிவிடுவது மட்டுமே தேவை என்பதால்) பெண்களுக்குச் சமவாய்ப்பு தரவேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப்படி அவர்களுக்குள்ள பிறப்புரிமையே; பிச்சையோ சலுகையோ அல்ல. மக்கள் தொகையில் சரி பகுதி சுமார் 65 கோடி மக்கள் சமுதாயம் பெண்கள் சமுதாயம். என்றாலும் அவர்கள் வேற்றுமைப் படுத்தப்படுகிறார்கள். ஒரே வேலையைச் செய்யும் ஆண் _ பெண் அதிகாரிகளிடையே எதற்கு இந்தப் பேதம்? (மனுதர்ம மனப்பான்மை அல்லாமல் வேறு என்ன?) “இராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்காக அவர்களிடம் வழங்கப்படும் ஒவ்வொரு ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையில், நாட்டுக்காக அவர்கள் செய்த சாதனைகளைக் குறிப்பிடுவதற்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை! அச்சாதனையைக் குறிப்பிடுவதற்கான இடம் அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகளில் பெண் அதிகாரிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவது, கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்துவதாக இல்லை! இது பெண் அதிகாரிகளை பாகுபடுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. நிரந்தரப் பணி மறுக்கப்பட்ட பெண் அதிகாரிகள் கருணை அடிப்படையில், பணிகளைக் கோரவில்லை. தங்களின் உரிமைகளையே அவர்கள் கோருகிறார்கள். அதற்காகவே நீதிமன்றத்தை அவர்கள் நாடியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பாகுபாடு ஏதுமின்றி நிரந்தரப் பணி வழங்க வேண்டும். நமது சமுதாயத்தின் கட்டமைப்பு, ஆண்களால் ஆண்களுக்காகவே ஏற்படுத்தப் பட்டது போல் உள்ளது. இத்தகைய சமூகத்தில் சமத்துவம் குறித்துப் பேசுவது நகைமுரணாக உள்ளது! நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து, பெண்களுக்குச் சம வாய்ப்புகள் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது முற்போக்குச் சிந்தனை வெளிச்சத்தைக் காட்டும் தீர்ப்பாக ஒளிருகிறது. தந்தை பெரியாரின் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் _ பெண்களுக்கு இராணுவத்திலும் போலீசிலும் சம வாய்ப்புத் தரப்படுவது மிகவும் அவசியம் என்ற தொலைநோக்கு, இன்று 90 ஆண்டுகள் கழித்து எப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் பிரதிபலிக்கின்றன பார்த்தீர்களா? தீர்ப்பு எழுதிய மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் சந்திரசூட் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு, ‘பாலியல், சமூகநீதி, புரட்சிகரமான கருத்துகளை எடுத்துக்காட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் _ உயர்நீதிமன்றங்களில் இன்னமும் நியமனங்களில்கூட மகளிர் உரிமை சமவாய்ப்புடன் கூடியதாக இல்லையே! இதேபோல் மற்றொரு தீர்ப்பு, கருத்துரையைப் போற்றிப் பாதுகாப்பு தரும் வகையில் அமைந்த தீர்ப்பு. மேகாலயா மாநிலத்தில் உள்ள ‘ஷில்லாங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை ஆசிரியர் பாட்ரிகா முக்கிம் என்பவர் மீது, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசினார் என்று வழக்குப் போடப்பட்டது. அப்பத்திரிகை ஆசிரியர் பாட்ரிக்கா முக்கிம், சமூக வலைத்தளத்தில் (முகநூலில்) முகமூடி அணிந்து வந்து, பழங்குடி அல்லாத இளைஞர்கள் ‘பாஸ்கட் பால்’ விளையாட்டு விளையாடும் மைதானத்தில் தாக்கப்பட்டனர். மேகாலய முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார் என்று கூறி இது வெறுப்புணர்வைத் தூண்டுவதாக அமைந்துள்ளது என்று அப்பத்திரிகையினர் மீது வழக்குப் போட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், “அரசுக்கு எதிராக கருத்துக் கூறுவது, அரசு நடவடிக்கை எடுக்காததை குறைகூறி, நடக்க வற்புறுத்திடும் வகையில் எப்படி வெறுப்புணர்வைத் தூண்டல் ஆகும்?’’ சுதந்திரமான பேச்சுரிமை, சுதந்திரமான பயணங்களும் ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ள அடிப்படை உரிமை; சட்டம் ஒழுங்கைப் பாதித்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள நியாயம் உண்டு. எனவே, அந்தப் பத்திரிகை ஆசிரியை மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்கிறார் (Quash) என்று எழுதியுள்ளனர்! மத்திய அரசு _ அண்மைக் காலத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை -_ பா.ஜ.க. அரசில் பல வழக்குகள் போடப்பட்டு பறிக்கப்படும் உரிமைகள் _ பறிப்புக்கு எதிரான உச்சநீதிமன்ற கருத்தாகவே இதனைக் கருத வேண்டும். பாடங் கற்க வேண்டியதும் கடமையாகும்! - கி.வீரமணி, ஆசிரியர்செய்திகளை பகிர்ந்து கொள்ள

கவிதை:இனப்போர்

பெரு.இளங்கோ அரசியல் தளத்தில் அணுவணு வாக                அடிகள் பதித்தே உருப்பெற் றோரை உரசிப் பார்த்திடும் உருப்படா ததுகளின்                உரைதனில் மயங்கி உளந்தடு மாறி தரவுள வாக்கால் தமிழரின் உரிமை                தகர்ந்திடும் என்பதை நினைவில் கொண்டு திராவிடம் மட்டுமே வெல்லும் என்பதை                தேர்தலின் மூலம் தெரிவிப் பீரே! நடித்துப் பணத்தைப் பார்ப்பதை விடுத்து                நாடாள் வதிலே நாட்டம் கொண்டு நொடியினில் ஆட்சியை மடியினில் கொள்ள                நோட்டம் பார்த்தே நந்தமிழ் நாட்டை பிடித்திட எண்ணிப் பத்தரை மாற்றுபோல்                பிம்பம் காட்டிடும் பித்தரின் பின்னே குடியின் பெருமை மறந்துசெல் பவர்கள்                குற்றம் புரிந்தவர் ஆகிடு வாரே! எண்ணருங் கட்சிகள் எதிரியர் கூலிகள்                இன்தமிழ் நாட்டினை இரைகொள் வதற்காய் எண்ணம் கொண்டே ஏட்டுச் சுரையென                இருப்பவர் மூலமாய் இயக்கிடும் வேளையில் தண்டமிழ் நாட்டைத் தமிழரே ஆண்டிட                தமிழ்மகன் புரட்சிக் கவிவரி மெய்ப்பட தொன்மைத் திராவிடம் வெல்லும் தீர்ப்பை                தொகைமிகு வாகத் தேர்தலில் காட்டுவீர்! செந்தேள் ஆரியம் திராவிடம் தன்னை                சந்தினுள் நுழைந்து கொட்டியே வீழ்த்திட செந்தமிழ் நாட்டில் செலாவணி பிடித்து                செய்கிற கமுக்கச் செயலத் தனையும் சிந்தனை செய்திடில் சதிச்செயல் என்றே                சட்டென விளங்கிக் கொள்ளும் காலை இந்தத் தேர்தல் அரசியற் கல்ல;                இனப்போர் என்பதைப் புரிந்துகொள் வீரே!   திராவிடத் தால்தான் வீழ்ந்தோம் என்றபின்                திராவிடக் கட்சியின் காலடி வீழ்ந்தவர் திராவிடக் கழகமே கூடா தென்றபின்                திராவிடக் கட்சியின் தோளிலே அமர்ந்தவர் ‘திராவிட’ எனுஞ்சொல் தமிழ்த்தாய் வாழ்த்திலும்                ரவீந்திர நாதரின் நாட்டுப் பண்ணிலும் இருக்கிற வரைக்கும் திராவிடம் சிறக்கும்!                இனத்தின் எதிரியைத் தேர்தலில் ஒறுக்குமே!செய்திகளை பகிர்ந்து கொள்ள

பெரியார் பேசுகிறார் : தந்தை பெரியார் ஆதரித்த தி.மு.க

தந்தை பெரியார் “நாடு பஞ்சம், வறட்சி என்று தவித்துக் கொண்டிருக்கையில், பார்ப்பான் பாரத ராமாயணம் படிப்பதை நிறுத்துகிறானா? ஆட்சி மீது குறை சொல்வதை நிறுத்துகிறானா? என் உயிர் உள்ளவரை தி.மு.க ஆட்சியை ஒழியவிடமாட்டேன்! என்று உறுதி தெரிவித்த பெரியார், நீதித்துறையில் யாரும் தொட்டுக் காட்டாத ஓர் அக்கிரமத்தை குறிப்பிட்டிருந்தார். ஜில்லா ஜட்ஜுகள் 16 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பு மீது அப்பீலை விசாரிக்க, அய்கோர்ட்டில் ஏன் 18 நீதிபதிகள்? என்ற கேள்விக்கு, என்ன பதில்? ஜட்ஜுகளை வக்கீலில் இருந்து நேரடியாக நியமிப்பதை பெரியார் இடைவிடாமல் எதிர்த்து வந்தார். 17.9.1969 தோழர் பெரியாரின் 91ஆவது பிறந்தநாள் விழா தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசும்போது, “பெரியார்தான் தமிழக அரசு. தமிழக அரசுதான் பெரியார். நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்பதற்கு ஒரே சான்று, அதிர்ஷ்டமில்லாததென்று சொல்லப்படும் 13 தான் இன்றைய அமைச்சர்களின் எண்ணிக்கையாகும். நாங்கள் ஆதரவு பெற்றவர்கள் அல்ல. பெரியாராலேயே ஆளாக்கப்பட்டவர்கள்’’ என்று உணர்ச்சி பொங்க உரைத்தார். இன்று எனக்குள்ள குறையெல்லாம், தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில ஜாதிக்கு (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். எனது 90ஆவது வயதை விட, 91ஆவது வயது திருப்தியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து. தி.மு.க ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை; எழுதவும் முடியவில்லை.                                                (‘விடுதலை’, 31.7.1969) தோழர் பெரியாரின் நீண்டகால சமூகநீதியின் உச்சபட்ச கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் கலைஞரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை. தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றம் 1861இல் துவங்கி 1973 வரை நிகழாத ஒரு வரலாற்று நிகழ்வு தோழர் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 112 ஆண்டுகளுக்குப் பிறகு 14.2.1973 அன்று முதன்முறையாக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதி ஏ.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டார். கலைஞர் குறித்தும் தி.மு.க குறித்தும் பெரியார் திராவிடர் இயக்க அரசியல் பிரிவான தி.மு.க குறித்து கலகக்காரர் தோழர் பெரியாரின் 1967 தொடங்கி 1974 முடிய பெரியாரின் மதிப்பீடுகள்: கருணாநிதி அவர்கள் இராஜதந்திரம் மிக்கவர். இந்த நாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் மிக்க அறிவுத் திறன் காரணமாகத் தீர்த்து வருகிறார்.                                                      (‘விடுதலை’, 10.2.1971) யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்து, பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யாதது திருப்தி அளிக்கிறது.                                               - (‘விடுதலை’, 15.9.1967) ஜஸ்டிஸ் கட்சி கவிழ்ந்ததற்குக் காரணம் இன்றைய காங்கிரசார் போலவே தமிழர்கள், பார்ப்பன தாசர்கள் செய்த துரோகம் அல்லாமல் வேறு காரணம் ஒன்றுமில்லையே! இன்னும் சொல்கிறேன் கடுகளவு தமிழர் உணர்ச்சி பற்றுள்ள யாரும் இன்றைய (தி.மு.க) ஆட்சியை கவிழ்க்க நினைக்கவே மாட்டார்கள்.                                               - (‘விடுதலை’, 18.9.1967) தாங்கள் பகுத்தறிவுவாதிகள்; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்; தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதைத் தங்களின் செயல் மூலம் காட்டிக் கொண்டார்கள். எல்லா மந்திரிகளையும் தமிழர்களாக பார்த்துப் போட்டார்கள். உத்தியோகங்களைத் தமிழர்களுக்குக் கொடுத்தார்கள். தண்ணீரில் தன் மகன் விழுந்து தத்தளிக்கும் போது, தன்மானத்தைப் பற்றிக் கவலை யில்லாமல் தன் சீலையை அவிழ்த்து ஒரு முனையை வீசித் தண்ணீருக்குள் எறிந்து, தத்தளிக்கும் மகனை அந்த முனையை பிடித்துக் கொள்ளச் செய்து கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாயைப்போல் நாம் (தி.மு.க.வை) காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.                                                  - (‘விடுதலை’, 5.3.1968) தி.மு.கழகமென்றால் பகுத்தறிவு இயக்கம் என்று பெயர். அதில் உள்ளவர்கள் யாவரும் பகுத்தறிவாதிகளாவார்கள். யாரோ சில பேர் பட்டை நாமம் பேட்டுக் கொள்கிறவர்கள், கோயிலுக்குப் போகிறவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் பதவிக்காக சுயநலம்  காரணமாகத் தி.மு.கழகத்திலிருப்பவர்களே தவிர, கொள்கைக்காக இருப்பவர்கள் அல்ல.                                                   - (‘விடுதலை’, 5.1.1971) திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு, மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுத் தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.                                                  - (‘விடுதலை’, 11.3.1971) பொதுவாகச் சொல்லவேண்டுமானால் இந்தியாவிலே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சமூகத்துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.                                                   -(‘விடுதலை’, 11.3.1971) தி.மு.கழக ஆட்சியின் மூலந்தான் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். ஆகவே, இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பாதுகாக்க வேண்டியது தமிழர் கடமையாகும்!                                                - (‘விடுதலை’ 19.2.1973) (உதவிய நூல்கள்: பெரியார் கணினி (தொகுதி -1, 2), பெரியார் 95, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு)செய்திகளை பகிர்ந்து கொள்ள

கற்றதை நடைமுறை சார்ந்து,தகவமைத்து உயர்வோம்!

வீ.குமரேசன் பெரும்பாலானவர்களுக்கு முதல்நிலைக் கல்வியே தடைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி என கல்வி மறுக்கப்பட்டவர்களும் பலநிலைகளில் படித்து பட்டம் பெற்றிடும் நிலைமைகள் சமுதாயத்தில் உருவாயின. ‘அனைவருக்கும் கல்வி’ எனும் சமத்துவ நோக்குடன் சமுதாயப் பணியினை ஆற்றியவர்களில் மிகப் பலர் பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்களே.உயர் கல்வி என்பது, பட்டம் ஒன்றைப் பெறுவதே எனும் நிலையிலிருந்து எந்தப் படிப்பில் பட்டம் பெறுவது என்பது குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் மனதளவில் தெரிவு செய்து முயற்சி செய்தனர். உயர் கல்வியில் பல்வேறு துறை சார்ந்து, படிப்புகள் நிலவிவரும் தற்காலச் சூழலில் ஒரு பட்டப்படிப்போடு, மேலாண்மையில் முதுகலை பட்டம் (MBA) அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG. Diploma) பெறுவது, கல்வி கற்றதின் அடிப்படையில் ஒருவருக்குக் கிடைக்கும் பலதரப்பட்ட வேலைகளிலும் பயன் அளிப்பதாக உள்ளது. அதனால்  MBA   என்பது உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலரும், பணியில் உள்ள இளைஞர்கள் பலரும் விரும்பிச் சேர நினைக்கும் முதுகலைப் பட்டப்படிப்பாகும்.படித்த இளைஞர்கள், தாங்கள் பணிபுரியும் பல்வேறு துறைகளிலும், அந்தந்த அலுவலகச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திடக்கூடிய வகையில் மேலாண்மைக் கல்வி உள்ளது. மனித வளமே சமுதாயத்திற்குக் கிடைத்துள்ள முதன்மை மூலதனம். இருக்கும் மனிதவள ஆற்றலை திறம்படப் பயன்படுத்தி, ஒருங்கிணைத்துச் செய்யக்கூடிய பணியினை முழுமையாக மேற்கொள்ள இளைஞர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.மேலாண்மைக் கல்வியை இன்றைய சூழலில் பாடமாகப் படிக்கும் நிலை உருவாகியிருந்தாலும் மேலாண்மைக் கோட்பாடுகள், நடைமுறைகள் - அவைகளைப் பயன்படுத்தி பணிக்களம் காண்பது தமிழ்மண்ணுக்கு புதிது அல்ல. மக்கள் மேம்பாட்டு இலக்கியமான திருக்குறள் தொடங்கி பல்வேறு நூல்களில் மேலாண்மைக் கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த தலைவர்கள், பள்ளிக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத தலைவர்கள் தங்களது பொது வாழ்க்கையில் பயன்படுத்திய மேலாண்மை நடைமுறைகள், அணுகுமுறைகள் படித்துப் பட்டம் பெற்றவரிடம் கூட காணக்கிடைக்காது. அவ்வளவு எளிமையாக, இயல்பாக, போகிற போக்கில் அவைகளை மேலாண்மைக் கோட்பாடுகள் சார்ந்தவை, ஏட்டுப்படிப்பு பின்புலம் கொண்டவை என்பது கூட அறியாமலேயே பயன்படுத்தி வெற்றிகரமாக நிருவாகம் செய்த நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. அவைகளில் ஒரு நிகழ்ச்சியாக கல்வி வள்ளல் காமராசர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பொழுது அவர் நேரடியாக பயன்படுத்திய மேலாண்மை அணுகுமுறை பற்றிப் பார்ப்போம். காமராசர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசுத் துறையின் உயர்நிலை அதிகாரியை  (Director) ஒரு சூழ்நிலையில் வரம்பு மீறி கண்டித்து விட்டார். கண்டிக்கப் பயன்படுத்திய சொற்கள் நாகரிகமானவை அல்ல; கண்டிக்கப்பட்ட அந்த அதிகாரி அமைச்சருக்கு எதிராகப் பேசமுடியாமல், மன உளைச்சல் கொண்டு அரசு முதன்மை செயலாளரிடம்(Chief Secretary) முறையீடு செய்தார். முறையிட்ட அதிகாரி பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதிகாரியை அமைச்சர் நடத்திய விதம் குறித்து முதலமைச்சர் காமராசரிடம் முதன்மைச் செயலாளர் தெரிவிக்கிறார். உண்மை நிலையினை சட்டென்று உணர்ந்து கொண்ட காமராசர், உடனே அந்த அமைச்சரை முதல்வரின் அலுவலக அறைக்கு வரச் சொல்லிப் பணிக்கிறார். உடன் முறையிட்ட உயர்அதிகாரியையும் வரச் சொல்கிறார். தலைமைச் செயலாளர் முன்னிலையில் வந்த அமைச்சரை காமராசர் கேட்கிறார்: “உங்களுக்கு, எனக்கு எல்லாம் ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் கொடுத்த அய்ந்து ஆண்டு காலம்தான்; அதிகாரிகளுக்கு அப்படியல்ல, பணிநிறைவடையும் வரை அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திடும் வாய்ப்பைக் கொண்டவர்கள். உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அதிகாரி வேலை செய்யவில்லை என்றாலும் அவரை கண்டிப்பதற்கு வரன்முறை உண்டு. தவறு செய்திடும் பட்சத்தில் தண்டிக்க அமைச்சரான உங்களுக்கு அதிகாரம் உள்ளது; அதை விட்டு விட்டு, அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்திக் கண்டிப்பது நல்லதல்ல; மக்கள் வழங்கிய அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தவேணுமுண்ணே! உடனே அநாகரிகமாகக் கண்டித்ததற்கு அந்த உயர் அதிகாரியிடம் அமைச்சரான நீங்கள் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேணுண்ணே! என்ற வகையில் காமராசர் அமைச்சருக்கு அறிவுறுத்தினார். முதலமைச்சர் காமராசரே -- தனது தலைவரே அறிவுறுத்தியதால் சற்றும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அமைச்சர் மன்னிப்பைத் தெரிவித்தார். அமைச்சரையும் அதிகாரியையும் போகச் சொல்லிவிட்டு உடன் இருந்த தலைமைச் செயலாளரிடம் காமராசர் சொன்னவை உயர்கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் மேலாண்மை வழி முறைகளை அவ்வளவு கச்சிதமாக, பொருத்தமாக நடைமுறைப்படுத்தும் வகையில் இருந்தது; இன்றைய இளைஞர்கள் அவைகளை உள்வாங்கி தங்களுக்கு ஏற்றவகையில் பயன்படுத்திடும் வகையில் இருந்தது.அமைச்சர் தனது கட்டுப்பாட்டில் பணியாற்றும் அதிகாரியிடம் மன்னிப்பு தெரிவித்த நிலையில் இருவரது மனநிலையும் சாதாரண நிலைக்கு திரும்பிட நாளாகும். அந்த நிலை விரைவில் வருவது இருவரது மனப்பக்குவத்தைப் பொறுத்தது. அதுவரை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அந்த உயர் அதிகாரி தொடர்வது அரசு நிருவாகத்திற்கு சரியானதாக இருக்காது. அந்த துறைசார்ந்த நிருவாகப் பணிகளில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடும்.  எனவே, அந்த அதிகாரியின் விருப்பத்தினைக் கேட்டு, அவர் விரும்பும் துறைக்கு அவரை பணியிடமாற்றம் செய்திடுங்கள். அமைச்சரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்து, அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்ப, அவருக்கு உகந்த வகையில் வேறோரு உயர் அதிகாரியை அவரது நேரடி கட்டுப்பாட்டில் அந்த துறையில் பணியாற்றிட உத்தரவு போட்டு விடுங்கள் என்றாராம் காமராசர்.மேலாண்மை கல்வியின் அங்கங்களுள் ஒன்றான ஆள்வினை (Personnel Management) மேலாண்மையில் நேரிடும் ‘மோதல் களைந்திடுவது’ (Conflict Management) என்பது ஒரு பகுதி. கல்வி நிலையங்களில் விரிவாக பல வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு மேலாண்மை நடைமுறை மோதல் களைவதைப் பயிற்றுவிப்பார்கள். அப்படி வகுப்பறைக் கல்வி, கல்லூரிப் பாடம் படிக்காமலேயே காமராசர் வெகு நேர்த்தியாக ஏற்பட்ட ‘மோதலை’, இருவருக்கும் வெற்றியாக  (win-win situation) மாற்றியது குறிப்பிடப்பட வேண்டியது. மருத்துவம், பொறியியல் போன்று மேலாண்மைக் கல்வியும் ஒருவகைத் தொழிற்கல்வியே. ஏட்டுப் படிப்புடன், நடைமுறைப் படிப்பையும் பெருக்கிக் கொள்வதன் மூலம் இளைஞர்கள் தங்களை மேம்படுத்திட, தம் திறனை முழுமையாக வெளிப்படுத்திட முடியும். மேலாண்மைக் கல்வியில் மட்டுமல்லாது பிற துறை சார்ந்து படித்தோரும் தாம் ஏட்டில் படித்ததை, நடைமுறையோடு பார்த்து, படித்ததை மேலும் பொருத்தமாக செய்து காட்டிட முயல வேண்டும். வேளாண்மைக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு விரிவாக்கக் களப்பணி செய்திட முனைந்த பொழுது பாமர விவசாயிகளிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை ஏராளம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தேனி மாவட்டம், உத்தம பாளையம் பகுதியில் தோட்டப் பயிர் சாகுபடி செய்திடும் விவசாயிகள், நிலக்கடலைப் பயிர்சாகுபடியில் நீர் மேலாண்மை பற்றிய கருத்துகளை வெகு துல்லியமாக எடுத்துரைத்த விதம், நெஞ்சில் ஆழப்பதிந்து எனது தொழில் சார்ந்த பணிக்கு மெருகு கூடியது. எழுத்தறிவு பெறாத விவசாயிகள் நீர் மேலாண்மை பற்றி பல தலைமுறை தொடர்ந்து அனுபவப் படிப்பில் கற்றுக் கொண்டது கடல் அளவு. கையளவு கற்ற கல்வியுடன் கடல் போன்ற அனுபவ அறிவு சேருகையில் அத்தகைய அறிவு வீச்சின் வேகமும், வெற்றியும் ஒப்பிட முடியாதது.கற்ற கல்விக்கு தொடர்புடைய பணிகள் கிடைத்திடும் பொழுது அவை தொடர்பான நடைமுறைகளை பொருத்திப் பார்ப்பது எளிது. பெரும்பாலனவர்களுக்கு தாம் கற்ற கல்விக்கு நேரடியான தொடர்புள்ள பணி கிடைக்காத சூழலில், கிடைத்த பணியினை ஏற்றுக் கொள்வதுதான் அறிவார்ந்த அணுகுமுறை. அப்படிப்பட்ட சூழல்களிலும் தாம் கற்ற கல்வியை அடிப்படையாகக் கொண்டு, பணியாற்றிடும் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைக் கையாளுவதைப் பொருத்தே  நிச்சயம் உயர்நிலை பெறுவர். ‘வாய்ப்புகள் எப்போதாவது ஒரு முறைதான் வீட்டுக் கதவைத் தட்டும்’ என்பது நாம் அடிக்கடி கேட்கும் பழைய மொழி. மாறிவரும் காலச் சூழலில், ‘வாய்ப்புகள் நாள்தோறும் நம் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன’ என்பதுதான் புதுமொழி. தட்டும் வாய்ப்புகளின் தன்மை அறிந்து அவைகளுக்கு ஏற்றவாறு தம்மை பொருத்திக் கொள்வதில்தான் தனிநபரின் சிறப்புகள் ஒளிர்ந்திடும். நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி எடுத்தாலே அது பாதி வெற்றியை உறுதி செய்திடும்.‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’எனும் குறள் நெறி கூறும் மேலாண்மை அணுகுமுறை ஆக்கபூர்வ விளைவுகளை உருவாக்கிடும்.(தொடரும்...) செய்திகளை பகிர்ந்து கொள்ள

சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து!

திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் எம்.எல்.ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர். அவர், சமூகச் சட்டம் செய்ய சட்டசபைக்கு அதிகாரம் இருக்கக் கூடாதென்றும், மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும், கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்குச் சிறிதுகூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதிகளையாவது, சர்க்காரையாவது, சட்டசபைகளையாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காகக் கட்டுப்பாடான பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் தன்னால் கூடியவரை தான் சட்டசபையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார். சுயராஜ்யம் கிடைத்த பிறகு சமூகச் சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசியவாதிகளும்  அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டே யிருக்கின்றன. நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத் துரோகம் என்பதாகவும் சுயராஜ்யத்திற்கு முட்டுக்கட்டையாகவும் போய்விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். ஆகவே, எப்படியாவது சட்டசபை முதலிய ஸ்தானங்களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத்திற்குப் போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும். அதை விட்டுவிட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித்தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனியப் பிரதிநிதியாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.   - ‘குடிஅரசு’ - கட்டுரை - 26.10.1930 அர்ச்சகர்களின் தகுதி  “அர்ச்சகர்களும், பூசாரிகளும் எழுத்து வாசனை அற்றவர்கள் அல்லது அரைகுறை படிப்பே உள்ளவர்கள். அன்றியும், இவர்கள் பொதுவாகப் பணம் பறிக்கும் நோக்கமே கொண்டிருக்கிறார்கள். மந்திரங்களை இவர்கள் உச்சரிக்கின்ற முறையும், சுரந்தவறிச் சொல்லும் முறையும், கேட்போர் மனதில் பிழைபடவும், விருப்பம் உண்டாக்காமலும் இருந்தன. இதில் மிகவும் நொந்து கொள்ள வேண்டிய தன்மை என்னவென்றால், இவர்களுக்குத் தாங்கள் சொல்லுவதன் பொருளோ, கருத்தோ கொஞ்சமும் தெரியாது. இதனால், தெய்வ அருள் வேண்டிக் கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் மற்றும் பக்தக் கோடிகளிடத்தில் பக்தியுணர்வையும், தெய்வ உணர்வையும் ஊட்ட முடிவதில்லை என்பது தெளிவு.’’ (பக்கம் 47 - சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையிலே (1960-62) அமைந்த குழு மத்திய அரசுக்கு அளித்த அறிக்கை) கோடைக்கு இதம் தரும் பதநீர் ¨           பதநீர் நம் தட்பவெப்ப நிலைக்கேற்ற மிகச்சிறந்த பானம். உடல் சூட்டை உடனே தணித்து குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. ¨           பதநீரில் லாக்டோஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர கொழுப்பு, கால்சியம், புரோட்டீன் சத்துகளும் உள்ளன.   உலகிலேயேஅதிக ஆமைகள் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள்(Olive ridley sea turtle) மிக அதிக எண்ணிக்கையில் பசிஃபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்பவை. முட்டையிட்ட 45 முதல் 65 நாள்களுக்குள் வெளிவரும் குஞ்சுகள் பெரும்பாலும் தாயின் பாதுகாப்பின்றியே வளர்கின்றன. உலகிலேயே ஒரிசா மாநிலக் கடல் பகுதிகளில்தான் மிக அதிக எண்ணிக்கையில் இவை உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். சென்னைக் கடற்கரையிலும் இவற்றைக் காணலாம்.   வண்ணத்தில் ‘எக்ஸ்ரே’ நோய்களை அறிவதற்கு மிகவும் உதவும் எக்ஸ்ரே, பல வண்ணம் காட்டும் படமாகப் போகிறது. அது மட்டுமல்ல, முப்பரிமாணத்திலும் உடலுக்குள் உள்ள பகுதிகளைக் காட்டும் என்பதோடு, அந்த முப்பரிமாண எக்ஸ்ரேவை, மருத்துவர்கள் தேவைக்கேற்றபடி குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் பார்க்க முடியும். நியூசிலாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் பயோ இமேஜிங்’ உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம், ‘மெடிபிக்ஸ்  - 3’ (Medipix 3)என்ற சிறப்பு சிலிக்கன் சில்லை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. நோயாளியின் உடலில் பாய்ச்சப்படும் எக்ஸ்ரே, எலும்பு, தசை மற்றும் மென்திசுக்களைக் கடந்து செல்கையில், மாறுதல் அடைகிறது. இந்த மாறுதலை, மெடிபிக்ஸ்_3 சில்லும் அதன் மென்பொருளும் மிகத் துல்லியமாக அலசி, ஒரு படத்தை உருவாக்குகின்றன.   நிர்பயா நிதி சரியாகப் பயன்படுகிறதா? 2012இல் டெல்லியில், இந்தியாவையே உலுக்கிய நிர்பயா என்பவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை அடுத்து, பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக நிர்பயா நிதி என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கலில் பல ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி சரியாகப் பயன்படுத்தப்படாமலே இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஒதுக்கப்படும் நிதி, பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தப் படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தெரிந்து கொள்வோம் உலகத்திலேயே சிறிய கரன்சி நோட்டு ஹாங்காங் அரசு வெளியிட்ட 1 சென்ட் (இந்திய மதிப்பில் ரூ.63.68) மதிப்புள்ள நோட்டுதான். ஆண்டு 1988. அது ஒரே பக்கத்தில் அச்சாகிய நோட்டு. அடுத்தப் பக்கம் வெற்றிடமாகவே இருந்தது. தெரிந்து கொள்வோம் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், ஹெல்மெட் ஆகியவை ஆஸ்பெஸ்டாஸ் இழைகளால் ஆனவை. ஆஸ்பெஸ்டாஸ் நெருப்பில் எரியாது. மின்சாரத்தைக் கடத்தாது. 2000 முதல் 3000 சென்டிகிரேடு வரை வெப்பத்தைத் தாங்கக் கூடியது.   திராவிட இயக்கம் என்றும் தேவை! கேள்வி: அரசியல் இல்லாமல் இலக்கியம் இருக்க முடியுமா? பதில்: முடியாது. எழுதுவது என்பதே அரசியல் செயல்பாடுதான். நாம் யார் சார்பாக நின்று எழுதுகிறோம் என்பதுதான் எழுதப்படுகிற இலக்கியத்திற்கு வலிமை சேர்க்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதும், ஆவிகள் உலகத்தை எழுதுவதும் உண்மைக்குப் புறம்பானவை. உண்மையை எழுதுகிறவனே நிஜமான எழுத்தாளன். கேள்வி: நூற்றாண்டைக் கடந்துவிட்ட திராவிட இயக்கங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? பதில்: திராவிட இயக்கங்களின் செயல்பாட்டாளர்களென்று எல்லோரையும் _ என் பார்வையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரை _ சொல்ல முடியாது. இன்று சிறு சிறு குழந்தைகள் கூட திராவிட இயக்கங்களின் தேவைகளை உணர்ந்திருக் கிறார்கள். திராவிட இயக்கங்களின் உழைப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்வரும் காலங்களிலும் திராவிட இயக்கங்களின் பாதை என்பது ஒளிரும்; மிளிரும். கேள்வி: இன்றைக்கும் திராவிட இயக்கங்களின் தேவை இருக்கிறதா? பதில்: நிச்சயமாக. தமிழகத்தில், இந்தியாவில் ஜாதி சார்ந்த இழிவுகள் இருக்கும்வரை, மதம் சார்ந்த கற்பிதங்கள் இருக்கும்வரை, அறிவியல் தன்மைக்கு எதிராக கதைகளின் வழியாக, புராணங்களின் வழியாக, இதிகாசங்களின் வழியாக, கட்டுக்கதைகளின் வழியாக மூடநம்பிக்கைகள் பரப்பப்படும் வரை, பெண்ணடிமைத்தனம் இருக்கும்வரை, சமூகநீதி தேவைப்படும் வரை, திராவிட இயக்கங்களின் தேவை இருந்துகொண்டே இருக்கும்’’ என்றார் இமையம்.   பண நோட்டுகளில் வரிசை எண்கள் அச்சாகியிருக்கும். வரிசை எண்களே இல்லாத கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.1940-45 உலகப் பெரும்போரின்போது ஜப்பான் கைப்பற்றிக்கொண்ட நாடுகளில் ஏற்பட்ட ராணுவ ஆட்சி, வரிசை எண் இல்லாத கரன்சி நோட்டுகளை வெளியிட்டது.a (‘உண்மை’, ஜனவரி 16-31, 2019)   மதமாற்றம் - யார் காரணம்? 1.2.1982 அன்று திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் சார்பில் இந்து விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட அதன் தலைவர் ராமகோபாலன் என்ன கூறினார் தெரியுமா? “நம்முடைய கடந்தகால செயல்களின்மூலம் இப்போது நடைபெறும் மதமாற்றங்களுக்கு வழிவகுத்து விட்டோம். மதத்திற்குள்ளேயே ஜாதிப் பாகுபாடுகளை ஏற்படுத்தி, நம்மை விட்டுச் செல்லும் அளவுக்குத் தூண்டி விட்டோம்.’’                (“தினமலர்’’ 2.2.1982, பக்கம் 6) ஆசை காட்டி அச்சுறுத்தி மதமாற்றம் நடைபெறுகிறது என்று கூறி மதமாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை கூறுகிறதே. மதம் மாற்றத்திற்குக் காரணம் இந்து மத ஜாதிதான் என்று திருவாளர் ராமகோபாலன் கூறுகிறாரே? இதற்கு என்ன பதில்?   உலகின்பழைமையான உயிர் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டிக்கின்சோனியா (Dickinsonia) என்ற கடல்வாழ் உயிரினத்தின் பாறைப்படிமம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத் தலைநகரான போபாலில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிம்பேட்கா (Bhimbetka) என்னும் இடத்தில் இது கிடைத்துள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான உயிரினம் இது.செய்திகளை பகிர்ந்து கொள்ள

அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265)

ஈழத்தில் நடக்கும் தமிழர் இனப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்துமாறு அய்.நா. பொதுச்செயலாளர் புட்ரோஸ்கலிக்கு பேக்ஸ் மூலம் அவசரச் செய்தியினை 28.10.1995 அன்று அனுப்பினேன். அதில், “சிறீலங்கா அரசாங்கம் _ அந்நாட்டு குடிமக்களான தமிழர் இனத்தவர் மீது ராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சொந்த நாட்டுக் குடிமக்களான பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் இனப் படுகொலை செய்து அழிக்கிறது. உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நிராயுதபாணிகளாக நிற்கும் அந்த அப்பாவி மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றி மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் காக்க அய்.நா.மன்றம் தலையிட இதுவே சரியான தருணம். இலங்கையின் முப்படைத் தாக்குதல்களுக்கும் அந்த மக்கள் உள்ளாகி வருகிறார்கள். இலங்கையின் அண்டைப் பகுதியான இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்கள் _ ஈழத் தமிழர்களோடு இனத்தால் ஒன்றுபட்டவர்கள்; இந்த நிலையில் மனித நேயத்தையும் மனித உரிமைகளையும் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ள அய்.நா.மன்றம் இதில் தலையிட்டு மனித நேயத்தையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறோம். அதுவும் அய்.நா.மன்றம் பொன்விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கைகளில் தாமதம் காட்டினால் _ அது அய்.நா.வின் நோக்கத்தையே தோல்விக்குள்ளாக்கியதாகும் என்பதையும் _ மிகுந்த கவலையுடன் சுட்டிக் காட்டுகிறோம். போஸ்னியா, தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனப் பிரச்சினைகளில் _ தீவிரமாகத் தலையிடுவதுபோல் _ அய்.நா. இந்தப் பிரச்சினையிலும் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருந்தோம். ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்கள அரசையும், வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய அரசையும் கண்டித்தும், இந்தப் படுகொலை சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகயை தெரிவித்தும் 2.11.1995இல் அறிக்கையொன்றை வெளியிட்டோம். அதில், “சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் _ தமிழர்கள் யாழ் நகரை விட்டு _ யாழ் நகர் மக்களில் சுமார் 65 சதவிகிதத்தினர் வெளியேறி, உணவு, தண்ணீர் மற்றும் கூடாரம் அமைத்துக் கொள்ளக் கூட எந்த வசதியும் இல்லாமல் தவிக்கும் கொடுமை, உலக மகாக் கொடுமை அல்லவா? உலக வரலாற்றில் எந்த நாடு இதுவரை சொந்த நாட்டு குடிமக்கள் மீது குண்டுவீசி அழித்துள்ளது? தமிழகத்து மக்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறார்கள் என்பதை இலங்கை அரசும், மத்திய அரசும் புரிந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களின் உணர்வுகளைக் காட்ட சிங்கள அரசுக்கும் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசுக்கும் எதிராக முக்கிய நகரங்களில் 6.11.1995இல் கண்டனப் பேரணிகள் நடைபெறும்’’ என பல்வேறு இனப் படுகொலைகளை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டோம். ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்துசென்னையில் நடைபெற்ற பேரணியில்கலந்து கொண்ட கழகப் பொறுப்பாளர்கள் இதன் தொடர்ச்சியாக 3.11.1995 அன்று மதுரையில் நடைபெற்ற ஈழப் படுகொலை கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், “ஈழத் தமிழர்கள் படுகொலையில் மத்திய அரசு இதிலே தலையிட்டு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தின் வாயிலாக முதல்வருக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். இந்தப் பிரச்சினையில் யார் யோசனை தருகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சட்டமன்றத் தொடர் முடிவதற்குள்ளாகவே மத்திய அரசை வலியுறுத்தி, இந்த இனப் படுகொலை நிறுத்தப்பட வேண்டும்’’ என்று ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஏற்கெனவே, திட்டமிட்டபடி 6.11.1995இல் தஞ்சையில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடந்த கண்டனப் பேரணியில் கலந்துகொண்டு இலங்கை அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பியபடி பல ஆயிரம் தோழர்களுடன் பேரணியாகச் சென்றோம். இறுதியில் நடந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், “நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து செயல்படுவோம். ராஜீவ் படுகொலையைக் காட்டிக் கொண்டே தமிழினப் படுகொலையை இந்திய அரசு மறைக்க முயல்கிறது. சிங்களர்களுக்கு இந்திய அரசு துணைபோவதா? அப்படியானால் தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு அந்நிய அரசுதான் என்று உறுதிப்படுத்துகிறார்களா? விரையில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் கூடி முடிவு செய்வோம்’’ எனக் கூறியிருந்தோம். படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்காக திராவிடர் கழகத்தின் சார்பில் 9.11.1995 அன்று பெரியார் திடலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதனை திராவிடர் கழகம் தலைமையேற்று நடத்தியது. கூட்டத்திற்கு ஈழ உணர்வாளர்களும், பல்வேறு சிறு அமைப்புகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு தமிழினப் படுகொலையைத் தடுக்க அனைவரும் ஓரணியில் திரள்வதும், மத்திய அரசுக்குக் கண்டனமும், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவக் குழுவையும் அனுப்பி வைக்க தமிழக அரசு  ஆவன செய்யவும், முக்கிய நகரங்களில் கண்டனப் பேரணிகளும், அனைத்து இந்திய தலைவர்களை அழைத்து கண்டன மாநாடுகள் நடத்தவும் அந்தக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. எங்கள் இல்லத் திருமணத்தில் என் மகள்வீ.கவிதா - நா.மாறனுக்கு வாழ்த்து கூறும்இரு வீட்டார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் எங்கள் இல்லத்து திருமணமான எங்கள் மகள் வீ.கவிதாவுக்கும், சிங்கப்பூர் தொழிலதிபரும், சிங்கப்பூர் திராவிடர் கழகப் பிரமுகருமான நாகரத்தினம் அவர்களின் மகன் நா.மாறனுக்கும் வல்லத்தில் 12.11.1995 அன்று பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எளிமையாக குடும்ப நண்பர்கள், இயக்க முக்கியப் பொறுப்பாளர்கள், கேள்வியுற்று கலந்துகொண்ட சான்றோர் பெருமக்கள் ஆகியோரது முன்னிலையில், கழகப் பொருளாளர் மானமிகு கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில், இந்தியன் வங்கியின் தலைவரும் செயல் இயக்குநருமான எம்.கோபாலகிருட்டினன் அவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. எனது இல்லத்து திருமணத்துக்காக தனி அழைப்பிதழ் அச்சிட்டு அனைவரையும் அழைக்கவில்லையே என பல நண்பர்களும் இயக்கத்தவர்களும் வருத்தமுற்றனர். எங்களுக்கு மற்றவர்களை அலட்சியப்படுத்துவதோ, புறக்கணிப்பதோ நோக்கமல்ல. பெரியார் தொண்டர்களாக வாழும் நாம், அய்யாவின் கொள்கை வயப்பட்டு அதில் சிறிதும் வழுவாது வாழுகிறோம் என்பதை நிலைநாட்டுவதில் சிக்கனம், ஆடம்பரத் தவிர்ப்பு மிகவும் முக்கியம் அல்லவா? ஆகவே அந்த சுயமரியாதைத் திருமணத்தை பெரிய விளம்பரமின்றி நடத்தினோம். திருமணத்தைச் சிறப்பாக நடத்த உதவிய மானமிகு ராசகிரி கோ.தங்கராசு, சாமி.நாகராசன், பேராசிரியர்கள் நல்.ராமச்சந்திரன், ராஜசேகரன், புகழேந்தி, சரஸ்வதி, வீகேயென் கண்ணப்பன், கல்வி வள்ளல் பே.தேவசகாயம், வல்லம் திரு.ராமசாமி (உடையார்), மயிலை நா.கிருட்டினன் ஆகியோருக்கு மணவிழாவின்போது எங்களது  நன்றியை தெரிவித்துக் கொண்டோம். ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்துதஞ்சையில் நடைபெற்ற பேரணியில்உரையாற்றும் ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் உத்தரப்பிரதேசம் லக்னோவில் செப்டம்பரில் நடைபெற்ற மாபெரும் பெரியார் மேளா விழா, டில்லியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் கல்வி நிறுவனங்கள் பற்றிய வீடியோ கேசட் வெளியீட்டு விழா 20.11.1995 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பெரியார் மேளா ஒளிப் பேழையை ‘இனமுரசு’ சத்யராஜ் வெளியிட, சிங்கப்பூர் தி.நாகரெத்தினம் பெற்றுக் கொண்டார். அப்போது சத்யராஜ் அவர்கள் உரையாற்றுகையில், “மற்ற மற்ற மேடைகளில் நான் பேசச் செல்வதுண்டு. ஆனால், இதுபோன்ற மேடைகளில் நான் கேட்க வருவேன். இது ஒரு மாலை நேரக் கல்லூரி. பெரியார் மேடையில் நான் ஏறிய பிறகு, எனக்கு இறங்குமுகம் ஏற்பட்டுவிட்டது என்று ‘தினமலர்’ ஏடு எழுதியுள்ளதாக நண்பர்கள் சொன்னார்கள். இதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இல்லை. நான் பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கடந்த 10 ஆண்டுகளில்தான் நான் நாளும் வளர்ச்சி பெற்று வருகிறேன். பகுத்தறிவுச் சிந்தனையிலும், பொருளாதார நிலையிலும் நல்ல நிலையில் உள்ளேன். பெரியார் விழா என எப்பொழுது கூப்பிட்டாலும் கலந்துகொள்வேன். அய்யா வீரமணி அவர்களின் கருத்தை ஏற்று ஈழத் தமிழர்களுக்காக உதவுவேன்’’ என்று தனதுரையில் பல கருத்துகளை எடுத்துரைத்தார். நிறைவாக, எனது உரையில், “அப்போதைய ஈழத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்துப் பேசினோம். திரைப்படத் துறையிலே உள்ளவர்களை, ஈழத் தமிழர்களுக்காக ஒன்று சேர்க்க முயற்சி செய்யுங்கள். செத்து மடிந்து கொண்டிருக்கும் நம் தமிழின மக்களுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் உதவ முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் உதவிட ஏற்பாடு செய்யுங்கள்’’ என வேண்டுகோள் விடுத்தேன். அதனை ஏற்று இனமுரசு சத்யராஜ் அவர்களின் உரையும் இருந்தது மகிழ்ச்சிக்குரியதாகும். விழாவில் கழகப் பொறுப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், பகுத்தறிவுக் கழகத்தினர் கலந்துகொண்டனர். ‘எமரால்டு’ பதிப்பக உரிமையாளர் எம்.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பெரியார் மேளா மற்றும் டில்லியில் நடைபெற்றபெரியார் பிறந்த நாள் விழா ஒளி நாடாக்களை இனமுரசு சத்யராஜ் வெளியிட, அதனைப் பெற்றுக் கொள்ளும் சிங்கப்பூர் தி.நாகரெத்தினம் உடன்ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைதிறப்பு விழா 26.11.1995 அன்று எழுச்சியோடு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், “நாம், அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்குச் சிலை வைப்பது, தீப ஆராதனை காட்டுவதற்காக அல்ல; நமக்கு விழி திறந்த வித்தகர் என்பதற்காக. பெரியார் இல்லையென்றால் நாமெல்லாம் மனிதர்களாக ஆகியிருக்க முடியாது என்பதை உணர்ந்து நன்றியுணர்ச்சியாகத்தான் சிலையை அமைத்துள்ளோம். திராவிடர் தொழிலாளர்கள் தொழிலோடு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் மேலே வரவேண்டும். கம்ப்யூட்டர் துறையில் முன்னேற வேண்டும். நமது தொழிலாளர் கழகத்திற்கும், மற்றவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. விடுமுறையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் நாம். கடமையைக் குறைத்துவிட்டு, உரிமையைக் கேட்கக் கூடியவர்கள் அல்லர், கடமை உணர்வோடு செயல்படக்கூடியவர்கள் நாம்’’ என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறினோம். அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 3 மாதம் சிறையிலிருந்த வீராங்கனை திருமதி என்.எம்.ஆனந்தாய் 13.12.1995 அன்று முடிவெய்தினார் எனச் செய்தி கேட்டு துயருற்றேன். அவரது உடலுக்கு கழகக் கொடி போர்த்தப்பட்டு எவ்வித மூடச் சடங்கும் இன்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் _ மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர்; இறுதி ஊர்வலத்தில் _ தந்தை பெரியார் பேச்சு _ ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது; மறைந்த எம்.என்.ஆனந்தாய் _ பெலாகுப்பம் ஆசிரியரும் _ கழகத் தோழருமான என்.முனுசாமியின் துணைவியார் ஆவார்; தனது குடும்பத்துடன் அவர் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஆனந்தாய் அவர்கள் சட்ட எரிப்புப் போராட்டத்தோடு, ராமன் பட எரிப்புப் போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக, இந்திய வரைபட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், ‘பிராமணாள்’ பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இழப்பு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கோவை மாநகர திராவிடர் கழகத் தலைவர் புலியகுளம் பெரியசாமி 17.12.1995 அன்று சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் மறைவுற்றார் என்கிற செய்தியை அறிந்து வருந்தினேன். வேடசந்தூரில் தந்தை பெரியார் சிலையைதிறந்து வைத்து உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர் சிறிது காலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தன. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், மரணமுற்றார். உடனே மருத்துவமனைக்குச் சென்ற தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் இறுதி மரியாதை செலுத்தினார். அவரது துணைவியாருக்கு ஆறுதல் கூறினார். ஆம்புலன்ஸ் வேன்மூலம் கோவைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மறைந்த தோழர் பெரியசாமி அவர்கள் இயக்கம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கு கொண்டவர். எந்தச் சூழ்நிலையிலும் இயக்கத்தில் உறுதியாக இருந்தவர். திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அண்ணா சாலை என்றும் மாற்றப்பட்டு தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய நிலையிலும், வணிக விளம்பரப் பலகைகளில் பழைய பெயர்களே எழுதப்பட்டுள்ளதைக் கண்டித்து 19.12.1995 அன்று தலைவர்களை அவமதிக்கக் கூடியதும், சட்ட விரோதமானதுமான இந்த நிலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து துண்டறிக்கை வழங்கப்பட்டது. இதில் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி தோழர்கள் என ஏராளமானோர் அணிவகுப்பாகச் சென்று வணிகர்களைச் சந்தித்து எடுத்துக் கூறினர். 31.12.1995 தேதிக்குள் பெயர்களை மாற்றக் கோரியும், அவ்விதம் செய்யாவிட்டால், சட்ட விரோதமாக எழுதி வைக்கப்பட்டுள்ள பெயர்களை ‘தார்’ கொண்டு அழிக்க நேரிடும் என்று துண்டறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பிரச்சாரத்தினை வணிகர்கள் புரிந்துகொண்டனர். பெயர் மாற்றமும் விரைவாக நடைமுறைக்கு வந்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மகத்தான மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் 26.11.1995 அன்று சிறப்பாக நடைபெற்றன. முன்னதாக இளைஞர்களுக்கு இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சி முகாமும் சிறப்பாக கழகத்தாரால் நடைபெற்றிருந்தது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கி பேருந்து நிலையம், ஆத்துமேடு வழியாக விழா மேடையை அடைந்தது. இளைஞர்கள் வழிநெடுக “தீச்சட்டி இங்கே, மாரியாத்தா எங்கே?’’ என்று முழங்கியும், தலையில் தேங்காய் உடைத்தல், எரியும் சூடத்தை விழுங்கியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தனர். இரவு 8:00 மணியளவில் தந்தை பெரியார் சிலையினை தோழர்களின் வாழ்த்தொலி ஒலிக்க திறந்து வைத்து உரையாற்றினேன். சிலை திறப்பையொட்டி நகர் முழுவதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டும், கொடித் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுமிருந்தது. கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அ.தி.மு.க. தொடங்கியதிலிருந்து அந்தக் கட்சியின் மாநில அவைத் தலைவராக இருந்து வந்த ஈ.வெ.அ.வள்ளிமுத்து (90) அவர்கள் 8.12.1995 அன்று கோவில்பட்டியில் காலமானார் என்கிற செய்திகேட்டு மிகுந்த வேதனையுற்றேன். உடல்நலக் குறைவு காரணமாக அவர் 3 மாதங்கள் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு கோவில்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். 1938ஆம் ஆண்டு கோவில்பட்டியில் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டபோது தந்தை பெரியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரை ஈ.வெ.அ.வள்ளிமுத்து அழைத்துவந்தார். பின்னர், திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது கோவில்பட்டி நகர திராவிடர் கழக செயலாளராக வள்ளிமுத்து பல பொறுப்புகளை வகித்தவர். அவரது உடலுக்கு கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினோம். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில்பிறந்து, உயர்நீதிமன்றத்தில் தலைசிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்த தோழர் என்.எம்.மணிவர்மா அவர்கள் --ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் குலசேகரன் அவர்களது மாமனார் 11.12.1995 அன்று மறைவுற்றார் என்கிற செய்தி அறிந்து, பெரிதும் வருந்தினேன். அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்றாலும், அனைத்துக் கட்சியினருடனும் அன்புடனும், பண்புடனும் பழகும் நல்ல பண்பாளர். மாணவப் பருவந்தொட்டு தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இடஒதுக்கீடு பிரச்சினைகள் என்று வரும்போது, நம் இயக்கத்தோடு இணைந்து குரல் கொடுக்கத் தவறாதவர். அவரது மறைவு, அவர் இருந்த காங்கிரசுக்கு மட்டும் இழப்பல்ல; குடும்பத்துக்கு மட்டும் இழப்பல்ல; சமூகநீதிக் கொள்கையாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயருறும் அனைத்துப் பிரிவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டோம். (நினைவுகள் நீளும்...)செய்திகளை பகிர்ந்து கொள்ள

முகப்பு கட்டுரை:மக்கள் விரோத பா.ஜ.க.வின் மனுதர்மத் தேர்தல் அறிக்கை

கவிஞர் கலி.பூங்குன்றன் தமிழ்நாடு 16ஆம் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய பா.ஜ.க.வும் தமிழ்நாட்டுக்காக ஒரு தனித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற மூன்றையும் காலில் போட்டு மிதிக்கும் அறிக்கையாக அது அமைந்தது. மதச்சார்பின்மைக்கு மரண அடி! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக பாரம்பரியம் மற்றும் பண்பாடு எனும் தலைப்பில் (10) மதச் சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. “வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றுகிற உரிமையானது, ஆசை வார்த்தை காட்டி மற்றும் அச்சுறுத்தி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்படும்’’ என்று கூறப்படுகிறது. இதுபற்றி நாம் கூறுவதைவிட இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று ஏற்றுமதி செய்ததாகப் புகழ் பாடும் விவேகானந்தரை விட்டுப் பேச வைத்தால் -_ சரியான பதிலடியாக அமையும். இதோ விவேகானந்தர்: பார்ப்பனர்கள்பற்றி விவேகானந்தரின் கருத்துகள் “ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதைக் கொடு என்கின்ற பழைய ஆங்கிலப் பழமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, என் நண்பர்களே வெவ்வேறு ஜாதியர்களுக்கிடையே சண்டையால் பலன் ஒன்றும் இல்லை. இத்தகைய சண்டைகள் நம்மை மேலும் பலவீனப்படுத்தும். ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு என்று இருந்த தனி உரிமைகள் மற்றும் சலுகைகள் போய்விட்டன. என்றென்றைக்குமாக இந்திய மண்ணிலிருந்து போய்விட்டன. இது பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட நல்ல பலன்களில் ஒன்றாகும் (பார்ப்பனர்களை சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்) ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று இருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம் ஆட்சியானது முழுதும் கெட்டது என்று சொல்ல முடியாது; எதுவுமே முழுதும் கெட்டதாக இருப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்தியாவில் ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது (பார்ப்பனிய கொடுமைகளிலிருந்து) எனவேதான் (வடஇந்திய மக்களில்) அய்ந்தில் ஒரு பங்கு மக்கள் முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மதமாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல. வாளும், நெருப்புமே இத்தனை பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்சநிலையாகும். 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவி விடுவார்கள். நீங்கள் அவர்களது குறைகளைக் களையவில்லையானால், நான் மலபாரில் பார்ர்ததைவிட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப் பறையன் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான ஓர் ஆங்கில கிறிஸ்தவப் பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டால் பின்னர் அவன் உயர் ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறான். அல்லது ஒரு முஸ்லிம் பெயரை தனக்குத்தானே சூட்டிக் கொண்டாலும் செல்ல அனுமதிக்கப்படுகிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர்ஜாதி மலபார் மக்கள் அனைவரும் பயித்தியக்காரர்கள் என்றும் அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி என்றும் தெரியவில்லையா? இத்தகைய உயர்ஜாதி மலபார் மக்கள் திருந்துவது வரை இந்தியாவைச் சேர்ந்த அனைத்து இன மக்களும் இவர்களை (உயர் ஜாதியினரை) கண்டிக்க வேண்டாமா? இத்தகைய வழக்கங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதற்காக இந்த உயர்ஜாதியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும். தங்கள் மதத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பட்டினியால் மடிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சிறுவர்கள் வேறு மதத்திற்குச் சென்றால் உணவு கொடுக்கப்படுகிறது. “சூத்திரன்’’ வேதம் ஓதுவதைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தை ஊற்று, கேட்டதில் ஒரு வரியை ஞாபகத்தில் வைத்து விட்டானென்றால் அவனது நாக்கை வெட்டு என்பன போன்ற கடுமையான வாசகங்கள் உள்ள புத்தகங்கள் உள்ளன. இது மிகவும் மட்டமான காட்டுமிராண்டித்தனம். சந்தேகமே இல்லை. இத்தகைய காரியங்களைச் செய்த பேய்கள் முன்காலங்களில் இருந்திருக்கின்றனர்.’’ “அதிகாரங்களை கெட்ட விஷயங்களில் பயன்படுத்தினால் தகுந்த கேடு விளைகிறது. அதிகாரங்களை நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்திய ரிஷிகள் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை, இவற்றுக்கு டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பிராமணன், ஏனைய மக்களுக்கு பகுத்து வழங்காததால்தான் முஸ்லிம் படையெடுப்பு (வட) இந்தியாவில் வெற்றி அடைந்தது. டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பார்ப்பனன் கருவூலத்தைத் திறந்து பொக்கிஷத்தை (நல்ல கருத்துகள்) ஆரம்பத்திலிருந்தே அனைத்து மக்களுக்கும் வழங்காததால்தான் இந்தியர்களுக்கு தங்கள் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்படவில்லை. எந்த மதத்தினரும் சிறிது படையுடன் இந்தியாவிற்குள் நுழைந்தாலும் அவர்களுக்கெல்லாம் நாம் 1000 வருடங்களாக அடிமைப்பட்டோம். ஏன் என்றால் நம்மிடம் ஒற்றுமை இருக்கவில்லை. வங்காளத்தில் ஒரு பழைய மூடநம்பிக்கை உள்ளது. நல்ல பாம்பு ஒருவனைக் கடித்து பின்னர் அந்தப் பாம்பே தனது விஷத்தை கடிபட்டவனிடமிருந்து திரும்ப உறிஞ்சி எடுத்துவிட்டால் அவன் பிழைத்துக் கொள்வான் என்பதே இந்த நம்பிக்கை. இதேபோன்று பார்ப்பான் இந்து மதத்திற்குள்தான் செலுத்திய விஷத்தை திரும்ப எடுக்க வேண்டும்’’ (திருச்சி மாவட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் 1983இல் வெளியிட்ட  The Man Making Message of Vivekananda for the USE of  College Students என்கிற புத்தகம் பக்கங்கள் 150, 151, 152, 155, 156) விவேகானந்தர் தெரிவித்துள்ள இந்தக் கருத்து _ பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைக்குப் பதிலாக அமையும். ஒன்றை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானது. சமணர்களைச் சைவ மதத்துக்கு மாற்றிய வரலாறு எல்லாம் உண்டே. திருஞானசம்பந்தர் வரலாற்றைப் படித்துப் பார்க்கட்டும். வாதத்தில் தோற்றதாகக் கூறி எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொடூரமாகக் கொன்றவர்கள் யார்?  ‘நீட்’ கட்டாயமாம்! ‘நீட்’ தேர்வு -மருத்துவக் கல்வியில் மட்டுமல்ல +2 படித்துவிட்டு கலைக் கல்லூரிகளில் காலடி வைக்க விரும்பும் முதல் தலைமுறையாகக் கல்லூரியில் நுழைய ஆசைப்படும் ஒடுக்கப்பட்ட, கிராமப்புற பஞ்சைப் பராரிக் குடும்பத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்கும் புதிய வகை நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமாம். சமூகநீதி, இடஒதுக்கீடு காரணமாகத் தலைதூக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மண்டையில் மரண அடி கொடுக்கும் ‘கொலைப்பாதக’ செயல் அல்லவா இது. ‘நீட்’டினால் யாருக்குப் பயன்? 2016ஆம் ஆண்டின் நிலை என்ன? திறந்த போட்டியில் பிற்படுத்தப்பட்டோர் _ 599 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் _ 159 முசுலிம் _ 32 தாழ்த்தப்பட்டோர் _ 23 மலைவாழ் மக்கள் _ 01 உயர்ஜாதி _ 68 ‘நீட் இல்லாதபோது 2016இல் தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் _ 30 ‘நீட்’ வந்த பிறகு _ 5 2016இல் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்கள் பெற்ற இடங்கள் _ 62 ‘நீட்’ வந்த பிறகு _ 1220 (20 மடங்கு அதிகம்) தமிழ் வழியில் படித்தவர்கள் ‘நீட்’டுக்கு முன் 2015 _ 2016இல் _ 510 இடங்கள் 2016 _ 2017இல் _ 537 இடங்கள் ‘நீட்’ வந்த பிறகு 2017 _ 2018இல் _ 52 2018 _ 2019இல் _ 106 நன்றாகப் படித்து 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குக் கூட மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டதால் இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவ _ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரே பிரச்சினைக்காக இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகும் அதை ஆய்வு செய்ய மறுக்கும் ஆணவம் அரசுக்கு உள்ளது. இந்துக் கோயில்களுக்குத் தனி வாரியமாம் இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கி வருகின்றன. அவற்றை ஒரு தனி வாரியத்தின் கீழ்க் கொண்டுவரப்படும் என்கிறது பா.ஜ.க. தேர்தல் அறிக்கை. ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் முன் வைக்கும் ஒன்றை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த ஆசாமியே கோவையில் யானைகள் நடமாட்ட மலைப் பகுதிகளை வளைத்துப் போட்டு, பெரிய கட்டடங்களை உருவாக்கிய மலை விழுங்கிய மகாதேவன் ஆயிற்றே! இவர்களின் கைகளில் கோயில்கள் சென்றால் நிலை என்னவாகும்? இதன் உண்மை நிலை என்ன? இந்துக் கோயில்கள் தனியார் வசம் இருந்தபோது, அவை பார்ப்பனப் பண்ணையமாக ஆக்கப்பட்டன. அவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது. ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’  இதழில் (3.9.1972) இந்து மல்ஹோத்ரா  எழுதிய சிறப்புக் கட்டுரையில் கோயில்களில் நடந்த கொள்ளைகள் பற்றி வண்டி வண்டியாக உள்ளன. தனியார்க் கொள்ளை மயமான இந்துக் கோயில்கள் ஆனதன் அடிப்படையில்தான் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பானகல் அரசர் சென்னை மாநில பிரதமராக இருந்தபோதுதான், கோயில்களை இந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரும் சட்டம் இயற்றப்பட்டது. பின் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் சென்னை மாநில பிரதமராக இருந்தபோது, அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்லர். நாத்திகர்கள் ஆட்சிக்கு வந்ததால்தான் கோயில்கள் அரசின் கீழ்க் கொண்டு செல்லப்பட்டன என்பது அப்பழுக்கற்ற பொய்யும், அபாண்டமும் ஆகும். அரசு சார்பில் சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அளிக்கப்பட்டஆணையம் (1960_62) என்ன சொல்லுகிறது? கோயில்கள் பற்றி சர்.சி.பி.கமிஷன் அரசாங்கத்திடம் அளிக்கப்பட்ட இந்து அற நிலையக் கமிஷனின் அறிக்கை பல திடுக்கிடக்கூடிய சேதிகளைக் கொண்டதாக இருக்கிறது! பூஜித்து வணங்கப்பட வேண்டிய இடங்கள் லஞ்சத்திற்கு _ மோசடிக்குப் பிறப்பிடமாக இருந்து வருவதை இந்து சமூகமும், அரசாங்கமும் எப்படி சகித்துக் கொண்டுள்ளன என்பது நமக்கு அதிசயமாகவே இருக்கிறது! எந்த நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் பரப்புவதற்காக இந்த மடங்களும், கோயில்களும் ஆரம்பத்தில் நிறுவப்பட்டனவோ, அதற்கு இவை பயன்படுவதே இல்லை என்றே தோன்றுகிறது! இந்தப் பணிகளை செம்மையாக நடத்தி மேலும் உயர்த்த வேண்டிய நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களே, பூசை செய்வோரிடமிருந்து காசு வசூலிப்பதிலும், அதைத் தங்கள் சொந்தக் காரியங்களுக்காகச் செலவழிப்பதிலும்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். கமிஷன் கூறும் குற்றச்சாட்டு “தீய வழக்கங்கள் எல்லாம் இந்த அமைப்புகளின் உள்ளே நுழைந்துவிட்டன’’ என்று கமிஷன் குறிப்பிட்டுள்ளது மிகவும் சரியானதேயாகும். அவ்வுயர்ந்த பதவிகள் வகிப்பதற்குரிய எந்தத் தகுதியும் இல்லாத அந்த அயோக்கியர்கள் கையில் இவற்றின் நிர்வாகம் சிக்கிக் கொண்டதே காரணமாகும். பக்தி நெறியின் காவலர்கள் எனக் கருதப்படும் பூசாரிகளும் மடத் தலைவர்களும் தர்மகர்த்தாக்களும் பெரும்பாலும் தற்குறிகளாகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகவுமே இருக்கின்றார்கள். அதில் பல பேர்கள் ஆடம்பரமான சுகபோக வாழ்வு வாழ்வதோடு அறநிலையங்களின் சொத்துகளையும் நிதியையும் கையாடல் செய்பவர்களாகவே இருக்கின்றார்கள். இந்தக் கமிஷன் (டாக்டர் சி.பி.இராமசாமி அய்யர் கமிஷன்) இத்தகைய ஆசாமிகள் மீது பலவித குற்றச்சாட்டுகளை கூறி அதற்கு பல உதாரணங்களையும் கூடக் காட்டியுள்ளது. ஓர் இடத்தில் கோயில் சொத்துகள் மிக மிக குறைந்த விலைக்கு (Nominal Price) விற்கப்பட்டுள்ளன; இன்னொரு இடத்தில் சில பாட்டில் சாராயத்திற்காகச் சில சொத்துகள் விற்கப்பட்டுள்ளன. மற்றொரு கோயில் ஒன்றில் அதன் தலைவராக உள்ள ஓர் ஆசாமி கோயிலிலுள்ள மூல விக்கிரகத்தைவிட நான் பெரியவன் என்று வெளிப்படையாகவே கூறினாராம். சமூகமும் - அரசுமே பொறுப்பு இந்தக் கேவல நிலையில் மத ஸ்தாபனங்கள் உள்ளதற்குச் சமூகம் பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்துவிட முடியாது. சகிக்க முடியாத இத்தகைய தீய வழக்கங்களை சகித்துக் கொண்டதோடு பண்டாக்கள், பூசாரிகள், மதத் தலைவர்கள் ஆகியோர்களது இத்தகு வெட்கப்படத்தக்க காரியங்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தருவதை நிறுத்தாததின் மூலம் உற்சாகப் படுத்தியதாகவே ஆகும். இத்தகைய பொது ஸ்தாபனங்களில் உள்ள கேடுகளை ஒழித்து தக்க நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காததின் மூலம் அது தன் கடமையிலிருந்து நிச்சயமாகத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். மத ஸ்தாபனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமில்லாத ராஜ்யங்களும் உண்டு கட்டுப்படுத்த சட்டமுள்ள ராஜ்யங்களும்கூட அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மேற்பார்வை அதிகாரம் போதாததாகத்தான் இருக்கிறது. பண்டாக்கள், பூசாரிகள், மகந்துக்கள், தர்மகர்த்தாக்கள் இவர்களுக்குள் இருக்கும் முக்கிய தகராறு எல்லாம் கோயிலுக்கு வரும் வருமானம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றியேயாகும். லட்சியம் என்ன? எந்த லட்சியத்திற்காக எந்த ஸ்தாபனம் தோற்றுவிக்கப்பட்டதோ அதுவும், கடவுளும்தான் முக்கிய குறிக்கோளே ஒழிய பூசாரிகளோ, அதன் ஸ்தாபன நிர்வாகிகளைப் பற்றியோ அல்ல. எனவே, அத்தகையோரது உரிமை பற்றிய கேள்வி எழுவதற்கு இடந்தரவே கூடாது. கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது போலவே அரசியல் சட்டம் திருத்தப்பட்டாவது ஸ்தாபன நிதிகளும், சொத்துகளும் தகராறுகளுக்கு அப்பாற்பட்டதாக வைக்கப்பட வேண்டும். (23.9.1962 அன்று வெளிவந்த “சண்டே ஸ்டேண்டர்டு’’ பத்திரிகையின் தலையங்கத்தின் தமிழாக்கம்) மறுபடியும் இந்த நிலைக்குத் தள்ளப்பட வேண்டுமா? அர்ச்சகர்கள் பற்றியும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை பேசுகிறது. அதே நேரத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்களைப் பற்றி மூச்சுவிடவில்லையே ஏன்? காரணம் பா.ஜ.க. என்பது உயர்ஜாதி பார்ப்பன ஜனதா என்பதே உண்மையாகும். பசுவதைத் தடை சட்டம் நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடனேயே பசுவதை தடைச் சட்டத்தை நாடெங்கும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தையும், தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வட மாநிலங்களில் பரவலாக கட்டவிழ்த்துவிட்டன. பசுரக்ஷாதள் என்ற புதிய அமைப்பு உருவாகி நாடெங்கும் குறிப்பாக அரியானா, உ.பி., ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பசுவைக் கடத்தினார்கள் என்று கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யவில்லையா? சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியாகி உள்ளது ஆர்.எஸ்.எஸ். நேரடியாகத் தலையிடாமல், ‘பசுரக்ஷா தள்’ போன்ற இந்துத்துவா அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவர்கள்தான் மாட்டிறைச்சித் தொடர்பான கொலைகளைச் செய்து வருகின்றனர். 2016 முதல் 2019ஆம் ஆண்டுவரை 460 மாட்டிறைச்சிப் படுகொலைகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். “பசுவைக் கொல்லுபவர்களைக் கொன்று போடுவோம்’’ என அறிவித்து, இமாச்சலப் பிரதேசத்தில் நோமன் அக்தரைப் படுகொலை செய்தது; காஷ்மீர்_உதம்பூரில் ஜாஹித் அகமதுவை எரித்துக் கொன்றது; ஜம்மு_காஷ்மீர் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான இன்ஜினீயர் ரஷீதின் முகத்தில் மையையும், ஆயிலையும் பூசியது; மாட்டுக் கறி விருந்தில் கலந்துகொண்ட கன்னட எழுத்தாளரும் நடிகையுமான சேத்னா தீரித்தஹள்ளியைப் பாலியல் பலாத்காரம் செய்து, முகத்தில் ஆசிட் வீசப் போவதாக மிரட்டியது, குஜராத் உனாவில் தாழ்த்தப்பட்ட நபர்களை இறந்த மாட்டின் தோலை உரித்த காரணத்திற்காக இரும்புக் கம்பி, வயர்களால் அடித்து சாலையில் இழுத்துச் சென்றது போன்ற மோசமான செயல்களைச் செய்தவர்கள் தற்போது தமிழக தேர்தல் அறிக்கையில் பசு பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சுமூகச் சமூகச் சூழலைக் குலைத்து வன்முறைக்குக் கத்தியைத் தீட்டும் ஆபத்து இதற்குள் இருக்கிறது. முந்தைய காங்கிரசு ஆட்சியைவிட, மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி இன்னும் அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சியில் பசு மாட்டிறைச்சிதான் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூசாமல் குற்றஞ்சுமத்திய மோடி, தனது ஆட்சியில் எருமை மாட்டிறைச்சி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி, தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதுவொருபுறமிருக்க, பசுவின் பாதுகாவலனாகத் (பா.ஜ.க.)  தன்னை முன்னிறுத்தி வரும் உ.பி. சட்டமன்ற உறுப்பினரான சங்கீத் சோம், அல் துவா  என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளிகளுள் ஒருவர் என்பதும் இன்றும் இணையதளங்களில் உள்ளது. பசு மாடாக இருந்தாலும் சரி, காளை, எருமைக் கறியாக இருந்தாலும் சரி தனி மனிதனின் உரிமைப் பிரச்சினை. அதில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகு தடைகளும் கிடையாது. ஏன், இந்தியாவில்கூட பா.ஜ.க. ஆளும் கோவாவில் தடை கிடையாதே! வடகிழக்கு மாநிலங்களில் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசக்கூட முடியுமா? பசுவைக் கோமாதாவாகக் கும்பிடும் இந்திய நாட்டுப் பசுக்கள் பாலைக் கறக்கின்றனவா? நம்மிடமிருந்து பணத்தைக் கறக்கின்றனவா என்பதுதான் முக்கியக் கேள்வி. அமெரிக்கா 77.26 கிலோ, கனடா 69 கிலோ, நெதர்லாந்து 63.10 கிலோ, தெ.ஆப்பிரிக்கா 62.79 கிலோ, ஸ்பெயின் 61.82 கிலோ, ஜெர்மனி 67.17 கிலோ, டென்மார்க் 55.16 கிலோ, பிரிட்டன் 52.10 கிலோ. ஆனால், கோமாதாவாகிய ஓர் இந்தியப் பசுவின் சராசரி பால் கறவு 2.29 கிலோ. அதிக பால் கறக்கும் அந்நிய நாட்டுப் பசுக்களை அந்நாட்டுக்காரர்கள் கோமாதா குலமாதா என்று போற்றவில்லை. ஆனால், வெறும் 2.29 கிலோ பாலைக் கறக்கும் பசு பாதுகாப்புக்காக சட்டம் போடுகிறார்கள்.செய்திகளை பகிர்ந்து கொள்ள

பெண்ணால் முடியும் : நம்பிக்கையோடு முயற்சி செய்தால் வெற்றி!

கனவுகளைத் துரத்துபவர்கள், வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் அதனை நிஜமாக்க தொடர்ந்து முயற்சித்தால் ஒரு நாள் தங்களது லட்சியத்தினை வென்று, மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் வலம் வருவர். அந்த வகையில் சிறு வயதிலேயே (பால்ய) திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், வாழ்வின் முடிவு என்று அதனை எண்ணாது, மேற்கொண்டு தனது படிப்பை உயர்த்தி, அவர் கண்ட அய்.பி.எஸ். கனவை நனவாக்கி வென்றுள்ளார் _ தமிழகத்தைச் சேர்ந்த அம்பிகா. அவரது வெற்றிப் பயணத்தைப் பார்ப்போம். திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 14 வயதே ஆன அம்பிகாவை திருமணம் செய்து வைத்தனர் _ அவரின் பெற்றோர். அவள் திருமணம் நடந்தபோது வெளி உலகம் அறியாத சிறு பெண். ஒரு நாள் குடியரசு தின காவல்துறை அணிவகுப்பைக் காண்பதற்கு தன் கணவருடன் சென்றார் அம்பிகா. அங்கு நடந்த பேரணியில் சிறப்பு விருந்தினருக்கு அடுத்தபடியாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் (அய்.ஜி.), துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.அய்.ஜி.) ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்றைய இரவு கணவரிடத்தில், “யார் இவர்கள்? எதற்காக இவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது’’ என்று கேட்டார். “அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு காவல் துறையில் வழங்கப்படும் சிறப்பு மரியாதை’’ என்று அம்பிகாவுக்கு விளக்கினார் கணவர். அதைக் கேட்ட நொடி முதல் தானும் அய்.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்கிற ஆசை அம்பிகாவுக்குள் பிறந்தது. அவருக்கு நடந்தது சிறு வயது மணம் என்பதால் 10ஆம் வகுப்பைக் கூட அவர் அப்போது முடித்திருக்கவில்லை. தன் விருப்பத்தை கணவரிடத்தில் தெரிவித்து, படிப்பைத் தொடர அனுமதி கேட்டார். அவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அம்பிகாவுக்கு உறுதுணையாக இருந்தார். கணவர் ஒத்துழைப்போடு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர், தொடர்ந்து பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். பிறகு தன் கனவுப் பணிக்காக, அய்.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்தார். அய்.பி.எஸ். பொதுப் பணித் தேர்வை எழுதியவர், அடுத்தடுத்து இரண்டு முறையும் தோல்வியைத் தழுவினாலும்,  மனம் தளரவில்லை. ஆனால், மூன்றாவது முறையும் தோல்வி அடைந்த நிலையில், மனமுடைந்த அம்பிகாவுக்கு அவர் கணவர் ஆறுதல் கூறி பக்கபலமாய் இருந்து தேற்றினார். கடைசியாக மீண்டும் ஒருமுறை முயற்சி செய்வதாகத் தன் கணவரிடம் அனுமதி கோரியவர், இந்த முறையும் தோல்வி அடைந்தால் ஊருக்குத் திரும்பி அங்கு ஆசிரியர் வேலை செய்து கணவருக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்தார். நான்காவது முறை நம்பிக்கையுடன் தேர்வெழுதியதில் வெற்றி கிடைத்தது. அய்.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார் அம்பிகா. குழந்தைத் திருமணத்தின் சாட்சியாய் இருந்தவர், தன் நிலைக்கு யார் மீதும் குற்றம் சுமத்தாமல், மனம் தளராமல், நம்பிக்கையோடு கடின உழைப்பால், விடா முயற்சியால் தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிக் காட்டினார். நம்பிக்கைப் பெண் அம்பிகா அய்.பி.எஸ்.அவர்களுக்கு மகளிர் சார்பாக ஒரு வெற்றி வணக்கம்! (தகவல் : ச.குமார்)செய்திகளை பகிர்ந்து கொள்ள

முகப்பு கட்டுரை:ஈழத்தமிழர்க்கு பா.ஜ.க.அரசின் பச்சைத் துரோகம்!

மஞ்சை வசந்தன் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்கான அய்.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது இந்திய பா.ஜ.க அரசு. அய்.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்படையில் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கடந்த 2009ஆ-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து குவித்தது இலங்கை அரசு. இந்தப் போரை இலங்கையின் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முன்னின்று நடத்தினாலும், இந்தப் போருக்கு சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் ஆதரவும் பங்களிப்பும் செய்தனர். இந்தப் போருக்கு இந்திய அரசு உதவி புரிந்ததை முழுக்க முழுக்க சோனியா காந்திக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக நடந்ததாக சித்தரித்து, அதன் மூலம் தமிழகத்தில் தமிழ்த் தேசியவாதிகள் இன்றளவும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அப்படியெனில், சீனாவும் பாகிஸ்தானும் அந்தப் போர்க் குற்றத்தில் இலங்கைக்கு உதவி செய்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு தமிழ் தேசிய சித்தாந்தவாதிகள் வாய் திறப்பதில்லை. இலங்கை பூகோள ரீதியாக முக்கியமான இடத்தில் இருப்பதாகவும், அதாவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் சீனாவிற்கு செக் வைக்கவும், சீனாவைப் பொருத்தவரையில் தனது நாட்டை அமெரிக்காவின் இராணுவ முற்றுகையில் இருந்து காத்துக் கொள்வதற்கும் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அவசியம் இருப்பதாகவும் அதற்காகவே இந்தப் படுகொலைகளுக்கு இந்த நாடுகள் துணை போயிருப்பதாகவும் கூறுகின்றனர். பெரும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, சீனா போன்றவற்றிற்கு இப்படி ஓர் அவசியம் இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இந்தப் போரை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக அமைந்துள்ள ஏகபோக முதலாளிகள், தரகு முதலாளிகள் மற்றும் நிதியாதிக்கக் கும்பலின் நலன்கள் தான் இந்தப் போருக்கு இந்த நாடுகள் துணைபோனதன் பிண்ணனியில் அடங்கியுள்ளன. இலங்கை அரசு தமிழ் ஈழ மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தொடுத்து ஓர் இன அழிப்புப் போரை முடித்த பின்னர், இலங்கையை நோக்கிப் பாய்ந்த இந்திய முதலாளிகளின் மூலதனத்தைப் பார்க்கும் போதுதான் அப்போருக்கு இந்தியா ஏன் ஆதரித்தது என்பது புரியவரும்! அதே போல சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் எவ்வளவு மூலதனத்தை இலங்கையில் இட்டு அந்த நாட்டு மக்களைச் சுரண்டினர் என்பதிலிருந்துதான் இந்தப் போரின் உண்மையான நோக்கம் தெரியவரும். இந்தப் போர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டுப் போர்கள், அண்டை நாடுகளின் மீதான தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இத்தகைய மூலதனப் போர்தான். அந்த அடிப்படையிலேயே தற்போது இந்திய அரசு இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகக் கணக்குக் காட்டி விட்டு, மறைமுகமாக இலங்கையை காப்பாற்ற முயற்சித்ததன் பின்னணியைப் பார்க்கலாம். இந்த தீர்மானம் அய்.நா. சபையில் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, இதில் இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தான் நடக்கும் என்று தான் நம்புவதாக இலங்கை வெளியுறவுத்துறை செயலர் உறுதிபட வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், இலங்கை அதிபர் நேரடியாக இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழக கட்சிகள் அனைத்தும் இது குறித்து ஒரே குரலில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்றும், எதிராக வாக்களிக்கவோ புறக்கணித்து வெளிநடப்பு செய்யவோ கூடாது என்றும் குறிப்பாக சுட்டிக் காட்டி கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இந்த தீர்மானத்தின் மீது இருக்கையில், தமிழக பாஜக  அதிமுக கூட்டணிக்கே அய்.நா.-வின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது. இலங்கைக்கும் மனம் நோகக் கூடாது, இங்கு ஓட்டுக்கும் எவ்வித சேதாரமும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நைச்சியமாக வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை மீதான இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே தான் பாஜக அரசு வாக்களித்திருக்கும். ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு தருவதன் பின்னணியில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு நலன்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம். இலங்கையின் துறைமுக மேம்பாட்டு பணிக்கான டெண்டர் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெண்டர் வேண்டுமெனில் இலங்கை அரசுடன் அனுசரித்துப் போக வேண்டியக் கட்டாயம் இந்திய அரசுக்கு முதன்மையாக இருக்கிறது. இந்தக் கார்ப்பரேட் நலனில் இருந்துதான் இலங்கை அரசுடன் முதன்மையாக நெருங்கிச் செல்கிறது மத்திய மோடி அரசு. தமிழர்கள் மீதான மோடியின் வெறுப்பும், ராஜபக்சே மோடியின் இயற்கையான கூட்டாளி பற்றும் வெளிப்பட்டது. 'இலங்கைக்கு காலக்கெடு வழங்கப்படும்' அய்.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மூத்த சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம், பிபிசி தமிழ் வினவியது. இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காணப்படுகின்ற பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு காலக்கெடு வழங்கப்படும் என அவர் கூறுகிறார். இவ்வாறு வழங்கப்படும் கால எல்லைக்குள், இலங்கை அரசாங்கம் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத பட்சத்திலேயே, குறித்த தீர்மானம் பாதுகாப்பு சபை வரை செல்லும் என அவர் குறிப்பிடுகின்றார். இந்த தீர்மானம் பாதுகாப்பு சபைக்கு செல்லுமாக இருந்தால், அதன் பின்னர் இலங்கைக்கு பெரியப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பிரதீபா மஹனாமஹேவா கூறுகின்றார். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது, எதிர்காலத்தில் இலங்கைக்கு இருள் சூழ்ந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார். அதேபோன்று, எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில், நாட்டிற்கு எதிராக பாதுகாப்பு சபையின் ஊடாக பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார். இலங்கை அரசின் நிலைப்பாடு அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்தில் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செவ்வாய்க்கிழமை மாலையில் ஏற்பாடு செய்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். அய்க்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மாறாக, மனித உரிமைகள் பேரவை செயல்பட முடியாது. குறிப்பிட்ட நாட்டை இலக்கு வைத்து அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார். பிரிட்டன், மலாவி, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும், காலனித்துவத்திலிருந்து விடுப்பட்ட நாடுகளை ஆட்சி செய்வதற்காக சிந்திக்கும் எண்ணத்தை நிராகரிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத முடிகிறது என்றும் தினேஷ் குணவர்த்தன கூறினார். இந்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம் தமிழர் தலைவர் கி.வீரமணி கண்டனம்: ”இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக, அங்கு 2009  இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும், முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் அய்.நா. மனித உரிமை அவையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன. இலங்கைக்கு எதிரான தீர்மானம் அய்.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியுள்ளது ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும். ஆனால், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசோ எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்னும் வகையில் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும் துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டது. தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும்!’’ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் தீர்மானத்தை ஆதரிக்காமல், நடுநிலை வகித்த இந்தியஅரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அய்.நா.மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. இது தமிழ் இனத்துக்கு எதிரானது. தமிழகத்தில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்புசெய்து நடித்துள்ளனர். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள். வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என இலங்கைவெளி விவகாரத் துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே 4 நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்தார். தமிழகத்தில் தேர்தல் நடக்காவிட்டால், ஆதரவாகவே ஓட்டு போட்டிருப்பார்கள். மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தும் விதத்தில், இந்திய அரசின் நிலைப்பாடு அமையவில்லை. விசிக தலைவர் திருமாவளவன்: தமிழக மக்களின் உணர்வை மதிக்காமல், இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இலங்கை அரசுக்கு மறைமுகஆதரவை இந்தியா வழங்கியுள்ளது. இந்த துரோகத்துக்கு தமிழக மக்கள், பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சரியான பாடத்தை இந்தத் தேர்தலில் புகட்டுவார்கள். தமிழ், தமிழர், தமிழ்நாடு தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று உதட்டளவில் பேசி, உள்ளுக்குள் வஞ்சகம் வைத்து தமிழர்களை, தமிழ் நாட்டை, தமிழ் மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க மோடி அரசு, ஈழத்தமிழர் பிரச்சினையிலும் பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. 22 நாடுகள் ஆதரித்த நிலையில், அருகில் உள்ள இந்தியநாடு; தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அழிக்கப்பட்ட நிலையில் தமிழர்களை உள்ளாடக்கிய நாடு இந்தியா என்ற பதற்றம், பொறுப்புணர்ச்சி இல்லாமல், கார்ப்பரேட்டுகளின் கண்ணசைவுக்கு ஏற்ப, அவர்களின் நலன் காக்க, தமிழர்களுக்கு தீங்கிழைத்துள்ளது பா.ஜ.க அரசு. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்  இராமதாஸ் இந்தியாவின் பச்சைத் துரோகத்தைக் கண்டிக்காமல் இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு ஆறுதல் தருகிறது என்று கூறியிருப்பது அவர் அரசியல் ஆதாயத்திற்குத் தமிழர் நலத்தைத் தாராளமாய் பலிக்கொடுப்பார் என்பதை வெளிப்படையாக்கியுள்ளது. எனவே, தமிழ் மக்கள் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளைப் படுதோல்வி அடையச் செய்வதன் மூலம், தமிழர்களுக்கு எதிராய் எதிர் காலத்தில் எவரும் செயல்படாத நிலையை உருவாக்க வேண்டும். பா.ஜ.கவின் வீழ்ச்சி தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு அதுவே சரியானத் தண்டனை!செய்திகளை பகிர்ந்து கொள்ள

சிறுகதை : பெண் பார்க்கும் இடம்

தன் மகள் விமலாவுக்கு இந்த ஆண்டே திருமணத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் சித்ராதேவி. எப்போதும் அவர் கையில் அய்ந்து ஜாதகங்களுக்கு குறையாமல் இருக்கும். ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் மட்டும் காட்டி பொருத்தம் பார்க்க மாட்டார். குறைந்தது மூன்று ஜோதிடர்களிடமாவது காட்டி பொருத்தம் பார்ப்பார். ஆனால், அப்போதும் அவர் திருப்தி அடையமாட்டார். சகுனமும் பார்ப்பார். “நீ இப்படியெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா இந்த யுகத்தில் நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் நடக்காது. ஜாதகம் வந்ததா, ஏதாவது ஒரு ஜோதிடரிடம் காட்டினோமா, கல்யாணத்தை முடிச்சோமான்னு இல்லாம இப்படி ஊரில் இருக்கிற அத்தனை ஜோதிடர்களிடமும் காட்டி எதையும் உருப்படாம செஞ்சுக்கிட்டு இருக்கிறே’’ என்று ஒருநாள் சித்ராதேவியைப் பார்த்து அவர் கணவர் செல்வராசு பொரிந்து தள்ளினார். உங்களுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லேண்ணா சும்மாகிடங்க. நான் ஜாதகம் பார்த்து மட்டும் முடிவு செய்ய மாட்டேன். சிவகாமி சன்னதிக்கும் போய் உத்தரவு கேட்டு விட்டுத்தான் எதையும் முடிவு செய்வேன்’’ என்று தீர்க்கமாகக் கூறினார் சித்ராதேவி. “இப்படி ஜோசியம், ஜோசியம்னு அலையிறியே. மாப்பிள்ளையோட குடும்பம், குணம் பற்றி உனக்கு கவலையே இல்லையா?’’ என்று கேட்டார் செல்வராசு. “எனக்கு முதல்ல மூணு ஜோதிடர்களும் ஜாதகம் பொருத்தமா இருக்குன்னு சொல்லணும். அதுக்கப்புறம் என் தெய்வம் சிவகாமசுந்தரி அருள்வாக்கு கொடுக்கணும். அப்புறம்தான் மாப்பிள்ளை குணம், குடும்பமெல்லாம் பார்ப்பேன்’’ என்றார் சித்ராதேவி. “ஏன்தான் இப்படி சாமி பைத்தியமும், ஜாதகப் பைத்தியமும் பிடிச்சி அலையிறியோ தெரியல’’ என்று வெறுப்புடன் சொன்னார் செல்வராசு. அந்த இரண்டிலும் அவருக்கு எந்தவித ஈடுபாடும் கிடையாது. “நல்ல மாப்பிள்ளை அமையாமலா போயிடும்’’ என்று முணுமுணுத்தபடியே அந்த இடத்தை விட்டு அகன்றார் சித்ராதேவி. அம்மாவின் செயல்பாடுகள் எதுவும் விமலாவுக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அம்மாவை மீறி அவளால் எதையும் செய்ய முடியவில்லை. அம்மாவின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசினால் வீண் பிரச்சனைகள் ஏற்படும் என அவள் நினைத்தாள். அதோடு மட்டுமல்லாமல் அம்மா தன்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் அவள் அறிவாள். அவளும் அம்மாவை மிகவும் நேசித்தாள். விமலா ஒரு பொறியியல் பட்டதாரி. வேலைக்காகப் பல இடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டிருந்தாள். போட்டித் தேர்வுகள் எழுதவும் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். நிறையப் படித்தாள். தனது திறமைக்குக் கண்டிப்பாக தனக்கு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவளுக்கு நிறையவே இருந்தது. படிப்பதோடு மட்டுமல்லாமல் காலை, மாலை வேளைகளில் கராத்தே பயிற்சிக்கும் சென்று வந்தாள். தற்காப்புக் கலை மீது அவளுக்கு அளவு கடந்த மோகம் இருந்தது. வேலையில் சேர்ந்த பின்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவள் விரும்பினாள். ஆனால், அம்மாவோ விடவில்லை. ஒரே மகளான அவளுக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். நண்பர்களிடம் சொல்லியும், இணையத்தில் பதிவு செய்தும் மாப்பிள்ளை பார்த்து வந்தார். ஆனாலும் அம்மா ஜாதகம் பார்த்து, சகுனம் பார்த்து முடிவு செய்வதற்குள் நமக்கு விரைவில் திருமண ஏற்பாடு நடக்காது என்ற நம்பிக்கையுடன் தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் விமலா. இவ்வாறாக ஓராண்டு கடந்தது. சித்ராதேவி ஜாதகமும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார். ஆனால், விமலாவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் போட்டித் தேர்வுகளுக்காகப் படிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். அடிக்கடி நூல் நிலையம் சென்றாள். அவளைப் போலவே போட்டித் தேர்வுகளுக்கு நூல்களைப் படிக்க வந்த பண்பரசனுடன் அவளுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் கலந்து படித்து ஒரு மாதம் முன்பாக ஒரு போட்டித் தேர்வையும் எழுதினார்கள். அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது. சில நாள்களில் அவர்களது நட்பு காதலாகவும் மலர்ந்தது. தனது நிலையினை தந்தையிடம் நேரம் பார்த்துத் தெரிவித்தாள் விமலா. அதோடு மட்டுமல்லாமல் பண்பரசனுக்கும் அவனது பெற்றோர்கள் திருமணம் முடிக்க பெண் பார்க்கும் விவரத்தையும் தெரிவித்தார்கள். செல்வராசு மகிழ்ச்சியுடன் பண்பரசன் குடும்பத்தை அணுகினார். பண்பரசன் குடும்பம் பண்பட்ட பகுத்தறிவுக் குடும்பம். ஜாதகத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று சொல்லி விட்டார்கள். பண்பரசன் விரும்புவதால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். இருப்பினும் பண்பரசனின் ஜாதகத்தை மட்டும் செல்வராசு வாங்கிக் கொண்டார். அதை விமலாவின் ஜாதகத்தோடு பொருத்தம் பார்த்தார். அதில் ஒரு சில மாற்றங்களையும் துணிந்து செய்து சித்ராதேவியுடன் கொடுத்தார். சித்ரா தேவியும் அதை வாங்கிக் கொண்டு மூன்று ஜோதிடர்களிடமும் காட்டி பொருத்தம் பார்த்து திருப்தி அடைந்தார். “ஜாகதமெல்லாம் பொருத்தமாயிருக்கு. கல்யாணத்தை முடிச்சுடலாம். பெண் பார்க்க வரச் சொல்லலாம்’’ என்றார் சித்ராதேவி. “சரி, நான் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தகவல் சொல்லிடுறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார் செல்வராசு. “ஆனால்... ’ என்று ஏதோ இழுத்தார் சித்ரா தேவி. செல்வராசுக்கு பக்கென்றது. சித்ராதேவி ஏதோ குழப்பம் விளைவிக்க நினைப்பதாக எண்ணினார். “என்ன ஆனால்...?’’ என்று பதற்றத்துடன் கேட்டார். “பொண்ணு பார்க்க நம்ம வீட்டுக்கு வரவேண்டாம்’’ என்று சொன்ன சித்ராதேவியை இடைமறித்து, “அப்புறம் எங்கே?’’ என்று கேட்டார் செல்வராசு. “சிவகாமி சன்னதிக்குத்தான் பொண்ணு பார்க்க வரணும். அப்பவே நான் சிவகாமிகிட்டே அனுமதி வாங்கிப்பேன்’’ என்றார் சித்ராதேவி. “முதன்முதலா வர்ரவங்களை வீட்டுக்கு வரச் சொல்றதுதானே மரியாதை’’ என்று முணுமுணுத்தார் செல்வராசு. “அதைவிட சிவகாமி சன்னதிதான் சிறப்பு’’ என்று கூறி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சித்ராதேவி. அவரது கூற்றுப்படியே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. திருமணம் நடந்தால் சரி என நினைத்தார் செல்வராசு. பண்பரசன் குடும்பத்தினரும் சித்ராதேவியின் கூற்றுக்கு உடன்பட்டுவிட்டனர். குறித்த நாளில் விமலாவை அழைத்துக் கொண்டு செல்வராசும் சித்ராதேவியும் கோயிலுக்கு வந்து சிவகாமி சன்னதியை அடைந்தனர். பண்பரசன் குடும்பத்தினரின் வரவுக்காகக் காத்திருந்தனர். ஆனால் சரியான நேரத்தில் பண்பரசன் குடும்பத்தினரால் வர இயலவில்லை. அவர்களின் கார் வரும் வழியில் பழுதடைந்து விட்டதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தாலும் வர சற்று தாமதமாகும் எனத் தகவல் தெரிவித்தனர். ஏறக்குறைய அவர்கள் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரமாவது தாமதமாகும் என்பதை சித்ராதேவி உணர்ந்தார். அதுவரை கோயிலைச் சுற்றிவந்து சாமிக்கு அர்ச்சனை செய்துவிட முடிவு செய்தார். பூ, பழம், தேங்காய் எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் வைத்தார். சன்னதிக்குச் சென்று அர்ச்சகரைப் பார்த்தார். அர்ச்சகர் மேற்சட்டை அணியாமல், தனது தொப்பை வயிறு தெரிய, குலுங்கிக் குலுங்கி சிரித்தபடியே யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். “சாமி, அர்ச்சனை செய்யணும்’’ என்று சித்ராதேவி கூறியதை அவர் செவிமடுக்கவே இல்லை. நீண்ட நேரம் பேசி முடித்தபின் கடுகடுத்த முகத்துடன் சித்ராதேவியைப் பார்த்தார். இவர் அழைத்திராவிட்டால் இன்னும் கொஞ்சநேரம்  செல்போனில் பேசிக் கொண்டிருக்கலாமே என்பது அவரது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இந்த அர்ச்சனையை சீக்கிரம் முடித்துவிட்டு மீண்டும் செல்போனில் பேச முடிவு செய்தபடியே தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். சித்ராதேவி விமலாவின் பெயரையும், நட்சத்திரத்தையும் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். ஆனால், அதை அர்ச்சகர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. உள்ளே சென்ற அர்ச்சகர் ஏதோ உளறிவிட்டு உடனே வெளியே வந்து தட்டைக் கொடுத்தார். சித்ராதேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் கொடுத்த தேங்காய் உடைக்கப்படாமல் உள்ளே இருந்த ஒரு மூளியை எடுத்து வைத்திருப்பதை அறிந்தார். “சாமி. நீங்க மந்திரமும் சரியா சொல்லலே. நான் கொடுத்த தேங்காயையும் உடைச்சதா தெரியல. என்ன அக்கிரமம் இது?’’ என்று கடுப்புடன் கேட்டார். அதைக்கேட்ட அர்ச்சகருக்கு ஆத்திரமாக வந்தது. மேலும் சித்ராதேவி தட்டில் பணமும் வைக்கவில்லை. இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த அர்ச்சகர், “என்னடி அக்கிரமம்! கொடுத்ததை வாங்கிட்டுப் போடி’’ என்று கத்தியபடியே சித்ராதேவியை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்தார். இதை நொடிப்பொழுதில் கவனித்து விட்டாள் விமலா. உடனே அவள் தான் கற்ற தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி அர்ச்சகரின் கையைத் தட்டிவிட்டு அவரது அடியின் திசையை மாற்றினாள். அர்ச்சகர் நிலைதடுமாறினார். சித்ராதேவி மீது படவிருந்த அந்த அடி அருகில் இருந்த தூண் மீது பட்டது. அர்ச்சகர் கையைப் பிடித்துக் கொண்டு வலியுடன் அலறியபடியே கீழே விழுந்தார். “உன்னிடம் அடிவாங்க வேறு ஆளைப்பார்’’ என்று ஆவேசத்துடன் கத்தினாள் விமலா. உடன் நிதானத்திற்கு வந்த சித்ராதேவி நடந்ததை உணர்ந்தாள். செல்வராசுவைப் பார்த்து, “மாப்பிள்ளை வீட்டாரிடம் உடனே பேசுங்க’’ என்றார். அப்போது பண்பரசன் குடும்பத்தினரும் அங்கு வந்து சேர்ந்தனர். நடந்த சம்பவத்தை அறிந்தனர். “எங்களுக்கும் கோயிலுக்கு வர விருப்பம் இல்லை. இருந்தாலும் நீங்க விரும்பியதால் இங்கு வந்தோம். கோயில்களைப் பற்றி காந்தியடிகள் சொன்னதையும் நெனைச்சுப் பாருங்க’’ என்றார் பண்பரசனின் தந்தை. “என் திருமணத்திற்கு நானும் விமலாவும் ஜாதி பார்க்கலே. ஆனால், இந்த இடமே ஜாதியை வளர்க்கும் இடம். ஜாதியைப் படைத்ததே நான்தான் என்ற சாமியே சொல்லியிருக்கே. நாமெல்லாம் சூத்திரர்கள், கீழ்ஜாதி என்றுதானே இங்குள்ளவர்கள் சொல்றாங்க. இங்கு வந்தால் நாம் அதையெல்லாம் ஒத்துகிட்டது போலாயிடும் அல்லவா?’’ என்றான் பண்பரசன். “நீ சொல்றது உண்மைதான் தம்பி. எனக்கும் இப்பத்தான் உண்மை விளங்குது தம்பி. இதுக்கெல்லாம் என்னதான் விடிவு?’’ என்று கேட்டார் சித்ராதேவி. “நாம் மனிதர்களைத்தான் மதிக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் முழு வீச்சுடன் செயல்படுத்தப்பட வேண்டும். கோயிலுக்குப் போனால்தான் நல்லது நடக்கும் என்கிற மூடநம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்’’ என்றான் பண்பரசன். “உண்மைதான் தம்பி. ஜாதியத் திமிரால்தான் இந்த ஆளுக்கு என்னையே அடிக்கத் தோன்றியிருக்கு. தம்பி, நீ சொல்றது போல எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆனாத்தான் என்னைப்போல நம்பிக்கை உள்ளவர்களுக்கும் தீர்வு ஏற்படும்’’ என்றார் சித்ராதேவி. “சரி, சரி. இங்கேயே ஏன் பேசிக்கிட்டு இருக்கணும்? வீட்டுக்குப் போகலாம்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினாள் விமலா. “இனிமேல் இந்தப் பக்கம் வரவே கூடாது. மற்றவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்வோம்’’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டே புறப்பட்டார் சித்ராதேவி. அனைவரும் புறப்படத் தயாரானபோது தட்டுத் தடுமாறி எழுந்த அர்ச்சகர், அவர்கள் போவதையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.செய்திகளை பகிர்ந்து கொள்ள